“ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னும் அவனவன் வர்க்க நலன் ஒளிந்து கொண்டிருக்கும்”
– என்றார் ஆசான் கார்ல் மார்க்ஸ்.
(பாஜகவின்) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடு
களைத் தொடர்ந்து அவதானித்து வரும் இவ்வேளையில் மார்க்ஸின் மேற்கண்ட கூற்றை இவ்வாறு மாற்றி அமைத்துக் கூறலாம்.
“இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு அசைவின் பின்பும் அதன் பாஜக ஆதரவு தேர்தல் மோசடி என்பது மறைந்திருக்கும்”- எனக் கூறலாம்.
இந்தியப் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஆண்டாண்டு காலமாக, தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப் படுகின்ற போது முதலில் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். சரியாக 8:00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணத் துவங்கப்படும்.
தேர்தல் நடத்தை விதி 1961 பிரிவு 54 – A யின் படி தபால் ஓட்டுக்கள் ஒவ்வொரு சுற்றிலும் எண்ணி முடித்தவுடன், கரும்பலகையில் வேட்பாளர் வாரியாக வாக்குகள் பதிவிடப்படும். அனைத்துச் சுற்றுக்களும் எண்ணி முடிக்கப்பட்ட பின், மொத்தம் கூட்டப்பட்டு இறுதி முடிவும் வேட்பாளர் வாரியாக கரும்பலகையில் விளம்பரப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்தே முன்பு வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டும் அதன்பின்பு EVM
வாக்குகளும் எண்ணப்படும்.
இறுதியில் EVM -ல் பதிவான வேட்பாளர் வாரியான வாக்குகளும், வேட்பாளர் வாரியான தபால் வாக்குகளும் மொத்தம் கூட்டப்பட்டு இறுதி முடிவினை தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.
கரும்பலகையிலும் முழு விவரங்களும் விளம்பரம் செய்யப்படும். இதுதான் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.
தபால் வாக்கு களிலுங்கூட, வடமாநிலங்களில் பாஜக பல தில்லு முல்லு மோசடிகளை அரங்கேற்றம் செய்கின்றன.
தபால் வாக்குகளை எண்ணுவதில் இனி புதிய நடைமுறை!
அண்மையில் நவம்பர் 2025 இல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்
களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இத்தருணத்தில் கடந்த 25-09-2025-ல் தேர்தல் ஆணையம் தபால் வாக்குகளை எண்ணுவதில் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.
அதாவது, இனி தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட மாட்டாது. இறுதியிலும் எண்ணப்பட மாட்டாது. EVM வாக்குகள் எண்ணிக்கை பல சுற்றுகள் நடந்து முடிந்த பின்னர் கடைசி இரண்டு சுற்றுகள் நிலுவை இருக்கின்ற பொழுது தபால் வாக்குகள் எண்ணப்படுமாம். இதற்கான காரணங்களாக தேர்தல் ஆணையம் வெளியிடும் கருத்துக்கள் அபத்தமானது.
இவர்கள் மேனாள் தேர்தல் ஆணையர்களான டி.என். சேஷனை விட, கோபால்சாமி விட தேர்தல் நடைமுறைகளில் கரைதேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் பாஜகவின் ஊதுகுழலாக இருந்து கொண்டு பாஜக வகுத்துக் கொடுக்கும், பல்வேறு தேர்தல் திருட்டு மோசடிகளுக்கு தொடர்ச்சியாக உடந்தையாக இருந்து பாஜகவின் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொடுப்பதில் ‘தமது பூர்வ ஜென்மப் பலன்’எனக்கருதி ‘கடமை’ ஆற்றுபவர்கள்.
தபால் வாக்குகளை புதிய அறிவிப்பின்படி எண்ணிட முனைந்தால் இன்னும் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளையும், மோசடிகளையும் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்ய துணிந்து விட்டன என்றே உணர முடிகிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூட தபால் வாக்குகளை வழக்கம்போல் முதலில் எண்ணி முடிவை அறிவிக்கும் மரபை ஏன் தற்போதைய தேர்தல் ஆணையம் மாற்ற எண்ணுகிறது எனப் புரிய இயலவில்லை என்பதாக தனது வேதனையைப் பதிவு செய்கிறார்.
பாஜக ஆட்சியில் எத்தனை எத்தனை அலங்கோலங்கள்?
கோடானுகோடி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்தெடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டையே படையல் செய்து போட்டுக் கொண்டிருக்கிறது பாசிசக் காவிக் கூட்டம்.
அந்த ‘உன்னதப் பணி’ தொடர்ந்திட பாஜக ஆட்சி தொடர்ச்சியாக பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனால் தான், ஆட்சிக்கு வந்தபின் தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தேர்வு செய்யும் மூவர் குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி நீக்கினார்கள்.
அதற்குப் பதிலாக பிரதமர் விரும்பும் கேபினட் அமைச்சரை நியமிக்கலாம் எனச் சட்டத் திருத்தம் செய்து கொண்டார்கள். அதன்படி தற்போது அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஆக, குழுவின் பெரும்பான்மை இருவர் பாஜக என்பதால், அவர்கள் விரும்புகின்ற படி ‘காவி’க் கரை படிந்த அதிகாரிகளையே தேர்தல் ஆணையாளர்
களாக நியமித்துக் கொண்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ‘தேர்தல் திருட்டு’ தொடர்பாக ஆதாரபூர்வமாக எண்ணற்ற விடயங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
வாக்குகள் எண்ணுகின்ற பொழுது தேர்தல் அதிகாரி முடிவாகப் பூர்த்தி செய்து கையொப்
பமிடும் 17(20) படிவத்தில் தேர்தலில் பதிவான வாக்குகளும், எண்ணப்பட்ட வாக்குகளும் சமமாக இருக்க வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிகழ்ந்த பொழுது பல்லாயிரக்கணக்கான வாக்குகள், பதிவான வாக்குகளை விடக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்துள்ளன என்பது அம்பலமாகி உள்ளது. அப்படியானால் இதில் தேர்தல் திருட்டு இல்லாமல் இம்மோசடி அரங்கேறியிருக்க வாய்ப்பே இல்லை. இதற்கு கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையத்தால் உருப்படியான பதில் சொல்லவே முடியவில்லை. இவ்வளவு மோசடிக்குப் பிறகும் கூட இழுபறி நிலையில்தான் நிதீஷ்க்குமார், சந்திரபாபு நாயுடு போன்ற துரோகிகளின் ஊன்றுகோல்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது பாசிச பாஜக-வால்.
படிக்க:
♦ ‘ஜனநாயக’த்தை மறுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் !
♦ பாஜகவின் “தேர்தல் பிரிவாக” செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!
CCTV camera footage-ஐ எதிர்க்கட்சியினர் சட்டப்படி பார்வையிடக் கோரினால் தேர்தல் ஆணையம் தர மறுத்தது. உடனே தேர்தல் ஆணையமும் பாஜகவும் சதித் திட்டம் தீட்டி, பாராளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் CCTV camera footage -ஐ 45 நாட்களுக்குள் அழித்து விடலாம் என சட்டத் திருத்தம் செய்து கொண்டது பாசிசக் காவிக் கூட்டம்.
இதே கதிதான் VVPAT இயந்திர மறு எண்ணிக்கையை எதிர்க்கட்சிகள் கோரியபோதும் பதிலாகக் கிடைத்தன. அவற்றையும் அழிக்கத் துணிந்தார்கள்.
பொதுவாக முந்தைய தேர்தல் நடைமுறை மரபு என்பது ஒரு தேர்தல் நடந்து முடிந்து விட்டாலேயே, அடுத்த தேர்தல் வரும் வரை (உதாரணத்திற்கு 2024 நாடாளுமன்றதேர்தல் நடந்து முடிந்தது என்றால் 2029 அடுத்த தேர்தல் வரை) அனைத்து தேர்தல் ஆவணங்களும் இயந்திரங்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும். காரணம் தேர்தலில் ஒழுங்கீனங்கள் நடந்திருந்தாலோ, தோல்யுற்ற வேட்பாளர்கள் வழக்கு மன்றத்தினை நாடினாலோ, தனி நபர்கள் பிரச்சனைகள் எழுப்பினாலோ இந்தத் தேர்தல் ஆவணங்கள், இயந்திரங்கள் அனைத்தும் சாட்சியங்களுக்காக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் அத்தனையையும் சுக்குநூறாக சிதைத்து, குறைந்தபட்ச ஜனநாயக மாண்பையும் குட்டிச்சுவராக்கி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன பாஜகவும் – தேர்தல் ஆணையமும். நீதித்துறையோ பெயருக்கு ‘லேசாக’ வாயைத் திறந்து மூடிக் கொள்கிறது. காரணம் S.C., ECI., ED., IT., CBI., IAS., IPS., Military, CRPF… என அனைத்துமே காவிமயமாக்கப்பட்டுவிட்டன. பார்ப்பனீயமய மாக்கப்பட்டுவிட்டன.
சிறப்புத் தீவிர திருத்த (SIR) வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மோசடிப் பணி!
பீகாரில் SIR எனும் சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி கடந்த ஜூன் மாதம்
துவங்கியது.
பீகாரில் மொத்தம் ஏழு கோடியே 24 லட்சம் வாக்காளர்கள் இருக்கையில் ஒரே மாதத்திற்குள் SIR பணி நிறைவுற்று 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு மாதத்தில் இப்பணி செய்து முடிக்க எவ்வாறு சாத்தியமாயிற்று? என்றெல்லாம் எவரும் கேள்வி எழுப்பக் கூடாது. இப்பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்களோ, தன்னார்வலர்களோ வீடு வீடாகச் சென்று படிவம் கொடுத்து பூர்த்தி செய்து கையொப்பம் பெறுவதற்கு பதிலாக, ஒரு கட்டிடத்தில் பரவலாக நாற்காலி மேசைகள் போடப்பட்டு இவர்களாகவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்காளர் சேர்த்தல்- நீக்கலைச் செய்திட்ட இழி செயல்களை ஊடகங்கள் மூலமாக வீடியோக் காட்சிகளில் கண்டோம். ஆனாலும், “Association of Democratic Reforms” – என்றதொரு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் இம்மோசடிகள் குறித்து வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும் ECI எனும் தேர்தல் ஆணையமோ நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என்றும், நீக்கப்பட்டதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சண்டித்தனமாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
இது பீகாரிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பூகம்பாய் வெடித்தது. அதன் பின்னரே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. உயிருடன் இருப்போர் எல்லாம் நீக்கம் செய்யப்பட்டிருந்த கொடுமை நிகழ்ந்திருந்தது. பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டாதவர்கள் என கருதப்படும் பட்டியலினத்தோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிழைப்பிற்காக வேற்றிடம் சென்றோர் என எண்ணற்றோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். நீக்கம் செய்யப்பட்டோர் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை -6 தேர்தல் ஆணைய விளம்பரம் இவ்வாறு கூறிற்று: “11(பதினொரு) ஆவணங்களில் ஒன்றைத் தர இயலாவிட்டால், தேர்தல் பதிவு அதிகாரி (ERO)
உள்ளூர் மட்டத்தில் விசாரணை செய்து முடிவெடுப்பார்”
என்று தேர்தல் ஆணையம் குறுக்குச்சால் ஓட்டியது.
எப்படியோ உச்சநீதிமன்றம் ஆதார் அட்டையையும் 12-வது ஆவணமாக சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சிக் கூத்தாடியுள்ளது. வானளாவிய அதிகாரம் பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமாரோ, தேர்தல் ஆணையம் ஓர் தனிப்பட்ட அதிகாரங்களைப் பெற்ற சுயேச்சையான நிறுவனம் ஆகும். இதனை யாரும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது என்ற பாணியில் தன்னிச்சையாக சர்வாதிகாரி போல கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளார்.
தேர்தல் திருட்டு தொடர்பாக ராகுல் அம்பலப்படுத்திய பல்வேறு அம்சங்கள் எல்லாம் முற்றிலும் உண்மை என்றாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் தேர்தல் ஆணையமோ பாஜகவோ நீதி துறையோ இல்லை என்பதுதான் எதார்த்தமாக உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி இந்த லட்சணம் என்றால், EVM வாக்கை இயந்திரங்களில் செய்யப்படும் மோசடிகள் தனியே உள்ளன. இப்படிப்பட்டதொரு நிலையில் தான்
வரும் நவம்பருக்குள் அப்பாவி பீகார் மக்கள் தேர்தலை சந்திக்க உள்ளனர். இவற்றுக்கு நிரந்தர தீர்வு காண இந்தி கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகள் யாவும் மக்களை திரட்டி களம் கண்டு போராட தயாரற்ற நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணி துவங்கப்பட இருக்கிறது. பீகாரில் எப்படி அழிச்சாட்டியம் செய்து தேர்தல் ஆணையமும் பாஜகவும் திருட்டுத்தனங்களில் ஈடு படுகின்றனவோ அதே பாணியில் தான் இந்த மாநிலங்களிலும் ‘களமாட’க் காத்திருக்கின்றார்கள்.
சொல்லிக் கொள்ளப்படும் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதுங்கூட முற்றிலும் நிர்வாணமாக நின்று அழிந்து கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிராவை சமைக்க ஒற்றை சர்வாதிகாரத்தை நிலைநாட்ட பாசிசக் காவிக் கூட்டம் ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் அதன் நூற்றாண்டு நிறைவில் ‘முத்திரை பதிக்க’த் தகுந்த
இழி செயல்களில் மூர்க்கமாக இறங்கிவிட்டன.
எனவே இந்தியா கூட்டணி மட்டுமல்ல; அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் இடதுசாரி மற்றும் புரட்சிகர இயக்கங்களும் நிலைமைகளின் வீரியத்தை நன்குணர்ந்து மக்களைத் திரட்டி காவி கூட்டத்தை தரைமட்டமாக்க முனைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்பதனை அனைவரும் உணரத் தலைப்படுவோமாக.
- எழில்மாறன்






