ந்திரனை தொட்டு விட்டோம் என்று மார்தட்ட மோடிக்கு அருகதை உள்ளதா? துளி அளவு கூட அதற்கு தகுதி இல்லை என்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டம் அறைகூவுகிறது.

ராஞ்சியில் உள்ள ஹெவி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற அரசு நிறுவனத்தின் மூலம் – பொதுத்துறை நிறுவனமான இதன் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முதல் செயற்கைக்கோள்  ஏவுவது வரையான முக்கியமான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கப்பட்டு ஆய்வுகளும் நடந்து வருகிறது. இந்த செயற்கைக்கோளுக்காக உதிரி பாகங்களை தயாரிக்க சுமார் 18 மாதங்களாக உழைத்தவர்களுக்கு இதுவரை சம்பளம் தரப்படவில்லை. ராஞ்சியில் உள்ள இந்த தொழிலாளர்கள் பகுதி நேரமாக டிபன் கடை நடத்தி, அல்லது உதிரி வேலைகளுக்கு சென்றே குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். உழைத்ததற்கு சம்பளம் கேட்கும் இவர்களின் தொடர் போராட்டம் ராஞ்சியில் நீடித்தும் நியாயம் கிடைக்காத சூழலில் தான் தற்போது டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகிறது.

மோடியின் உழைக்கும் வர்க்கத்தின் மீதான வெறுப்பு !

அதாவது வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயானை கொண்டாடிக் கொண்டே மறுபுறம் அதற்காக உழைத்தவர்களை இந்த அளவு வஞ்சிக்க என்ன காரணம்? மோடி அரசுக்கு இந்த தொழிலாளர்களின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?

பொதுத்துறை நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அதை மொத்தமாக அம்பானி அதானிகளுக்கு விற்று விட வேண்டும் என திட்டமிடுகிறது கார்ப்பரேட் காவி பாசிச அரசு. கார்ப்பரேட்டின் அடியாளாகவே மோடி செயல்பட்டு வருகிறார் என்பதன் துலக்கமான உதாரணம் தான் இந்த தொழிலாளர்களை வஞ்சிக்கும் கயமைத்தனம்.

இதன் நோக்கம் தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்வதை விடுத்து செட்டில்மெண்ட் வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும். இந்த நிறுவனத்தை தனது எஜமானர்களுக்கு அதாவது, தேசம் கடந்த கார்ப்பரேட் முதலாளிகளாக உலக கோடீஸ்வரர் பட்டியலில் முன்னேறி வரும் அம்பானி அதானிகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான்.

இதையும் படியுங்கள்: சந்திராயன் வெற்றியில் சொந்தம் கொண்டாடும் மோடி! வெட்கமில்லையா மோடி?

இப்போராட்டத்தை சுருக்கி பார்க்கலாமா?

போராடும் ராஞ்சி தொழிலாளர்கள் இதை தமது தனிப்பட்ட சம்பளப் போராட்டமாக மட்டும் சுருக்கி பார்க்காமல், நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தக்க வைப்பதற்கான போராட்டம் என்பதுடனும், நமது பொதுத்துறைகளை விழுங்க வரும் தேசங்கடந்த கார்ப்பரேட் கும்பல்களிடமிருந்து நம் சொத்துக்களை பாதுகாப்பதற்கான போராட்டம் என்ற புரிதலோடும், நாட்டை கார்ப்பரேட்டுக்கு கூறு போட்டு விற்கும் கார்ப்பரேட் – காவி பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டம் என்பதோடும் இணைத்தே பார்க்கப்பட வேண்டும்.

திட்டமிட்டு நிதியை வெட்டி உள்ள மோடி அரசு !

தொழிலாளர்கள் முதல் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் வரை மொத்தமாக 2,800 பேர் பணிபுரியும் ராஞ்சியின் ஆலையில், 1,623 தற்காலிக தொழிலாளர்களும் பணி புரிகின்றனர்.

2014க்கு பின்னர் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனுக்கான நிதி ஒதுக்கீட்டையே நிறுத்தி உள்ளது மோடி கும்பல். தனது எஜமானர்களான தேசம் கடந்த தரகு முதலாளிகளாக வலம் வரும் கார்ப்பரேட் கும்பல்களுக்கு, பல்லாயிரம் கோடிகளை இலவசமாகவே தூக்கி தரும் கேடுகெட்ட மோடி அரசாங்கமானது இரட்டை அளவுகோல்களை கையாண்டு வருகிறது. ஒரு கண்ணிற்கு வெண்ணையும் மறு கண்ணிற்கு சுண்ணாம்பையுமே தடவுகிறது.

ஒருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களை செழித்து வளரச் செய்யும் வகையில் நிதியை தாராளமாக அள்ளி விடுவதோடு, மறுபுறம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தளவாட உற்பத்தி முதல் செயற்கைக்கோள் வரையிலான அனைத்திற்குமான உதிரி பாகங்களை தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டை மட்டும் வெட்டியே வருகிறது.

2017 முதல் இந்த ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக இயக்குனர் பதவிக்கு ஒருவரையும் நியமிக்காமல், இந்நிறுவனத்தை திட்டமிட்டு அழித்து வருகிறது மோடி அரசு.

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் என்ற தனி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், டெக்னீசியன்களின் வயிற்றில் அடித்துள்ள மோடி இஸ்ரோவில் நேரடியாக பணிபுரிந்த – பணி புரிகின்ற விஞ்ஞானிகளுக்கும் இப்படி சம்பள பாக்கி வைத்துள்ளாரா? அல்லது, தனது தலைமையின் கீழ் பணிபுரியும் அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அதில் உள்ள தலைமை பொறுப்பில் உள்ள செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு என்றாவது சம்பளம் தராமல் அலைக்கழித்துள்ளாரா? தொழிலாளிகள் என்றால் அந்த அளவுக்கு இழப்பமாக போய்விட்டதா?

ஒரு கார்ப்பரேட் முதலாளியிடம் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் மீதான வெறுப்பு துளிகூட குறையாமல் பாசிஸ்ட் மோடியிடமும் வெளிப்படுவதை கணக்கில் எடுக்க வேண்டும். இதற்கு பொருத்தமாக ஜார்க்கண்டின் ராஞ்சி தொழிலாளர்களோடு நம் நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரும் கரம் கோர்த்து மோடி அரசுடனான கணக்கையும் தீர்க்க வேண்டும்!

இளமாறன்

https://scroll.in/article/1056368/no-salaries-in-last-18-months-workers-who-made-parts-for-isro-satellite-launches-stage-protest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here