பாகம் 2

அரிசி நுகரும் மக்களுக்கோ, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கோ என்ன பலன்?

மோடி அரசு அறிவித்தவாறு ஏற்றுமதி தடைக்குப்பின்னும் அரிசியின் விலை குறையவில்லை, உயர்ந்து கொண்டே போகிறது, குருணை அரிசிக்குத் தடையும் பிற ஏற்றுமதி அனைத்துக்கும் 20 சதம் வரியும் போட்டதற்குப்பின்னரும் உள்நாட்டில் அரிசி விலை இந்த ஆண்டு ஜுலையில் மட்டுமே 3 சதவீதம் ஏறியுள்ளது.

இந்தியாவில் அரிசி வர்த்தகம் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. அரசாங்கம்தான் நேரடி நெல் கொள்முதல் செய்கிறதே என தமிழக மக்கள் நினைக்கலாம். உண்மையில், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அரசு கொள்முதல் செய்கிறது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசிடம் விற்றுவிட்டதால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அதே நேரம், சர்வதேச சந்தை விலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் குறைந்த பட்ச ஆதரவு விலை பெரிய அளவில் மாற்றம் அடையப்போவதுமில்லை. தமிழகத்திலோ, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய காலத்தில் திறப்பதற்கும், அறுவடைக்காலத்திற்கு முன்பே மூடாமலிருப்பதற்கும் தொடர்ந்து போராட வேண்டிய நிலைதான் உள்ளது. அரசின் நேரடி கொள்முதலுக்கு இணையாக தனியார் வணிகர்களும் இங்கு கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால், பீகார் போன்ற மாநிலங்களில் அரசின் கொள்முதல் கைவிடப்பட்டு அந்த விவசாயிகள் தனியார் வர்த்தக சூதாடிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு சின்னாபின்னமாகி பல ஆண்டுகள் ஆகிறது. பஞ்சாப் விவசாயி ஒரு குவிண்டால் நெல்லை 1900 –க்க விற்கும் போது பீகார் விவசாயி வெறும் 900 ரூபாய்க்கு விற்க வேண்டிய அவலம் ஏற்கெனவே இருந்து வருகிறது. அதனால், சர்வ தேச சந்தையில் எவ்வளவு அதிக விலைக்கு அரிசி விற்றாலும் இடைத்தரகர்களான வியாபாரிகள்தான் கொள்ளை லாபம் அடைவார்களே தவிர, விவசாயிகளுக்கு ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் நிலை.

பாசுமதி சாகுபடியில் 97% பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி-யில்தான் நடக்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் வர்த்தகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அரசின் தலையீடு துளியளவும் இல்லை.

ஏற்றுமதி தடையால் ஒரு வேளை, வர்த்தகர்கள் பாதிப்பை சந்தித்தாலும், அவர்களுக்கு உள்நாட்டில் அதிகரிக்கும் விலை உயர்வு பாதிப்பை ஓரளவு சரி செய்து விடும். ஆனால், அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கப்போவது ஏதுமில்லை.

ஏற்றுமதி தடை தவிர்க்க முடியாததா?

2015 ஆம் ஆண்டிலிருந்து மத்திய தொகுப்பில் அரசு வைத்திருக்கும் கையிருப்பு அளவு மாற்றப்படவில்லை. இந்திய மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்குவதற்குத் தேவையான அளவை விட எப்போதும் கையிருப்பின் அளவு 3 மடங்கு அதிகமாகவே உள்ளது. கோவிட் போன்ற தொற்று நோய் காலங்களாக இருந்தாலும், எதிர் வரும் எல்-நினோ பாதிப்பு போன்றவை வந்தாலும் கூட தாக்குப்பிடிக்கும் அளவில்தான் அந்த கையிருப்பு இருந்து வருகிறது என்பதை உணவு தானியம் மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ்க்கண்ட அட்டவணை தெளிவுபடுத்துகிறது.

மத்திய தொகுப்பில் உள்ள மாத வாரியான அரிசி இருப்பு. (லட்சம் டன்கள்)

குறிப்பு: அரைக்கப்படாத நெல்லிலிருந்து கிடைக்க வாய்ப்புள்ள அரிசியும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அரிசி கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இதே காலத்தில் இருந்த இருப்புகளை விட தோராயமாக 70  லட்சம் டன் குறைவாக இருப்பதற்குக் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் கொள்முதல் குறைந்ததேயாகும். விளைச்சலின் அளவில் அரசால் கொள்முதல் செய்யப்படும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2020-21 இல் விளைச்சல் அளவில் 48% கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அது 2021-22 இல் 44% ஆகவும், 2022-23 இல் 42% ஆகவும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால், இதே காலத்தில் அரிசி உற்பத்தி குறையவில்லை. மாறாக, 1243.7 லட்சம் டன்னிலிருந்து 1355.4 லட்சம் டன்னாக அதிகரித்து வந்துள்ளது. உண்மையில், அரசின் கொள்முதல் 2020-21 இல் 602 லட்சம் டன்னிலிருந்து 2022-23 இல் 570 லட்சம் டன்னாக குறைந்தது. இந்த காலகட்டத்தில் உற்பத்தி 9% அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் அதற்கு இணையாக அதிகரிக்காமல் 5% சரிந்தது. இதன் மூலம் அரசு திட்டமிட்டே கொள்முதல் செய்யும் பொருப்பை தட்டிக்கழித்து விவசாயிகளை தனியார் இடைத்தரகர்களிடம் தள்ளி விடுவதுடன் பொதுமக்களை உணவுப்பாதுகாப்பிலிருந்து கைகழுவி விடுகிறது என்றே பார்க்க வேண்டும்.

வருகிற மழைக்கால (காரிஃப்) அறுவடைக்குப் பிறகு அரசாங்கம் எவ்வளவு கொள்முதல் செய்கிறது என்பதைப் பொறுத்தே, மத்தியக் தொகுப்பில் பற்றாக்குறை வருமா என்பதைக்கூற முடியும். எல்-நினோ விளைவுகளிலிருந்து மக்களையும் அவர்களின் உணவு பெறும் உரிமையையும் பாதுகாப்பதுதான் அரசின் நோக்கமென்றால் வரும் அறுவடைக்காலத்தில் விளைச்சலின் அதிக பட்ச சதவீதத்தை கொள்முதல் செய்ய அரசு முன்வருகிறதா என பார்ப்போம்.

அரிசி கையிருப்பு தேவையைப்போல் 3 மடங்கு இருக்கும் நிலையிலும், அடுத்த அறுவடை காலத்தில் கூடுதலாக கொள்முதல் செய்வதன் மூலம் மத்திய தொகுப்பின் கையிருப்பை அதிகப்படுத்த வாய்ப்புள்ள நிலையிலும் இந்தத் தடையை தவிர்த்திருக்க முடியாததா என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில், மோடி அரசு இது பற்றியெல்லாம் சிந்தித்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. விலை ஏறினால் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் சிந்திக்காமல் எடுத்த முடிவாகவோ அல்லது எதிர் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு தான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்று காட்டுவதற்காகவோ இந்த ஏற்றுமதித் தடையை விதித்திருக்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மறுபுறம், மக்களின் உணவுப்பாதுகாப்பை விட எத்தனால் தயாரிக்கும் இலக்கு, எத்தனால் மற்றும் வர்த்தக இடைத்தரகர்களின் நலன் போன்றவற்றுடன் அரசு வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்ற புதிய தாராளவாத–மறுகாலனிய சிந்தனைப் போக்குக்கும் அது மக்களிடையே தோற்றுவிக்கும் எதிர் கருத்தைக் கண்டு தேர்தல் நேரத்தில் வந்துள்ள அச்சம் போன்றவையும் காரணங்களாக இருக்கிறது.

மொத்தத்தில் அரசி ஏற்றுமதித் தடையால்
ஆதாயமடைந்தது யார்?

உண்மையில், தனியார் வர்த்தகர்களும், எத்தனால் உற்பத்தி செய்யும் செல்வாக்குமிக்க லாபிகளும்தான் ஏற்றுமதி தடையின் முக்கியப் பயனாளிகளாக இருக்கின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் அளவை இந்திய அரசு குறைத்து விட்டது. இதனால் தனியார் வர்த்தகர்கள் குறைந்த விலை கொடுத்து விவசாயிகளை சுரண்டிக் கொழுக்கின்றனர். அரசின் கொள்முதல் இல்லாத போது தனியார் வர்த்தகர்களுக்கு விவசாயமும், விவசாயிகளும்  போட்டியில்லாத வேட்டைக்காடுதான்.

மறுபுறம், செப்டம்பர் 2022 ல் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்ட நிலையிலும், சர்வதேச சந்தைகளில் விலைகள் அதிகமாக இருந்ததால் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து (முந்தைய ஆண்டை விட 35% அதிகம்), தடைக்கு முன்பே வர்த்தகர்கள் கொழுத்த லாபத்தை அடைந்து விட்டனர்.

அதே போல், எத்தனால் (உயிரி எரிபொருள்) தயாரிக்கும் முதலாளிகளும் தங்கள் உற்பத்தி இலக்கை எட்டி லாபத்தை அனுபவித்ததுடன், மேலே பார்த்தவாறு சலுகை விலையில் இந்திய உணவுக்கழகத்திடம் அரிசியை வாங்கி மறுவிற்பனை செய்து கேடு கெட்ட வகையில் கொழுத்த லாபம் பார்த்து விட்டனர்.

அரிசி ஏற்றுமதித் தடை சாதித்ததென்ன?

சிறிதளவு இடைத்தரகு வணிகர்களும், எத்தனால் உற்பத்தி செய்யும் முதலாளிகளும் லாபமடைந்ததற்கு மேல் இந்தத் தடையால் எந்த ஆதாயத்தையும் யாரும் பெறவில்லை. அதே நேரத்தில், சர்வதேச அளவில் உணவுப்பாதுகாப்பு பற்றிய ஒரு பதட்டத்தையும், உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியாவின் மீதான நம்பகத் தன்மையை கெடுத்துக்கொண்டதும்தான் நடந்துள்ளது. மறுபுறம் இது இந்தியாவுக்கு அடுத்து அரசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான வியட்நாம், பாகிஸ்தான் நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

முட்டாள் தனமும் கோமாளித்தனமும் கொண்ட பாசிஸ்டுகளின் நடவடிக்கை இப்படித்தான் முடியும் என்பது நாட்டு மக்கள் பெற வேண்டிய அனுபவப்பாடமாகும். தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விட்டால், நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது மட்டுமல்ல, சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கெடுத்து ஏற்றுமதி வாய்ப்புகளையும் அழித்து விடுவார்கள். உலகைப்பட்டினி போட்ட பழி சொல்லையும் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாட்டு மக்கள் விழிப்படைந்து கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளுக்கு முடிவு கட்டவும், மாற்றாக ஜனநாயக கூட்டரசு ஒன்றை நோக்கி பயணப்படவும் வேண்டிய காலம் இது என்பதை உணர்த்தும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

முற்றும்.

  • மணிகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here