மாஸ் நேற்று தொடுத்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து தொடர்ந்து சிறிய ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டது, இந்த முறை அவர்கள் இஸ்ரேலுக்குள் புகுந்து இஸ்ரேலில் எல்லைக்குள் இருந்து ராணுவ டேங்குகளை அழித்திருக்கிறார்கள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

நேற்று மதியத்தில் இருந்து ஊடகங்கள் முன்பாக அமர்ந்திருக்கிறேன். ஓரிரு தொலைக்காட்சிகளின் செய்திகளில் நேற்றையத் தாக்குதல்கள் குறித்து எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.

250 இல்லை 500 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இன்று அதிகாலை சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “போர் ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்தார். அவரது அறிக்கைக்காகக் காத்திருந்தது போல் அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷ் சுனக், இந்தியப் பிரதமர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்களின் அறிக்கைகள் வேக வேகமாக வருகிறது, அனைத்து அறிக்கைகளுமே ஒரே பாணியில் உள்ளது. “ நாங்கள் இஸ்ரேலுடன் இருக்கிறோம்” என்கிற ஒற்றை வரி செய்தி தான் அது.

இவற்றை முன்வைத்துக் கொண்டு சில விசயங்களைப் பார்க்கலாம்:

ஹமாஸ் தரப்பு தாக்குதல் நடத்தினால் அது தீவிரவாத தாக்குதல் – Terroirst Attack. ஆனால் இதே தாக்குதலை வருடம் முழுவதும் இஸ்ரேல் நடத்தினால் அதற்குப் பெயர் ரெய்டூ, Israel raids on Palestinian territory. உலகின் மிகப்பெரிய சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து இந்த வார்த்தை விளையாட்டையே செய்து வருகின்றன. இப்படி வார்த்தை விளையாட்டுகளை வைத்து மக்களை மூளைச் சலவை செய்திடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

2008க்கு பின்னர் மட்டும் நாள் ஒரு பொழுதுமாக இஸ்ரேல் நடத்துகின்ற கோரத்தாக்குதல்களில் 1,50,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதில் 33,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவைகள் குறித்து இந்த சர்வதேச ஊடகங்களோ, இன்று பரபரப்பாக அறிக்கைகள் விடும் பல தேசங்களின் தலைவர்களோ என்றாவது பேசியிருக்கிறார்களா. 33,000 குழந்தைகள் கொல்லப்படும் போது துடிக்காத உங்கள் நெஞ்சம், உங்கள் அறிக்கைகள் விடாத உங்கள் வார்த்தைகள் வெற்று குப்பைகள் தானே. (1947 முதல் எத்தனை பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது என்பதை இணையத்தில் தேடி கீழே கமெண்டாக பதிவு செய்யுங்கள்)

30 ஆண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையை வாசித்து வருபவன் என்கிற வகையில், சர்வதேச ஊடகங்கள் பயன்படுத்தும் வார்த்தை விளையாட்டு தான் முதலில் நினைவிற்கு வருகிறது. இஸ்ரேல் தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நிலத்தை விழுங்கி வருகிறது என்பது பொது அறிவு போல் அனைவருக்கும் தெரியும்.

ஒரு நாடு மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு குறுகிய நிலமாக அதாவது 7 கிமீ அகலம் கொண்ட நிலமாகச் சுருக்கப்பட்டால் மக்கள் கைகளில் வெள்ளைப்பூக்களுடன் நிற்க வேண்டும் என்கிறார்கள் வலதுசாரிகள். ஆனால் தன் நிலத்தின் விடுதலைக்காகப் போராடுகிறவன் அப்படி பூக்களுடன் நின்றால் வரலாறு அவனை மன்னிக்காது.

இதையும் படியுங்கள்:

இஸ்ரேல் தனது பணம், தொழில்நுட்பம், மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கண்மூடித்தனமாக ஆதரவுடன் உலகத்தலைவர்களை விலைக்கு வாங்க துடிக்கிறது. அரபுலகத்தின் தலைமைகளை தன்வசம் கொண்டு வர எல்லாம் முஸ்தீபுகளையும் செய்து வருகிறது. அமீரகம் தொடங்கி சவுதி வரை அனைவரின் பாதைகளிலும் பெரும் மாற்றங்களை செய்துள்ளது.

பாலஸ்தீன மக்களின் இந்த பதிலடி என்பது இஸ்ரேலுக்கானது மட்டும் அல்ல அவர்களின் பிரச்சனையில் தோல்வியை தழுவிய சர்வதேச தலையீடுகளின் மீது தான். உலகின் செவிட்டு காதுகள் நோக்கி இந்த ஓசையை அனுப்பவே இந்த பெரும் சத்தம் என்பதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இத்துடன் ஒரு வரைபடத்தை இணைத்துள்ளேன். எப்படியிருந்த பாலஸ்தீனம் இன்றைக்கு எப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை பாருங்கள், பிறகு உங்கள் ஞாயத்தை பேசுங்கள். எஞ்சியிருக்கும் பச்சை நிறத்தில் தான் பாலஸ்தீனியர்கள் வசிக்கிறார்கள், வெள்ளை என்பது ஆக்கிரமிக்கப்பட்ட நிலமும் ஆக்கிரமிப்பின் நிறமும் தானே.

(முகநூல்பதிவு)

நன்றி

அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here