மீபத்தில் தமிழ் இந்து பத்திரிகையில் எங்கே போய்க்கொண்டிருக்கிறது இளைய தலைமுறை என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்து எழுதியிருந்த பேராசிரியர் இருதயராஜ்  ஊடகவியல்  துறை, இளைய தலைமுறையினரின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை கீழ்க்கண்டவாறு தொகுத்து கூறியிருந்தார்.

“இளைஞர்களில் பெரும்பாலானோர் திசை தெரியாத பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கின்றி இருப்பதுதான் இலக்கு என்று அவர்கள் நினைக்கின்றனர்.. வீட்டிலும், வீட்டிற்கு வெளியிலும் சரியான வழிகாட்டிகளும் முன்மாதிரிகளும் அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாகதான் பார்க்கின்றனர். “எனக்கு எல்லாம் தெரியும்”, “யாரும் எங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை” என்றே பிடிவாதமாக இருக்கின்றனர். எதையுமே மேலோட்டமாக பார்க்கும் மெத்தனப் போக்கில் மிதக்கின்றனர். இன்றைய தலைமுறையை கவனச்சிதறல் என்ற பள்ளத்தாக்கில் சமூக வலைதளங்கள் தள்ளி இருக்கின்றன.

அவர்களால் வன்முறையை வன்முறையாக பார்க்க முடியவில்லை. அநீதியை அநீதி என்று சொல்ல முடிவதில்லை. நடந்தாலும் பறப்பது போன்ற கற்பனையில் மிதக்கிறார்கள். எனவேதான் தங்களைப் பற்றிய சுய அறிவும் இல்லாமல், சமூகத்தைப் பற்றிய அறிவும் இல்லாமல் வளர்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆண்ட்ராய்டு மொபைலில் திரையில் பார்க்கின்ற, படிக்கின்ற, துணுக்கு செய்திகள் மட்டும் தான். சக நண்பர்களுடனான நட்பிலும், உறவினர்களுடனான உறவிலும் ஆழமில்லை.

தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அனைத்தையும் அனுமதிக்கின்ற கட்டுப்பாடற்ற போக்குதான் இருள் நிறைந்த உலகத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவநம்பிக்கை பரவி கிடைக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை”. இதுதான் இன்றைய இளைய தலைமுறையினரின் எதார்த்த நிலைமை..

ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறுபவர்களை பூமர்கள் என்று பகடி செய்வதும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மிதப்பில் எந்த ஒரு பொருளை பற்றி பத்து வரிக்கு மேல் எழுதவோ, அல்லது ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக பேசவோ தெரியாத தற்குறிகளை தான் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள விரும்பாத அளவிற்கு அவர்களின் மூளை ஹேக் செய்யப்பட்டுள்ளது.  இளைய தலைமுறை திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இளைஞர்கள் மட்டும் இன்றி, ‘பொழுதைக் கழிப்பதற்கு வேறு வழி தெரியாத முதியவர்களும்’ தவறாமல் பார்க்கின்ற பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில்,, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று கேட்கிறார்.

மேலும், ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன். படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின்படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும்.. எனக்காக எவ்வளவோ முயற்சிகளை எங்க அம்மா எடுத்தாங்க, ஆனால் என்னால் முடியவில்லை இப்பொழுது அவங்க விட்டுட்டாங்க. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் ஜோவிகா கூறினார்.

இந்த தத்துவத்தை கேட்டவுடன் சமூக வலைதளங்களில் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை இறங்கி அடிக்க துவங்கி விட்டது. ஆமாம் படிப்பதால் ஒன்றும் பிரயோசனமில்லை. திறமையால் முன்னேறி விடலாம் என்று தற்குறித்தனமாக சாமியாட துவங்கிவிட்டனர்.

இங்குதான் உண்மையான பிரச்சனை துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கிய பட்டப்படிப்புகளையும், அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளையும், பொறியியல் மட்டுமின்றி மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு என்பது ஒழித்துக் கட்டப்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை எந்த படிப்பு படித்திருந்தாலும், கிடைக்கின்ற வேலையை செய்து அதாவது மளிகை கடைகளில், ஷாப்பிங் மால்களில், துணிக் கடைகளில், தங்க நகை விற்பனை கூடங்களில்,, ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் என்று ஏதாவது ஒரு துறையில் இறங்கி வேலை பார்க்கின்றனர். குறைந்தபட்ச சம்பளம் 8000 முதல் அதிகபட்ச சம்பளம் 15000 ரூபாய் வரை பெறுவதையே வேறு வழியின்றி சகித்துக் கொண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.

அரசுத் துறைகளில் வேலை காலி என்று அறிவிக்கப்படும் போதும் குரூப் தேர்வுகள் காவலர் தேர்வு என்று உத்தரவாதமான வேலைக்கு டியூசன் சென்டர்களில் கோச்சிங் சென்டர்களில் பல ஆயிரம் செலவு செய்து எப்படியாவது அரசு வேலையை வாங்கி விட வேண்டும் என்று குறிப்பிட்ட சதவீதத்தினர் அலைபாய்ந்து கொண்டுள்ளனர்.

பிறருக்கு வேலை செய்து கொடுப்பதே சேவை துறை என்று ஏகாதிபத்திய முதலாளித்துவம் வரையறுத்துள்ள வேலை பற்றிய கொடுமையான வரையறுப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இருள் சூழ்ந்த வாழ்க்கையை புரிந்து கொள்ள விடாமல் இளைஞர்களை இளைய தலைமுறையை காயடித்துக் கொண்டிருக்கிறது ஆண்ட்ராய்டு எனும் காட்சி போதை உலகம்.

இதையும் படியுங்கள்:

சினிமா நடிகர்களின் திரைப்படத்திற்கு  முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது துவங்கி, திரைப்படங்களின் ட்ரெய்லர் வெளியீடு பாடல் வெளியீடு காட்சிகளுக்கு பல நூறு ரூபாய் செலவு செய்து குவிக்கின்றனர். எந்த சமூகப் பொறுப்பையும் முன்வைக்காத 10 பைசாவிற்கு பொறாத திரைப்படங்கள் 300 கோடியில் இருந்து 1000 கோடி வரை லாபம் ஈட்டுகிறது.

தென்னிந்தியாவில் வெளியாகும் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. வட இந்தியாவில் திரைப்படங்கள் ஓடவில்லை என்று புலம்புகின்றார் பிரபல திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்.. ஆனால் எந்த ஆய்வுமின்றி வட இந்தியர்கள் முட்டாள்கள் என்ற கருத்து தமிழர்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு மோசமாக போய்க் கொண்டிருப்பதை அறிய விரும்பாத இளைய தலைமுறை பிக்பாஸ் ஜோவிகாவிற்கு காவடி தூக்குகின்றனர். இன்னொரு புறம் டிடிஎஃப் வாசன் போன்ற பரபரப்பு, சாகசம் நிகழ்த்துபவர்களை கதாநாயகர்களாக உயர்த்திப் பிடிக்கின்ற சாகச மனோபாவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.

  • பா.மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here