கொடூரமான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. 2010-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (UAPA) இன் கீழ் 16 பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் அதில் தற்போது 7 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் (முழு பட்டியலுக்கு கீழே பார்க்கவும்).

பல்வேறு பிரச்சினைகளை விசாரித்து அவைகளின் பின்னாலுள்ள உண்மைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஊபா (UAPA) சட்டத்தைப் பிரயோகிப்பதன்மூலம் அவர்களை “பயங்கரவாதிகள்” என்று முத்திரைக்குத்தி அவர்களின் சட்டப்பூர்வமான பணியை ஒரு குற்றச்செயலாக மாற்றுவதே தற்போதைய ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட ஊபா சட்டமானது குற்றம்சாட்டப்பட்டவர்களை எந்தவிதமான விசாரணையின்றியும், ஜாமீன் வழங்காமலும் சிறையிலடைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ஒருவர் மீது வழக்குப் பதியப்பட்டால் அவர் பல பத்தாண்டுகளாக வழக்கு நடத்தித்தான் ஜாமீனோ அல்லது விடுதலையே பெறமுடியும். இதுவரை ஊபா-விலிருந்து இரண்டு பத்திரிக்கையாளர்கள் வெளிவந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை அளிக்கப்பட்டும் மற்றொருவர் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுமிருக்கின்றனர். கடந்த பத்தாண்டில் தேசபக்தி, தேசிய பாதுகாப்பு, மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் போன்றவையும் ஊபா என்ற கொடூரச்சட்டத்தின் பற்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. நியூஸ்க்ளிக் (NewsClick) செய்தி இணையதளத்தின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டதன் சமீபத்திய நிகழ்வு இதை நிரூபிக்கிறது.

புர்காயஸ்தா மற்றும் நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத்தின் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்திக்கு எதிரான எஃப்ஐஆர், IPC பிரிவுகள் 153A (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 120B (குற்றச் சதி) ஆகியவற்றுடன் பிரிவு 13 (சட்டவிரோத நடவடிக்கைகள்), 16 (பயங்கரவாதச் செயல்), 17 (பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுதல்), 18 (சதி) மற்றும் 22 (C) (நிறுவனங்கள், அறக்கட்டளை குற்றங்கள்) ஆகியவற்றை ஊபா-வில் இணைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகிறது.  இதைத்தவிர சட்ட அமலாக்க முகமைகளின் மற்றொரு விருப்பமான ஊடகங்களுக்கு எதிரான பிரிவு 153A என்பதும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவே நேஹா தீட்சித் மற்றும் பரஞ்சோய் குஹா தாகுர்தா உட்பட பல பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் மீது குற்றம் சுமத்த கடந்த சில ஆண்டுகளாக ஊபா கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் பொதுப்பாதுகாப்புச் சட்டம், சத்தீஸ்கரில் ஜன் சுரக்ஷா ஆதினியம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற பிற கொடூரமான சட்டங்களின் மூலமும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோக பிரிவின்படியும் பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ் (Free Speech Collective) என்ற அமைப்பு வெளியிட்ட “சிறைக்கம்பிகளுக்குப் பின்னே” (Behind Bars) அறிக்கையில் இந்தியாவில் 2010-20 ஆண்டுகளில் 154 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டும், விசாரணைக்குள்ளாக்கப்பட்டும் உள்ளனர். தங்கள் வேலையைச் செய்ததற்காக விளக்கம் கோரியும் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் 2020-இல் நடந்தவை. ஒன்பது வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நாடு கடத்தல், கைது, விசாரணைகளை எதிர்கொண்டனர், இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர்கள்தான் ஒரு ஜனநாயக நாட்டில் செய்தி மற்றும் தகவல்களின் தூதர்களாகக் கருதப்படுபவர்கள். அடக்குமுறையின் மூலம் அவர்களை மௌனமாக்குவது அவர்களின் அறிக்கைகள் மற்றும் முக்கியமான பிரச்சினைகளில் அவர்களின் கருத்துகளையும் மௌனமாக்குவதாகும்.  இது அச்சமின்றி தகவல்களை அறியும் குடிமக்களின் ஜனநாயக உரிமையையும் பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:

ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ் அமைப்பின் புள்ளிவிவரப்படி (2010 முதல் இந்த நாள்வரை),
ஊபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள்: 16
ஊபா சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள்: 7
ஜாமீனில் உள்ள பத்திரிக்கையாளர்கள்: 8
வழக்குபதியப்பட்டு ஆனால் கைது செய்யப்படாத பத்திரிக்கையாளர்கள்: 1
விடுதலை செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள்: 1
விடுக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள்: 1

கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள்:

 1. ப்ரபீர் புர்காயஸ்தா, நியூஸ் கிளிக் பத்திரிக்கை ஆசிரியர்.

சிறையிலுள்ள பத்திரிக்கையாளர்கள்:

 1. ஆசிப் சுல்தான், காஷ்மீர் நேர்ரெட்டர் பத்திரிகை நிருபர் – 27.08.2018; ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர்.
 2. பஹத் ஷா, தி காஷ்மீர்வாலா பத்திரிக்கையாசிரியர் – 04.02.2022, புல்வாமா, ஜம்மு & காஷ்மீர்.
 3. சஜ்ஜத் குல், தி காஷ்மீர்வாலா பயிற்சி நிருபர் – 05.01.2022, பந்திபோரா மாவட்டம், ஜம்மு & காஷ்மீர்.
 4. ரூபேஷ் குமார், தனி பத்திரிக்கையாளர் – 17.07.2022, ராம்கர் மாவட்டம், ஜார்கண்ட்.
 5. இர்பான் மெஹ்ராஜ், வாண்டே மாத இதழ் ஆசிரியர் – 21.03.2023, ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர்.

வீட்டுக்காவலில் உள்ள பத்திரிக்கையாளர்கள்:

 1. கவுதம் நவ்லாகா, எழுத்தாளர் மற்றும் செய்தி ஆலோசகர், நியூஸ் கிளிக்.

ஜாமீனில் உள்ள பத்திரிக்கையாளர்கள்:

 1. சீமா ஆசாத், தஸ்தக் பத்திரிக்கையாசிரியர், ப்ரயாக்ராஜ், உ.பி.
 2. விஷ்வா விஜய், தஸ்தக் பத்திரிக்கையாசிரியர், ப்ரயாக்ராஜ், உ.பி.
 3. K K ஷாஹினா, அவுட்லுக்
 4. சித்திக் காப்பான், ஆழிமுகம் பத்திரிக்கையாளர், டெல்லி
 5. பவோஜெல் சாஒபா, தி பிரான்டியர் மணிப்பூர் ஆசிரியர், இம்பால்
 6. திரென் சடோக்பாம், தி பிரான்டியர் மணிப்பூர் ஆசிரியர், இம்பால்
 7. ஷ்யாம் மீரா சிங், தனி பத்திரிக்கையாளர், புதுடெல்லி
 8. மனன் தர், புகைப்பட பத்திரிக்கையாளர், ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர்.

வழக்குபதியப்பட்டு கைது செய்யப்படாத பத்திரிக்கையாளர்கள்:

 1. மஸ்ரத் சஹ்ரா, புகைப்பட பத்திரிக்கையாளர், ஸ்ரீநகர்

விடுதலை செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்:

 1. சந்தோஷ் யாதவ், பஸ்தர் சட்டிஸ்கர் (ஐந்து வருடம் கழித்து).

விடுக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்:

 1. கம்ரான் யூசுப், புல்வாமா (ஐந்து வருடம் கழித்து).

ஆங்கில மூலம்: TheWire

தமிழில்: செந்தழல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here