மேல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் கயவாளிகள்!

பெரியாரின் பேரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய காட்டுமிராண்டி கும்பலைக் கண்டும் காணாமல் ரகசியமாக ஆதரிப்பது இந்த லும்பன் கும்பல் வளர்வதற்கு ஒரு அடித்தளமாகவும் இருக்கிறது.

வெட்டப்பட்ட இளைஞன்
வெட்டப்பட்ட இளைஞன்

மானாமதுரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலப்பிடாவூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் ஐயாசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த மூன்று சாதிவெறி இளைஞர்கள் ஐயாசாமியின் கையை வெட்டியிருக்கிறார்கள்.

எங்களுக்கு முன்னாலேயே புல்லட்டில் போவாயா? கை இருந்தால்தானே ஓட்டுவாய் என்று சொல்லி வெட்டியது மட்டுமல்லாமல் அவர் வீட்டையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

ஐயாசாமி குடும்பம் சற்று வசதியான குடும்பமாக இருப்பதை சீரணிக்க முடியாத இந்த சாதி வெறியர்கள் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த புல்லட் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் சாதி வெறி அடங்காத இந்த கயவாளிகள் இந்த கொடிய செயலை அரங்கேற்றிய இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் தங்கள் உழைப்பால் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டால் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய ஆதிக்க சாதியினர் பொறுத்துக் கொள்வதே இல்லை. தங்களை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்வதற்கு வக்கற்ற சோம்பேறி திருட்டுக் கும்பலாக சீரழிந்து போன இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குவதன் மூலமாகத் தங்களை உயர்சாதியாக நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.

புல்லட்டும் ஒரு மோட்டார் சைக்கிள் தான். ஆனால் அது கூட தாழ்த்தப்பட்ட மக்கள் ஓட்டினால் அது தங்களுடைய கௌரவத்திற்கு இழுக்கு என்று நினைக்கின்ற அளவுக்கு அடிமுட்டாள்களாகவும் சாதிஆதிக்க வெறியர்களாகவும் சீரழிந்து போன கும்பல் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது.

உழைத்து வாழ்வதற்கு வக்கற்ற இந்த லும்பன் கும்பல் மிகப்பெரும் சமூகத் தீமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இவர்களை அரசு மிகக்கடுமையாக தண்டிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள், பெரியாரின் பேரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய காட்டுமிராண்டி கும்பலைக் கண்டும் காணாமல் ரகசியமாக ஆதரிப்பது இந்த லும்பன் கும்பல் வளர்வதற்கு ஒரு அடித்தளமாகவும் இருக்கிறது

படிக்க:

🔰  வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!

🔰  வறுமையிலும் சாதி ரீதியாக பிளவு பட்டுள்ள இந்தியா!

இந்தக் குற்றங்களுக்கு சட்டரீதியான தண்டனை என்பது மட்டுமல்லாமல் ஆங்காங்கே இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கொடிய குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டால் காவல் நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்து கால் முறிவது வழக்கம். ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கின்ற ஆதிக்க சாதி வெறி இளைஞர்கள் மூன்று பேரும் கழிப்பறையில் வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொள்வார்கள்? அல்லது போலீஸ் கைத்தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்லுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

காவல்துறையில் புரையோடிப்போய் இருக்கிற சாதிவெறி, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு தடையாகவே இருக்கும். எனவே நேர்மையாக செயல்படுபவர்களைக் கண்டறிந்து இந்த வழக்கை விசாரித்து தண்டிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற சாதி ஆதிக்கக் குற்றம் புரிவோர் வாக்குரிமை ரத்து செய்யப்பட வேண்டும். குடும்ப அட்டையில் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்பட வேண்டும். அரசு சலுகைகள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும். இப்படி கடுமையான தண்டனை முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்காவது இத்தகைய கொடிய குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

பள்ளி கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பலரும் சாதி வெறியைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அரசுத் துறையில் பணிபுரியும் பலரும்கூட சாதிச் சங்கங்களோடு நெருக்கமாக இருப்பதும் சாதி வெறிக்கு துணை போவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவற்றை அரசு தீவிரமாகக் கண்காணித்து அத்தகையோரைப்
பணிநீக்கம் செய்து தண்டிக்க வேண்டும்.

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்.
மக்கள் அதிகாரம்
14-02-2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here