ஏழை vs பணக்காரன் என்று இந்தியா பிளவுப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இப்பொழுது நாம் இந்தப் பிளவை பற்றி பேச போகவில்லை. இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கிடையில் வறுமையில் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை இந்தக் கட்டுரையில் பரிசீலிக்கலாம்.
தெய்வக் குழந்தை மோடி, இந்திய மக்களுக்கு நல்ல நாளை (அட்சே தின் ) வந்தே தீர வேண்டும் என்று மிகமிக தீவிரமாக உலகம் முழுக்க சுற்றிச்சூழன்று கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவில் 23.4 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
74 வயதான, ஏழைத்தாயின் மகனான மோடி, தனது உணவு செலவிற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இந்திய மக்களுக்கு உண்ண போதிய உணவு இல்லாததால் 15-19 வயதுடைய பெண்களில் 54 – 59 % பேர் ரத்த சோகையில் உள்ளனர். அதே வயதை ஒத்த ஆண்களில் 29-31% பேர் ரத்த சோகையில் உள்ளனர். இந்த தகவல்கள், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு(NFHS-4, NFHS -5) அறிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இரத்த சோகையிலும் சத்துக் குறைபாட்டுடனும் இருப்பதற்கு பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பே காரணமாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் உணவு பற்றாக்குறை உள்ள நிலையில் ஆண்களுக்கு – ஆண் பிள்ளைகளுக்கு உணவின் பெரும்பகுதி கொடுக்கப்படுகிறது; அல்லது இரும்புச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்றவை உள்ள உணவுகள் ஆண் இனத்திற்கே ஒதுக்கப்படுகின்றன. அவர்களுக்குப் போக மீதி இருந்தால் தான் பெண்கள் உண்ண முடியும் என்ற நிலை இந்திய சமுதாயத்தில் நிலவுகிறது. இந்த கொடிய பாகுபாட்டை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்றாலும் கூட பழமையில் ஊறிப்போன, பின்தங்கிய நிலையில் உள்ள வடமாநிலங்களில் இதுதான் நிலைமையாக உள்ளது.
படிக்க: தொடரும் உணவு பணவீக்கம்! மக்களை தாக்கும் பட்டினி அலை!
ரத்த சோகையில் உள்ள பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்து விடுகின்றனர். குடும்ப வறுமையுடன் சேர்த்து, இதுவும் கல்வி கற்பதில் ஆண்களை விட பெண்கள் பின்தங்கி இருப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு உடைய பெண்கள் படிப்பதிலும் கணிதத்திலும் மிகவும் சிரமப்படுபவர்களாக இருக்கின்றனர். இது ஊட்டச்சத்துக்கும் அறிவாற்றலுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
வறுமையின் கொடுமையை அனுபவிப்பதில் இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நமக்கு தெளிவாக தெரிவிக்கின்றன.
அடுத்து, சாதிகளுக்கு இடையில் இந்த வறுமை எவ்வளவு வேறுபட்டு உள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
National institute of Nutrition என்ற நிறுவனம் 2017 இல் வெளியிட்டுள்ள ஆவனத்தில் SC குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 39 சதவீதமும், ST குடும்ப குழந்தைகளில் 34 சதவீதமும், BC குடும்ப குழந்தைகளில் 27 சதவீதமும், முற்பட்ட சாதி (FC) குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் 26 சதவீதமும் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளன.
படிக்க:
அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகளை விட பட்டியலின, பழங்குடியின மக்கள் மத்தியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். SC, ST சாதி மக்கள் மற்ற சாதி மக்களை விட அதிகமாக வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர் என்பதே இதற்குக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் வறுமையின் கோரப் பிடியும் கூட சாதிக்கு சாதி எப்படி வேறுபடுகிறது? என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பட்டியலின பழங்குடியின மக்கள் ஆதிக்க சாதி மக்களை விட வறுமையின் கோரப்பிடியில் மிக அதிகமாக சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதற்கு ஆளும் வர்க்கங்களின் சுரண்டல், ஒடுக்குமுறையுடன் இணைந்த பார்ப்பன பயங்கரவாதம் தான் காரணமாக உள்ளது.
இப்படிப்பட்ட ஆளும் வர்க்கங்களின் சுரண்டலையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
— தங்கசாமி
செய்தி ஆதாரம்: Thewire