
பீகாரின் ஜெகன்னாபாத்தை சேர்ந்த ஷர்ஜில் இமாம் மும்பை ஐஐடியில் படித்து மென்பொருள் பொறியாளராக பணியாற்றி, பிறகு டெல்லியின் புகழ்வாய்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பெறுவதற்கான ஆய்வு மாணவராக இருந்தார். 2019 இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடந்த போராட்டங்களில் ஊக்கமாக கலந்து கொண்டு பல இடங்களில் உரை நிகழ்த்தினார்.
உ.பி யின் அலிகார் பல்கலைக் கழகத்தில் இவர் உரையாற்றியதின் மூலம் வன்முறையைத் தூண்டினார் எனக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார். இமாம் கைதாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பிணைகூட கிடைக்காமல் சிறையில் வாடுகிறார். அதன்பிறகு தேச துரோகம், குழுக்களிடையே பகைமையை வளர்த்தல், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தல், கலவரத்தைத் தூண்ட சதி செய்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வெவ்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்ட பிறகு அடுத்த எட்டு மாதங்கள் அருணாச்சலப் பிரதேசம், அசாம், உ.பி சிறைகளில் அடைக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். ஜனவரி 28, 2020 – ல் கைது செய்யப்பட்ட அவர் தரப்பில் மூன்றாவது முறையாக வாதங்கள் முழுமையாக முன்வைக்கப் பட்டன. அவரது வழக்கறிஞர் தலீம் முஸ்தபா குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளை மறித்து அமரவே அழைப்பு விடுத்தாரே அன்றி எங்கேயும் வன்முறை செய்ய ஒருபோதும் அவர் விரும்பியதில்லை என்று நீதிமன்றத்தில் விளக்கிக் கூறினார்.
ஜூன் 2021- ல் தன்னை சந்தித்த செய்தியாளரிடம் பேசிய இமாம், “நான் ஒரு முஸ்லிம் மதவெறியனாக, படிப்பறிவில்லாத ஒரு கும்பலை வழிநடத்திச் செல்வதாக சித்தரிக்கின்றனர். ஆனால் எனது உரையை கேட்டவர்கள், அவை வன்முறையற்ற வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்ததை புரிந்து கொள்ள முடியும்” என்றார்.
இந்த வழக்கில் நவம்பர் 2021- ல் அவருக்கு பிணை வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், அவர் யாரையும் ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுக்கவில்லை. மேலும் அவரது உரையால் வன்முறை எதுவும் தூண்டப்படவில்லை என குறிப்பிட்டது. இந்த ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் வேறு பல வழக்குகள் இவர் மீது நிலவையில் உள்ளன. அதில் முக்கியமானது டெல்லி கலவர சதி வழக்காகும்.
உண்மையில் டெல்லி கலவரத்தை தூண்டியது யார்?
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பிப்ரவரி 2020 – ல் இந்துத்துவ கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வகுப்புவாத வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்தான். உண்மையில் பாஜகவின் ஐடி விங்கின் தலைவரான அமித் மாளவியா வெட்டி ஒட்டி பரப்பிய வீடியோவும், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா போன்றோரின் வன்முறையைத் தூண்டும் வகையிலான வெறுப்புப் பேச்சும்தான் இந்துமத வெறியர்களை தூண்டிவிட்டு முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வழி வகுத்தது.
படிக்க:
🔰 ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!
🔰 பரோலில் குர்மீத் ராம் ரஹிம் சிறையில் உமர் காலித்! ஓர் ஒப்பீடு!
ஆனால் இவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக இந்தக் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் இமாம், உமர் காலித் உள்ளிட்ட 16 பேர் முஸ்லீம்கள். பிப்ரவரி 2020-ல் அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லிக்கு வந்தபோது கலவரத்தைத் தூண்டும் சதித்திட்டத்தை இமாம் தீட்டியதாக வழக்கு புனையப்பட்டது.
ஆனால் அவர் ஜனவரியிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மேலும் டிரம்ப் வருகையே பிப்ரவரி 11 அன்றுதான் உறுதி செய்யப்பட்டது. எனவே இவ்வழக்கில் அவருக்கும், சக குற்றவாளிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக எந்த சாட்சியத்தையும் காவல்துறையால் சமர்ப்பிக்க முடியவில்லை. இருப்பினும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில், கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை ஆறு பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர்.
இமாமோடு கைதான மூன்று மாணவர்களுக்கு ஜூன் 2021- ல் பிணை வழங்கிய போது நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் அனுப் ஜெயராம் ஆகியோர், “டெல்லி காவல்துறை மிகைப்படுத்தும் வகையில் அதீத அனுமானங்களுடன் வழக்கை ஜோடிக்க முடியாது. அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. அரசுக்கு எதிராக பரவலான எதிர்ப்பு எழும் போது ஆவேசமான பேச்சுக்கள், சாலை மறியல்கள் போன்றவை சாதாரண நிகழ்வுகள் தான். இதை பயங்கரவாத செயல் என்றோ, சதி நடவடிக்கை என்றோ கூறி ஊபாவின் கீழ் எப்படி குற்றம் சாட்ட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினர்.
ஆனால் இந்த நீதிபதிகளில் ஒருவரான சித்தார்த் மிருதுள், நீதிபதி ராஜேஷ் பட்னாகர் அமர்வில் அக்டோபர் 2022 – ல் உமர் காலித்தின் பிணை மனுவை நிராகரித்தார். அதே வழக்கு, அதே உண்மைகள் மற்றும் சூழல்கள்தான். ஆனால் வேறு வகையான தீர்ப்பு என்பதுதான் விசித்திரமானது. ஒரே வழக்கில் ஆளுக்கொரு நீதி, நியாயம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இமாமின் பிணை வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அனைத்து நீதிமன்றங்களும் பிணை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் இருக்கும் நிலையிலும் இவரது மனு மீது முடிவெடுக்காமல் இருப்பது பாசிச பாஜக அரசுக்கு நீதிமன்றங்கள் துணை போவதையே துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது.
“பிணை கோரும் வழக்குகளை இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும். ஏனெனில் வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை சட்டப்பிரிவு 21 வழங்குகிறது” என்று உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதை உச்சநீதி மன்றமே மதிப்பதில்லை என்பதுதான் கொடுமை. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்கு புனையப்பட்ட அவரது பிணை மனு மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 2022 ல் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை எத்தனை முறைதான் ஒத்தி வைப்பீர்கள்?
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகிய போதும் நீதித்துறை அமர்வுகள் மாற்றம், நீதிபதிகளின் இடமாற்றம், வழக்கில் உத்தரவு ஏதும் வழங்காமல் நீதிபதிகள் வெளியேறுவது, அரசு தரப்பில் வழக்கை தள்ளி வைக்க கோருவது போன்ற பல்வேறு சாக்கு போக்குகளால் இந்த வழக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றம் “ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு” எனப் பலமுறை கூறியுள்ளது. UAPA மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) போன்ற சிறப்பு சட்டங்களிலும் கூட மேற்கூறிய விதி பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டி உள்ளது. எனினும் இந்த விதிகளை சிறிதும் மதிக்காமல் உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதை உச்ச நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது.
இமாமின் வழக்கறிஞர் இப்ராஹிம், “இதுவரை 7 நீதிமன்ற அமர்வுகள் மாறி உள்ளது. 70 முறை விசாரணைகள் நடந்துள்ளன. மூன்று நீதிபதிகள் இந்த வழக்கிலிருந்து விலகி உள்ளனர். மூன்று முறை முழுமையாக விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. முழுமையான விவாதம் முடிந்த பிறகு இரண்டு முறை நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். நாங்கள் ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து மீண்டும் வாதங்களை வைக்க வேண்டியுள்ளது. இந்தக் கொடூரமான கால தாமதம் யாருக்கும் நடக்கக்கூடாது” எனக் கொந்தளிக்கிறார்.
இமாம் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டார். அவரது அமைதிக்குப் பின்னால் அவரது வயதான தாய் குறித்த ஆழ்ந்த கவலை உள்ளது. மேலும் அவரது ஆய்வுப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையும் உள்ளது. “நான் சிறையில் வாழக் கற்றுக் கொண்டேன். ஆனாலும் இங்கு இருக்க விரும்பவில்லை. இங்கு இருப்பது மிகவும் கடினமானது. எனவே என்னை வெளியில் எடுங்கள்” என்கிறார் இமாம்.
இந்த வழக்கில் இமாமோடு கைதான உமர் காலித் என்ற ஆய்வு மாணவர் உள்ளிட்ட இன்னும் 12 பேர் பிணை கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைபட்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு எதிராக காவல்துறையால் உருவாக்கப்பட்ட பொய் சாட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்கிறது பாசிச மோடி அரசு. அதற்கு நீதிமன்றமும் உடந்தையாக உள்ளது. அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக் கொள்வது?
- குரு