மோடியின் ஆட்சியில், நம் நாட்டில் இந்து மத வெறியர்கள் சிறுபான்மையினர் மீதும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் மனிதத்தன்மையற்ற வகையில் பல்வேறு தாக்குதல்களை தொகுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில்குளித்துவிட்டு கரை ஏறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வம்புக்கு இழுத்து, அவர்களை வெறிகொண்டு தாக்கி, நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளது ஆதிக்க சாதிவெறி கும்பல். இவர்களை காட்டுமிராண்டிகள் என்று தானே கண்டிக்கிறோம்!

யார் காட்டுமிராண்டிகள்?

காடும் மலையும் ஆறும் குளங்களும் அனைத்துக்கும் பொதுவானது என்று மேம்பட்ட புரிதலில் வாழ்ந்து வருபவர்கள்தான் பழங்குடியினர். எந்த காலத்திலும் “காட்டுமிராண்டிகள்” இப்படி செய்வதில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை காட்டுமிராண்டித்தனம் என்று நாம் கண்டிப்பது பொருத்தமாகாது.

தற்போது ஜியோனிச இனவெறி பிடித்த இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவ மனைகளை தாக்குவதாக பகிரங்கமாக அறிவித்து குண்டு போடுகிறது. சாலையில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறி வைத்து சிதறடிக்கப்படுகின்றன.

சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும் காசா முனையில் வெறும் 35 மருத்துவமனைகளே உள்ளன. அவற்றில் 16 மட்டுமே தற்போது பெயரளவிற்கு இயங்கி வருகிறது. பிறவற்றில் மருத்துவ உபகரணங்களை இயக்குவதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் போதுமான மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மருத்துவமனைகளுக்கு மின்னுற்பத்தி செய்ய தேவைப்படும் எரிபொருளை இஸ்ரேல் தடுத்துள்ளது. ஜெனரேட்டர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன.

தோட்டாக்கள் மட்டுமா கொல்லும்?

130 நோயாளிகளை இன்குபேட்டரில் வைத்து உயிரை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த மருத்துவர்கள், மின்சாரம் இல்லாமல் தமது கண் முன்னே கொல்லப்படுவதை பார்த்து விக்கித்து நிற்கின்றனர். சுமார் 50,000 கர்ப்பிணிகளும் தற்போது தான் பிறந்துள்ள 183 பிஞ்சு குழந்தைகளையும் சிகிச்சை தந்து பாதுகாப்பது எப்படி என புரியாமல் நிற்கின்றனர்.

நம் ஊரில் பலருக்கும் சுகர், பிளட் பிரஷர், இருதய அடைப்பு, கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. நம் ஊரைப் போலவே பாலஸ்தீனத்தின் காசா முனையிலும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் நோயாளிகள் நாட்பட்ட நோய்களுக்கு மருந்து உட்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்து, மருந்துகள் தர முடியாதபடி மருத்துவமனைகள் மூடப்பட்டு வருகின்றன. மின்சாரமும் இல்லை; மருந்து மாத்திரைகளும் இல்லை. மனிதனை கொல்வதற்கு தோட்டாக்கள் தான் அவசியமா?

நெறியற்றதுதான் மதவெறியும் இனவெறியும்!

போர்க்களத்திற்கு கூட விதிமுறைகளை வகுத்து வாழ்ந்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள். இது குறித்து புரிந்து கொள்ள வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படித்துப் பார்க்கலாம். அதில் “கோல் சொல்லி” என்று ஒருவரை நியமித்து, அவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு சண்டையை நடத்த வேண்டும், நிறுத்தவும் வேண்டும் என மலைவாழ் மக்கள் செயல்பட்ட மரபை புரிந்து கொள்ளலாம். இன்றைய பாசிஸ்ட்டுகளிடம் இப்படி எதையாவது எதிர்பார்க்க முடிகிறதா?

இதையும் படியுங்கள்:

♦ குஜராத் படுகொலை: 11 கொலை குற்றவாளிகள் விடுதலை! பில்கிஸ் பானோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

♦ மனிதன் வாயில் மலத்தை திணிப்பதும், குடிநீரில் மலத்தை கலப்பதும் தீண்டாமை வன்கொடுமையின் உச்ச கட்டங்கள்!

நாம் காட்டுமிராண்டிகள் என்று ஒற்றைச் சொல்லால் முத்திரை குத்தப்படும் மக்கள் எப்படி வாழ்கின்றனர்? இதை நக்கீரன் எழுதியுள்ள “காடோடி” நூலில் இருந்து ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும். இந்தோனேசியாவில் போர்னியோ காட்டில் உள்ள பழங்குடிகள் விலங்குகள் இணை சேரும் போதும், தமது வயிற்றில் கருவை சுமந்து திரியும் போதும் அவற்றை வேட்டையாடுவதில்லை. தம்மைப் போலவே இந்த விலங்குகளுக்கும் காடு சொந்தம். எந்த உயிரினங்களும் நம்மோடு இணைந்து வாழும் உரிமை பெற்றவை. அவற்றை பூண்டோடு அழிக்கும் செயலை ஏற்க முடியாது. என்று வேட்டைக்கும் நெறிமுறைகளை வகுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

குஜராத்தில் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து சிசுவை சூலாயுதத்தால் குத்தி எடுத்து கொக்கரித்தவர்களை நாம் காட்டுமிராண்டிகள் என்று ஒப்பிட்டால் அது காட்டில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

உலக மேலாதிக்க வெறிகொண்ட ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்களாக செயல்படுபவர்கள் நாகரிக மனிதர்கள் அல்ல என்பதை உணர்வோம். நம்மைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து வருபவர்கள் தான் பழங்குடிகள். அவர்களிடமிருந்து வாழ கற்றுக் கொள்வோம். அவர்களிடமிருந்து பகையை தீர்க்கும் நெறிமுறைகளையும் கற்றுத் தேர்வோம். இதற்கு உடன்பட மறுப்பவர்களை மனிதர்கள் என்ற வகையில் இருந்தே விலக்கி வகைப்படுத்துவோம். இஸ்ரேலின் ஜியோனிச இன வெறியர்களையும், இந்தியாவின் காவி பாசிஸ்ட்டுகளையும் துடைத்தெறிவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here