மீபத்தில் நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்தது. இதை நடத்திய FIFA இந்த போட்டிக்காக 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் வரும் என்று இலக்கு வைத்தது.

ஆனால் இந்தப் போட்டியின் மூலம் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயாக கொட்டியுள்ளது. விளையாட்டை ஒளிபரப்புகின்ற உரிமை, நேரடியாக கண்டு களிக்கின்ற ரசிகர்களுக்கு விற்கப்படும் டிக்கெட்டுகள், விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் இந்த தொகை கிடைக்கிறது. இதில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக ஒதுக்குவதாக FIFA அறிவித்துள்ளது.

இந்தியாவில் சோம்பேறி விளையாட்டான கிரிக்கெட்டை தேசிய விளையாட்டு என்பதை போல் புரோமோட் செய்துள்ள பார்ப்பன கும்பல், சமீபத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு விளையாட்டு வீரர்களை 183.15 கோடிக்கு ஏலம் விட்டது. 2023 ஒலிபரப்பு உரிமை ரூ.48,000 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள சாராய வியாபாரிகள் முதல் தேசம் கடந்த தரகு முதலாளிகள் வரை தனித்தனியாக ஏலத்தில் எடுத்தனர். இந்த கிரிக்கெட் விளையாட்டினால் மக்கள் மத்தியில் புதிதாக எந்த உணர்ச்சியும் தோன்ற போவதில்லை, ஆனாலும் நுகர்வு வெறியுடன் இந்த கிரிக்கெட் ஆட்டங்கள் புரொமோட் செய்யப்படுகிறது.

ஆனால் உலகக்கோப்பை கால்பந்து போட்டி பல்வேறு உணர்ச்சிகளை உலக மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமானது இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஜிகாத் என்ற புனித போரை நடத்துகின்ற பயங்கரவாதிகள் என்ற கருத்தை கத்தார் உடைத்துள்ளது.

விளையாட்டு அரங்கிற்குள் மதுபான விற்பனை தடை துவங்கி தெருக்களில் ஒழுக்கம் தொடர்பான கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் கால்பந்தாட்டத்தை ரசிப்பதற்கு வந்த ரசிகர்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தைப் பற்றியும், இஸ்லாமிய சமூகத்தை பற்றியும், இஸ்லாமியர்களை பற்றியும் உள்ள தப்பெண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது.

கத்தாரில் பல்வேறு விளையாட்டு அரங்குகளை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி மறுக்க முடியாத உண்மை.  தொழிலாளி வர்க்கம் கட்டுமான பணிகளில் ஈடுபடும்போது உயிரை இழந்தால் அதை மறைத்து கொடூரமாக நடந்து கொள்வது உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளிலும், காலனி, அரைக் காலனி, மறுகாலனிய நாடுகளிலும் நடக்கின்ற தொடர்ச்சியான கொலை பாதக செயலாகும்.

இத்தகைய முதலாளித்துவ சுரண்டல் ஒடுக்கு முறைகளில் இருந்து தொழிலாளி வர்க்கத்தை பாதுகாக்கின்ற போராட்டம் என்பது வேறு, அதே சமயத்தில் சர்வதேச ரீதியில் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்ற கால்பந்து விளையாட்டு போன்றவற்றில் உருவாகின்ற உணர்ச்சிகள், மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்வது வேறு.

இதையும் படியுங்கள்: சச்சின்முதல் ஷாருக்கான் வரை; விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

கத்தார் நாட்டில் தோஹாவில் இருந்து வெளிவரும் “அல் ஜசீரா”  தொலைக்காட்சி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடக்கின்ற மத வெறியாட்டங்கள், இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்குத்தனங்கள், பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்கொடுமைகள், காட்டுமிராண்டித்தனங்கள் போன்ற அனைத்தையும் அம்பலப்படுத்துவது மட்டுமின்றி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளையும், ஆளும் கட்சிகளுக்கு எதிராக நடக்கின்ற போராட்டங்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதை அறிவோம்.

இத்தகைய சுதந்திரமான ஊடகங்களை கத்தார் அரசாங்கம் அனுமதித்துக் கொண்டுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கால்பந்து விளையாட்டிற்கு வந்தபோது அவரவர் விரும்பிய வழிமுறைகளில் மத வழிபாடுகளை நடத்திக் கொள்வதற்கு கத்தார் அரசாங்கம் முழு ஏற்பாடு செய்திருந்தது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு மைதானங்களில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பேட்டை ரவுடியை போல் நடந்து கொள்கின்ற இஸ்ரேல் ஆதரவு பதாகைகள் எதையும் காண முடியவில்லை. ஆனால் , கத்தார் நகரத்தின் வீதிகள் எங்கும் பாலஸ்தீன ஆதரவு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரேலில் இருந்து சென்ற செய்தியாளர்கள் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் தனிமைப்பட்டனர்.

பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்த கால்பந்து ரசிகர்கள்

 

விளையாட்டு வீரர்கள் மத்தியில் நிறவெறி, மதவெறி போன்றவை வெளிப்பட்டது என்ற கடும் விமர்சனம் ஒரு புறம் இருக்க விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் என்ற மனோபாவத்துடன் அன்னோன்யமாக ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளையும் பார்க்க முடிந்தது.

கத்தாருக்கு செல்வதற்கு முன் அந்த நாட்டைப் பற்றி எங்களுக்கு உருவாக்கப்பட்ட கருத்துகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற முன் முடிவுடன், எனது தந்தையின் பாதுகாப்புடன் கால்பந்து ஆட்டங்களை பார்க்கச் சென்றேன். ஆனால் மைதானத்தில் மது பானங்களை தடை செய்தது துவங்கி வீதிகளிலும் விடுதிகளிலும் பெண்களுக்கு உரிய தனி மரியாதை அளிக்கப்பட்டது வரை கண்ட பிறகு எனது கருத்தை மாற்றிக் கொண்டேன் என்கிறார் ரைடர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இங்கிலாந்தை சேர்ந்த ரசிகை ஒருவர்.

கம்யூனிஸ்டுகள் விளையாட்டுகளை எப்படி பார்க்கிறார்கள். அறிஞர் பெர்னாட்ஷா கூறியதைப் போல “பத்து முட்டாள்கள் விளையாடுவதை, பத்தாயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்” என்பது போன்ற கிரிக்கெட் ஆட்டங்களை விமர்சிக்கின்ற கண்ணோட்டம் வேறு. அதே சமயத்தில் கூட்டுத்துவ உழைப்பு, கூட்டுத்துவ சிந்தனை போன்றவற்றை முன்வைக்கின்ற கால்பந்து, ஹாக்கி துவங்கி கபடி வரை உள்ள விளையாட்டுகளை பார்க்கின்ற பார்வை வேறு ஒன்றாக தான் இருக்க முடியும். இந்தப் பார்வை மட்டுமே பெரும்பான்மை மக்களுடன் கம்யூனிஸ்டுகளை ஐக்கியப்படுத்தும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தென் அமெரிக்கா கண்டத்தின் பின் தங்கிய நாடாகும். தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத நாடுகள் அனைத்தும் கால்பந்தாட்ட போட்டிக்கு முன்னுரிமை கொடுத்து தனது அணியை உருவாக்கி விளையாட வைக்கிறது.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார வளர்ச்சியை பற்றியும், அந்த நாட்டு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கும், விமர்சிப்பதற்கும் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு பரிசீலனை செய்வது என்பதுதான் மார்க்சியம் ஆகும்.

ஆனால் விளையாட்டுத் துறையில் சில குறிப்பிட்ட விளையாட்டுகளை ஊக்குவிப்பதை இதிலிருந்து பிரித்து தான் புரிந்து கொள்ள வேண்டும். அர்ஜென்டைனாவின் லயோனல் மெஸ்ஸி உலக கோப்பையை வென்றது என்பது கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியையும் வெறித்தனத்தையும் உருவாக்கி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அப்படி பார்க்க முடியாது.

இந்த உலகக் கோப்பை விளையாட்டின் மூலம் பிராண்டுகள் விற்பனை மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டது, பொருட்களை பற்றிய விளம்பரங்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது, அதை நடத்திய FIFA பல லட்சம் கோடிகளை சம்பாதித்து உள்ளது போன்ற அனைத்தையும் விமர்சிப்பதில் இரண்டு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் விளையாட்டு பற்றிய மார்க்சிய பார்வையில் இருந்து அணுக வேண்டுமே ஒழிய வறட்டுத்தனமாக அனைத்திலும் அரசியல் பார்ப்பேன் என்று பிதற்றுவது ‘இடது சந்தர்ப்பவாத’ அணுகுமுறையாகும்.

வாள் வீச்சு, சதுரங்கம், கேரம் போர்டு, தனித் திறன்களை வெளிக்காட்டுகின்ற விளையாட்டுகளைக் காட்டிலும், கூட்டு உழைப்பை மதிக்கின்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகும். இதன் மூலம் மட்டுமே இந்தியாவில் உள்ள மேட்டுக்குடி பார்ப்பன கும்பலில் விளையாட கிரிக்கெட் மாயையில் இருந்து மக்களை விடுவிக்க முடியும் என்பது மட்டுமின்றி சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த பொது பண்பாட்டை விளையாட்டின் மூலம் உருவாக்க முடியும். பாசிசத்திற்கு எதிராக கால்பந்து போன்ற விளையாட்டையும் இந்த வகையில் நாம் பயன்படுத்துவோம்.

  • இளங்கோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here