பொங்கல் பண்டிகையில் கரும்பு பாரம்பரிய முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காகவே பன்னீர் கரும்புகள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை,சேலம், உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலஆயிரம் ஏக்கர் நிலத்தில் பொங்கல் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது.

அரசு மக்களுக்கு வழங்கிவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெற்றுவந்தது கரும்பு விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்திருந்தது. பொங்கல் கரும்புக்கு உரிய விலையோடு அரசின் கொள்முதல் பாதுகாப்பும், விற்பனை உத்தரவாதமும் கிடைத்து வந்ததால் பன்னீர் கரும்பு சாகுபடி பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது. 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு ரூ250 முதல் ரூ400 வரை ஆண்டுதோறும் விற்கிறது. அரசு தரப்பில் கடந்தஆண்டு ஒருகட்டு கரும்பு ரூபாய் 350 க்கு எடுக்கப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகளும் அதே விலைக்கு கரும்பு எடுக்க வேண்டியிருந்தது. சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பதி மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு விழுப்புரம் கடலூர் பகுதியில் இருந்து கரும்பு விற்பனைக்கு செல்கிறது. கடந்த ஆண்டு நல்ல விலைக்கு விற்பனையானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டார பகுதிகளி்ல் மட்டும் 600 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் பிடாகம், குச்சிபாளையம், அத்தியூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 180 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் காய்ந்து நட்டமாகும் நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்:போலீஸ் குண்டர்களின் ராஜ்ஜியம்! திமுகவின் கையாலாகாத்தனம்!

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு கரும்பு விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளது. ரூபாய் 1,000 பணத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ளது. கரும்பு நீக்கப்பட்டுள்ளது. இது கரும்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது ஒருபக்கம் என்றாலும்,
சில ஆண்டுகளாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கரும்பு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புதிய நிலையும் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கரும்பு கொள்முதல் செய்ய வராததும் கரும்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.

ஏக்கருக்கு ஒருலட்சம் ரூபாய் வரை செலவு செய்து குழந்தையை வளர்ப்பதுபோல பார்த்து பார்த்து வளர்த்த கரும்புகளை என்ன செய்வது எனறு புரியாத நிலைக்கு திடீரென தள்ளப்பட்டுள்ளது கரும்பு விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு பல்வேறு கிராம விவசாயிகள் கரும்புகளுடன், பேரணியாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டுள்ள செய்திகளும், குள்ளஞ்சாவடியில் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஐந்து மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

தமிழர் திருநாள் பாரம்பரிய பொங்கல் கரும்பை பாதுகாக்கவும், கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும் பொங்கல் பரிசுதொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வது உடனடி தீர்வாக அமையும். இனிக்கும் தமிழர் திருநாளில் தேவையற்ற கசக்கும் கரும்பு சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்த் திருநாளை இனிக்கச்செய்ய வேண்டும் என்பது கரும்பு விவசாயிகளின் கோரிக்கைமட்டுமல்ல.

மருதம் மாரியப்பன்
27-12-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here