கோடைகாலத்தில் தமிழக மக்களின் விருப்பத்திற்குரிய சுற்றுலாத் தலங்களில் முதலிடத்தில் இருப்பது உதகை . கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றால் ஊட்டியை மலைகளின் ராணி எனலாம்.
தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டாவும் இங்குதான் உள்ளது. நம் விருப்பத்திற்குரிய சுற்றுலாத்தலமாகவும், மலர்கண்காட்சிக்காக புகழ்பெற்றதாகவும், திரைப்படங்களின் சூட்டிங் ஸ்பாட் ஆகவும் இருக்கும் இந்த உதகையில், நீலகிரி மலைப் பகுதியில் தற்போது மக்கள் பதற்றத்தில், அச்சத்தில், கவலையில் உள்ளனர். போராட்டத்திலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இரு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது.
எதற்காக உண்ணாவிரதம்?
கூடலூர் பகுதியில் உள்ள அஞ்சு குன்னு, குற்றி முச்சு ஆகிய கிராம மக்கள் தமது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட கோரி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தரப்பில் இருதினங்களுக்கு முன்னர் (24.07.2024 இல்) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உடன் பேச வாருங்கள் என்று அழைத்ததன் பேரில் ஒரு கிராமத்தினர் மட்டும் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளனர். அஞ்சு பொண்ணு பகுதியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.
கூடலூர் பகுதியில் உள்ள கொட்டாய் மட்டம், காரக்குன்னு மற்றும் தேவர் சோலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணி தொடர்ந்து நடக்கிறது.
கூடலூர் வனச்சரகத்தினர், கூடலூர் வனக்கோட்ட யானை விரட்டும் காவலர்கள், சிறப்பு குழு வன காவலர்கள், முதுமலை புலிகள் காப்பகம், மசனகுடி யானை விரட்டும் பணியாளர்கள், 4 கும்கி யானைகளின் உதவியுடன் ‘தீவிரமாக’ களத்தில் நிற்கின்றனர்.
கூடலூரில் மட்டுமா பிரச்சனை?
மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிகளில் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது இயல்பானதாக மாறி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி பகுதியை எடுத்துக் கொண்டால் யானை, கரடி உள்ளிட்டவை ஊருக்குள் வருகின்றன. காட்டெருமைகளோ, வீட்டு மாடுகளைப் போல் வீட்டு வாசலுக்கே வந்து நீச்ச தண்ணியை கேட்கின்றன. உணவு கழிவுகளை சட்டியில் வைத்தால் உண்டு விட்டும் செல்கின்றன. வீடுகளில் இருந்து நெடுந்தொலைவில் ஓடையோரங்களில் தேயிலை செடிகளில் இருந்த அட்டை பூச்சிகள் காட்டு மாடுகளோடு சேர்ந்து தம் வாசலையும் தொட்டுவிட்டதாக கிராம மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
காட்டு மாடுகள் கிராமங்களுக்குள் வருவதோடு நிற்கவில்லை; அவை, நகரத்திற்குள்ளும் வந்து விட்டன.
படிக்க: கார்ப்பரேட்டுகளின் ஆக்கிரமிப்பில் வனங்கள்! ஊருக்குள் சுற்றும் வனவிலங்குகள்!
கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியான மார்க்கெட்டில், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள கடை தெருவிலேயே காட்டெருமைகளும் உலா வருகின்றன.
வனவிலங்குகள் ஊருக்குள் வரும் நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு சந்திப்பும் மனித விலங்கு மோதலாக மாறுவதில்லை என்பது சிறிது ஆறு தரும் விஷயம். ஆனால் இதே நிலை நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கிராமங்களில் உள்ள முதியவர்களிடம் பேசும்போது சோலை காடுகளை கடக்கையில் விலங்கு தாக்குதலை எதிர்க்கொண்ட அவர்களின் அனுபவத்தையும், விலங்குகளை புரிந்து கொண்டு வாழ்ந்து வரும் நுட்பத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களின் அனுபவத்திற்கு மாறாக, தற்போது அதிக அளவில் விலங்குகள் குறுக்கும் நெடுக்குமாக ஊரை கடக்கின்றன. அனைவருக்கும் நெருங்கிவரும் ஆபத்து புரிகிறது. இது காலம் காலமாக வனத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே புரிகிறது. இதனால் வன விலங்குகளை எதிர்கொள்ள நேரும் அம்மக்கள் அச்சத்துடன் விலகி ஓடுகின்றனர்.
ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகளோ கேமராவில் விலங்குகள் முன் நின்று செல்ஃபி, வீடியோ எடுத்து வருகின்றனர். இவர்களில் சிலர் யானைகளால் விரட்டப்பட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி உயிர் தப்புவதும் நடக்கிறது. பண்ணாரி மலை பாதை போன்ற சில பகுதிகளில் யானைகள் சரக்கு லாரிகளை மறித்து அவற்றில் கரும்பு கட்டுகள் உள்ளனவா என்று தேடி பிடுங்கி உண்கின்றன.
வில்லனாக்கப்படும் யானைகள்!
கூடலூரில் நடக்கும் போராட்டமானது ஒவ்வொரு கிராம மக்களும் நடத்த வேண்டிய ஒன்று. ஆனால் போராட்டத்தின் நோக்கமும், இலக்கும், தீர்வும் சரியானதாக இருந்தாக வேண்டும். இதில் தொடர்ச்சியாக தவறுகள் நடக்கின்றன.
விலங்குகளை விரட்டுவது தான் தீர்வா?
தற்போதைய போராட்டங்கள் வனவிலங்குகள் ஊருக்குள் வர காரணமான கார்ப்பரேட் வர்க்கத்தினரை குறி வைத்து நடத்தப்படவில்லை. கும்கி படத்தைப் போல ஊருக்குள் வரும் விலங்குகளையே வில்லனாக காட்டி நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது முன்னெடுக்கப்படும் தீர்வுகளும் பொருத்தமற்றதாகவே மாறி வருகிறது.
வலசை செல்லும் காட்டு விலங்குகளை ஓரிடத்தில் இருந்து விரட்டும் போது அது மற்றொரு இடத்திற்கு அதாவது மற்றொரு கிராமத்திற்கோ சிறுநகரத்திற்கோ செல்லும் என்பது தான் எதார்த்தம்.
ஏன் இப்படிநடக்கிறது?
கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்டவைகளின் உணவுக்கும், தண்ணீருக்குமே தட்டுப்பாடு என்றால், யானைகளின் நிலைமையை என்னவென்று சொல்வது?
ஒரு யானை மட்டுமே ஒரு நாளைக்கு 140 கிலோ இலை தழைகளை சாப்பிட வேண்டும். 10 யானைகள் கொண்ட சிறு கூட்டமாக இருந்தால் அவற்றுக்கு எத்தனை கிலோ தேவைப்படும்?வனங்களை அழித்து, தேயிலைத் தோட்டங்கள், காப்பி தோட்டங்கள் என அமைப்பதன் மூலம் தாவர உண்ணிகளை உணவின்றி அலைபாய விடுகின்றனர் கார்ப்பரேட்டுகள்.
படிக்க: வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும் கேள்விக்குறியாகும் பழங்குடிகளின் வாழ்க்கையும்!
இவர்களின் ஆக்கிரமிப்புக்கு தப்பியுள்ள, சுருங்கி வருகின்ற சோலை காடுகளும் புல்வெளிகளுமே அனைத்து வனவிலங்குகளுக்கும், அனைத்து தாவர உன்னிகளுக்கும் போதுமான உணவை அளிப்பதாக இல்லை.
நவீன சாலைகளை அமைத்து பயணிக்கும் நாம் ஓரிடத்தில் மண் சரிந்தாலோ, பாறைகள் உருண்டு அடைபட்டாலோ, கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி புலம்பித்தீர்த்திருக்கிறோம். ஆனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தமது வலசை பாதையில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் எந்த இடத்தில் ஏற வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டிப் பலகைகள் இல்லாத சூழலில் காலம் காலமாக தமது மூலையில் பதிவாகியுள்ள தரவுகளில் இருந்து இயல்பாக தமது பாதையை தெரிந்து கொள்கின்றன.
அந்தப் வலசைப்பாதையில் இருக்கும் பகுதிகள் தற்போது மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்டு விட்டது.
வழி வழியாக தமது மூலையில் பதிவாகும் அறிவைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத வழிகாட்டி பலகைகளைக் கொண்டு பயணித்து வந்த யானையை வழிமறிக்கின்றன எஸ்டேட்டுகளும் ரிசார்ட்டுகளும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மண்சரிவில் உருண்டு விழும் பாறைகளால் மறிக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் பயணிகளைப்போல பாதையில் தொடர்ந்து செல்ல முடியாமல் சுற்றி அலைகின்றன.
தமது வாழ்வாதாரத்தை இழக்கின்ற வனவிலங்குகள் அதற்கு மாறாக புதிய இடத்தை தேடி அலைய கார்ப்பரேட்டுகளாலும் வனத்துறையாளனும் தான் தூண்டப்படுகின்றன. இதனால் யானைகள் உணவுக்காக தமது இயல்பான வலசைப் பாதையை தவிர்த்து புதிய பாதைகளை உருவாக்கிக் கொள்ளத்தான் அலைபாய்கின்றன. தமது தேவைக்காகவே ஊருக்குள் வந்து சேர்கின்றன.
யானைக்கு எத்தகைய தீவனம் தேவை?
இப்படி யானைகள் மனிதர்களை எதிர்கொள்ளும் நிகழ்வுகள் நடப்பது மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் அல்ல மேற்குவங்கத்தின் வட மாவட்டங்களிலும் இப்போக்கே அதிகரித்து வருகிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் விஞ்ஞானிகளால் வங்கத்தின் வனப் பகுதிகளில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
படிக்க: அழிகிறது சுற்றுச்சூழல்! எரிகிறது வனக்காடுகள்!! இதுவே பூமியின் இறுதிக்காலம்!!
மேற்கு வங்கத்தில் வடக்கு பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 286 தாவரங்களில் 130 வகையான தாவரங்களை யானைகள் உண்கின்றன. அங்கு ஒரு சதுர கிலோமீட்டரை 700 மனிதர்களும் 500க்கும் மேற்பட்ட யானைகளும் சேர்ந்து பகிர்ந்து கொள்வதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையோரங்களில் தற்போது பலா மரங்கள் பழுத்து மனம் பரப்பி நிற்கின்றன. பலாப்பழங்களை விரும்பி உண்பதற்காக வந்து சேரும் யானைக் கூட்டங்கள் அவ்வப்போது சாலைகளை கடந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால், வனத்துறையினர் வாகனங்களில் செல்வோரிடம் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இப்படி யானைகள் எந்த பருவத்தில் எந்தப் பகுதியில் என்ன உணவு கிடைக்கும் என்பதை காலம் காலமாக தெரிந்து வைத்து அதை அடைவதற்காக வலசை செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளன.
இந்த வாழ் முறையில் கொடூரமாக குறுக்கிடுகின்றனர் வன ஆக்கிரமிப்பு கார்ப்பரேட்டுகள். இவர்கள் மலைத்தொடரையே விழுங்கி, எஸ்டேட்டுகளை உருவாக்கி, மின் வேலிகளால் அதை பாதுகாக்கின்றனர். சுற்றுலா வருமானத்தை ஈர்ப்பதற்காக ரிசாட்டுகளை உருவாக்கி அதையும் பாதுகாக்கின்றனர்.
இப்படி மலையின் மேல் தமக்கு தேவையான எந்த இடத்தையும் வரைமுறையின்றி ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்டுகளின் இந்த ஆக்கிரமிப்பு வெறியால்தான் வனவிலங்குகள் வாழும் சோலை காடுகள் திட்டமிட்டு அழைக்கப்படுகின்றன.
தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் உணவுக்காக ஊர்களுக்குள் நுழைகின்றன. இவையே வில்லனாகவும் மாற்றப்படுகின்றன.
அழியும் புல்வெளி ! பெருகும் ஆபத்து!
புல்வெளிகளும், புதர்களும் அழியும்போது அங்கு வாழும் சிறு விலங்குகளும் சேர்ந்து அழிகின்றன. முயல், தரையில் வாழும் காட்டுக்கோழியினங்கள், பறவைகள், வரையாடு போன்ற சிறுஉயிரினங்களின் அழிவால் அதை வேட்டையாடி உண்ணும் சிறுத்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவேதான் தமது பசிக்காக இரை தேடி கிராமங்களில் வந்து ஆடு கோழிகளை கவ்விச் செல்கின்றன.
முன்பு வேட்டை விலங்குகள் தமது காலில் அடிபட்டு வேட்டையாட முடியாத நிலையில்தான் ஊருக்குள் வந்து எளிமையான இலக்காக இருக்கும் கால்நடைகளை தாக்கும். தற்போது நடப்பது அத்தகைய வழக்கமான ஒன்று அல்ல.
ருசி கண்ட யானையா?பசி கொண்ட யானையா?
உணவுக்காக அலைபாயும் காட்டு யானைகள் ரேஷன் கடைகளை தேடி வருகின்றன.
அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மூட்டைகளில் உள்ள அரிசியின் வாடையை முகர்ந்த யானைகள் பலவீனமான சுவர்களை உடைத்து உள் நுழைந்து அரிசியை உண்கின்றன.
இது மலை மேல் உள்ள கிராமங்களில் மட்டும் நடப்பதாக இல்லாமல் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களிலும் வழக்கமானதாக மாறியுள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவையின் புறநகர் பகுதிகளான கணுவாய், தடாகம், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இது அடிக்கடி கேள்விப்படும் ஒன்றாக மாறியுள்ளது. முருக பக்தர்களின் விருப்பபூர்வ இடமான மருதமலையிலும் யானைகள் கூட்டம் கூட்டமாக கீழே இறங்குவது செய்திகளில் தொடர்ந்து அடிபட்டும் வருகிறது.
யானைகளின் வில்லனாக ஈஷா யோகா மையம் !
ஆக்ரமிப்பு என்றால் அது வனத்தின் மேல் தான் நடக்க வேண்டும் என்பதல்ல; சமவெளியில் கூட நடக்கிறது . கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவனின் ஈசா யோகா மையம் அதற்கு ஒரு உதாரணம். கோவையிலிருந்து பூண்டிக்கு செல்லும் வழியில் உள்ளது ஈசா யோகா மையம். இம்மையத்தை அடைவதற்கு முன்பாக உள்ள கிராமத்தில் வீடுகளைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடியும்.
வீடுகளில் பொதுவாக கம்பி வேலி அமைப்பார்கள். ஆனால் மின் வேலிகளை அமைக்க மாட்டார்கள். ஜக்கியின் ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள் சாதாரண வேலிக்கு வெளிப்புறமாக மின்வேலியை கூடுதலாக அமைக்கிறார்கள். அதற்கு காரணம் வனவிலங்குகளின் நுழைவு தான். அப்பகுதி மக்களால் “பெரியவர் “ என்று குறிப்பிடப்படும் யானைகளின் வரவு தான்.
இதன்மூலம் யானைகளின் வலசைப் பாதையாகத்தான் பூண்டிக்கு முன்னுள்ள பகுதி இருக்கிறது என்பது நமக்கே தெரியும் போது, பல நூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வேலி போட எப்படி இந்த அரசு ஜக்கிக்கு அனுமதி தந்தது?
கார்ப்பரேட் சாமியாரான ஜக்கிக்கு மிகவும் மேல்மட்டத்தில் உள்ளவர்களின், அதாவது பிரதமர் மோடி முதல் ஜனாதிபதி முர்மு வரை உள்ளவர்களின் செல்வாக்கு தான் காரணம்.
ஆபத்தை உணராத குடியிருப்பு வாசிகள்!
மலை மேல் வசிப்பவர்களே யானைகளை விரட்ட சொல்லி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் நிலையில், மலையடிவாரங்களில் பாரம்பரியமாக வசித்து வரும் கிராமத்தினர் மின் வேலிகளை அமைத்து தற்காத்துக் கொள்ளும் சூழலில், கணுவாய் உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள மக்கள் அப்படி போராட்டம் எதையும் நடத்தவில்லை; மின்வேலிகளையும் போடவில்லை.
யானைகள் கேட்டை தள்ளி உள்ளே நுழைவது; வீட்டு கதவை திறந்து தும்பிக்கையை விட்டு பொருட்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேடிச் செல்வது என்பதை எல்லாம் பார்த்தும் கூட மருதமலைக்கு அடிவாரத்தில் உள்ள நகர்களில் வசிப்பவர்கள் எவ்வித போராட்டத்திலும் இறங்கவில்லை.
ஏன் இந்த அமைதி?
இவர்களுக்கு நிலைமையின் விபரீதம் இன்னும் புரியவில்லை. அதாவது, ரியல் எஸ்டேட் கும்பலால் புதிதாக சைட் போட்டு விற்கப்படும் இடத்தில் ஒரு நிலத்தை வங்கிக் கடன் மூலம் வாங்கி, வீடு கட்டி குடியேறியுள்ள இம்மக்களுக்கு வனவிலங்குகளால் நேரக்கூடிய இழப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
பாரம்பரியமாக இருக்கும் கிராமங்களில் யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஊர் எல்லையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வைப்பது நடக்கிறது. மலை மேல் உள்ள கோவில்களுக்கு செல்ல கூட வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை போட்டு கண்காணிப்பதும் நடக்கிறது.
மலைஆடு மேய்ப்பவர்கள் சிறுத்தை தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடனும் கூடுதல் ஆட்களுடனும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். கணுவாய் பகுதியில் ஏற்கனவே மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை சிறுத்தைகள் தாக்கத் தொடங்கி விட்டன.
அதிர்ச்சி தரும் மரணங்கள்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 256 பேர் யானை தாக்கி உயிர் இழந்துள்ளனர். இதை ஒன்றிய இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ஒரு கேள்விக்கான தமது பதிலாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் யானை தாக்குதலால் நடந்துள்ள மரணங்கள் மற்றும் புலித்தாக்குதலால் நடந்துள்ள மரணங்கள் குறித்தும் கூட பூவுலகின் நண்பர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இத்தகைய சம்பவங்களால் நெருங்கி வரும் பேராபத்தை , வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக கோவைக்கு வந்து, நிலம் வாங்கி, வீடு கட்டி செட்டிலாகி உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
தாம் விரும்பி வாங்கிய மலையடியவார பகுதியில் வீடு கட்டி குடிவந்துள்ள இக்குடியிருப்புவாசிகளால் தான் கேள்விப்படும் சம்பவங்களை தொகுப்பாக பார்த்து புரிந்து கொள்ள முடியவில்லை.
SRI போன்ற ஆலைகளில் பகல் – இரவு பணி முடித்து இருசக்ர வாகனத்தில் வீட்டுக்கு வருபவர்கள் எச்சரிக்கையுடன் வருவது; தெருவில் யானைகளை எதிர் கொள்ள நேர்ந்தால் ஒதுங்கி நின்று காத்திருப்பது; தம் தெருவிற்குள் எதிர்பட்டால் காம்பவுண்டுக்குள் கேட்டை மூடிக்கொண்டு, மாடியில் போய் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது என்றே கடந்து செல்கின்றனர்.
இப்பொழுது காட்டு விலங்குகள் வலசை செல்வதற்காக புதிய வழித்தடத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் விரட்டியவுடன் அவை திரும்பிச் செல்லவும் போவதில்லை . தமக்கான உணவைத் தேடியே மீண்டும் மீண்டும் நம் ஊருக்குள் வருகின்றன.
மலை மேல் போராட்டம் நடந்தாலும், எஸ்டேட்டுகளை நம்பி வாழும் கூலி தொழிலாளர்களால் எதிரி யார் என்பதை பகிரங்கமாக சொல்லவும் முடியவில்லை. கீழே இருக்கும் மக்களுக்கோ உண்மை இதுவரைக்கும் கண்ணிலேயே படவில்லை.
கும்கி யானைகள் மூலம் நெட்டித்தள்ளுவதும் , வனத்துறையினர் தமது வாகனங்களில் இருந்து கண்ணை கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சி மலைமேல் மீண்டும் சொல்லும் படி விலங்குகளை விரட்டி விடுவதும், ஊர் மக்கள் பட்டாசுகளை வெடித்தோ, பறை அடித்தோ, கூட்டமாக சென்று ஒலி எழுப்பியோ விரட்டுவதும் கூட தற்காலிக தீர்வுதான்.
மழைக்கு மேல் வனவிலங்குகள் வாழ்கின்ற பகுதியை நாம் அபகரிக்க அபகரிக்க வனவிலங்குகள் தவிர்க்க முடியாமல் நாம் இருக்கும் குடியிருப்புகளுக்குள், புறநகரங்களுக்குள் ஊடுருவி காம்பவுண்ட் கேட்டையும் வீட்டு கதவையும் முட்டித் திறக்கின்றன.
இந்தப் பிரச்சனைக்கு பொருத்தமாக தீர்வு காண வேண்டிய அரசோ தனது கார்ப்பரேட் பாசத்தால் தற்காலிக தீர்வை மட்டுமே அமல்படுத்துகின்றன.
இதனால் மலை மேல் உள்ள மக்களும், மழை அடிவாரத்தில் உள்ள மக்களும் அச்சத்தில் நடமாட வேண்டிய சூழல் அதிகரித்து வருகிறது.
முதலில் கோழி! அடுத்தது குழந்தைகளா?
இரவில் வந்து கோழிக் கூண்டை உடைக்க முயற்சி செய்யும் சிறுத்தை பகலில் வர ஆரம்பித்தால் என்ன நடக்கும்?
வீட்டு காம்பவுண்ட் சுவரை தள்ளித் திறந்து கொண்டு கதவையும் திறந்து தும்பிக்கையை நீட்டும் யானை வீட்டுக்குள்ளும் நுழையும் முற்பட்டால் என்ன நடக்கும்?
ரேஷன் கடையின் சுவர்களை தகர்த்து விட்டு அரிசியை தின்னும் யானை கடைத்தெருவில் உள்ள மளிகை கடை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கதவுகளை உடைக்க முயற்சி செய்தால் என்ன நடக்கும்?
இதற்கெல்லாம் பதில் தேட வேண்டியவர்களாக நாம் மாற்றப்பட்டு வருகிறோம்.
அதிகரித்து வரும் உயிரிழப்புகளை கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க நாம் அனைவரும் களத்தில் இறங்க வேண்டியுள்ளது.
ஊர் கூடி விரட்டி அடிக்க வேண்டியது விலங்குகளை அல்ல; காடுகளை ஆக்கிரமிக்கும், வனங்களை அழிக்கும், மலைகளை விழுங்கும் கார்ப்பரேட்டுகளையும் அவர்களை கொழுக்க வைக்கும் அதிகார வர்க்கத்தினரையும், துணைநிற்கும் பாசிச கட்சிகளையும்தான்.
– இளமாறன்.







கட்டுரை அருமை. தீர்வும் மிகச்சரி. அப்படியே சுற்றுலாப் பயணிகளின் அட்ராசிட்டிகளையும் எழுதுங்கள்.
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.