னவிலங்குகளைப் பாதுகாப்பது எனும் போர்வையில், காடுகளில் வாழ்ந்துவரும் பூர்வகுடிகளான ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றி, காடுகளை – அதில் பொதிந்து கிடக்கும் கனிம வளங்களை – கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு தாரை வார்ப்பதே பாசிச மோடி அரசின் நோக்கமாக உள்ளது. ஒருபுறம் பழங்குடி சமூகத்தின் திரௌபதி முர்முவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி வேடிக்கை காட்டுவதும், மறுபுறம் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்களை கொடூரமாக ஒடுக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் என இரட்டை வேடத்தை கச்சிதமாக போடுகிறது கார்ப்பரேட்- காவி அரசு. காடுகளின் மீதான பூர்வகுடி மக்களின் உரிமை எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.

********

சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் குனோ(Kuno) தேசியப் பூங்காவில், பிரதமர் மோடியின் 72 ஆவது பிறந்த நாளையொட்டி நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் வருவது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. மறுபுறம் தேசிய பூங்கா அமைந்துள்ள பாக்சா கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற ( பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும்) நடவடிக்கைகள் குறித்தான செய்திகளை ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.

மத்தியப் பிரதேசமானது,   இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியையும், அந்த வனத்தையும், வனவிலங்குகள் பாதுகாப்பையும் தமது உயிர்மூச்சாகக் கருதும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடிகளின் பெரும் மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் வருகை பற்றிய சலசலப்புகளுக்கு இடையில், காடுகளுடனும் அதன் விலங்குகளுடனும் பின்னிப் பிணைந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கை ஒரே இரவில் அடியோடு மாற்றப்பட்ட மாபெரும் கொடூரம் அரங்கேறியது.

பழங்குடிகளின் வாழ்வைப் பறிக்கும் வனவிலங்குப் பாதுகாப்பு திருத்தச் சட்டம்!

1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், பறவைகள் சரணாலயங்கள், மற்றும் குனோ போன்ற தேசிய பூங்காக்களை நிறுவுவதன் மூலமாக தாவரங்கள், பறவைகள் மற்றும் வன விலங்குகளை காடுகளில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டது. இதன் பிறகு 2006 – ம் ஆண்டில் பழங்குடியினரின் வனத்தின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. வன உரிமைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டது.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து இச்சட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வகையில், கிராம சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குவது என்ற சாக்கில் காடுகளை தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற பல்வேறு பூர்வகுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் படி, பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இச்சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதங்களை அதிகரிக்கவும் வழி செய்கிறது இந்த சட்டத் திருத்தம். மக்களவையில் வனவிலங்குகளைப் பாதுகாப்பது பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, காடுகளில் வசிக்கும் மனித சமூகங்களை பாதுகாப்பது பற்றி விவாதிக்கப்படவில்லை.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டமே, பழங்குடியின சமூகங்களை காடுகளை விட்டு பெரிய அளவில் வெளியேற்றவும் காரணமாக அமைகிறது. ஒழுங்கு முறையற்ற, தாறுமாறான மீள்குடியேற்ற நடைமுறையின் போது சட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பது பற்றிய ஆய்வை இந்த கட்டுரையாளர்கள் மேற்கொண்டனர்.

வனத்துக்குச் சொந்தக்காரர்கள் குற்றவாளிகளாம்!

2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தில் வேட்டையாடியக் குற்றத்திற்காக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட FIR –  களை ஆராய்ந்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் பட்டியல் சாதியினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள்தான் இருந்தனர். இதே காலகட்டத்தில் வனத்துறையின் தரவுகளின் படி வேட்டைக்கான குற்றம் சாட்டப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் பழங்குடி வகுப்பினர். ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள்தான். வேட்டையாடுதல் என்ற குற்றச்சாட்டானது, சரணாலயங்களின் எல்லைகளை அழித்தல், விலங்கினங்களை கடத்துதல் போன்ற பிற குற்றங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஆனாலும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இருப்பதில்லை .

காட்டுப்பன்றிகளை வேட்டையாடக் கூடாதா?

மக்களவையில் சட்ட திருத்த மசோதா குறித்தான விவாதத்தின் போது காட்டுப்பன்றியை எளிதில் வேட்டையாடக் கூடிய சிறு விலங்கின பட்டியலில் சேர்க்க வேண்டும் எனப் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அத்தகைய நடவடிக்கையானது, அவற்றை வேட்டையாடுவது குற்றமாகாது என்பதாகவும், பெருகிவரும் அதன் எண்ணிக்கையை குறைக்கவும் உதவும். மத்தியப் பிரதேசத்தின் வனத்துறை தரவுகளை ஆய்வு செய்ததில், பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில்  வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 24% க்கும் மேலானவை காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்குகளாகத்தான் உள்ளன.

காட்டுப்பன்றிகள் பயிர்களையும், குடியிருப்புகளையும் நாசம் செய்வதால் அவற்றை வேட்டையாட வேண்டியுள்ளது என்பதே கள யதார்த்தமாக உள்ளது. பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் வேலிகளில் விலங்குகள் சிக்கினால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த வேலியை அமைத்த விவசாயி குற்றவாளி ஆகிறார். ஆனால் இப்படி விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. 2003 ஆம் ஆண்டிலேயே மத்திய பிரதேச அரசு  பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளைக் கொல்ல விதிகளை வகுத்தது.

இப்படி விதிகள் ஒருபுறம் இருந்தாலும், பெருகி வரும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான அனுமதிகள் அரிதாகவே வழங்கப்பட்டதாக வனத்துறையினரே தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேரளா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பிஹார் போன்ற மாநிலங்களில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், மாநிலங்கள் குறிப்பிட்ட காலத்திற்காவது இதை வேட்டையாடக் கூடிய சிறு விலங்காக அங்கீகரிக்க வேண்டும் அல்லது உரிமத்துடன் வேட்டையாடுபவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். காட்டுப் பன்றிகள் குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை ஏற்படுத்தினாலும், அவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. தற்காப்புக்காக இது போன்ற விலங்குகளை கொன்றாலும் அவை வனத்தில் வசிக்கும் மனித சமூகங்களை குற்றவியல் வழக்குகளில் தள்ளுகின்றன.

இந்தப் பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளானது, காடுகளின் பன்முகத்தன்மையை பேணும் வகையில் அற்புதமாக உள்ளது. ஆனால் காட்டையும் அதன் விலங்குகளையும் பாதுகாக்கப் போகிறோம் என்று அரசால் இயற்றப்படும் சட்டங்கள், காட்டின் பூர்வகுடி மக்களை அங்கிருந்து வெளியேற்றவே வகை செய்கின்றன. 2017 ல் புலிகளின் வாழ்விடங்களில் வசிக்கும் பழங்குடிகளுக்கு வன உரிமைகள் எதையும் அளிக்கக் கூடாது என்றது ஒன்றிய அரசு.

பழங்குடிகள் மீது சுமத்தப்படும் குற்ற வழக்கு விசாரணைகள் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை கூட நீடிக்கின்றன. சில சமயங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வனத்துறை அதிகாரிகளின் வன்முறை வெறியாட்டத்தையும் சந்திக்க நேர்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெறுவதே கூட கடினமாகத்தான் உள்ளது. சில வழக்குகளில் இப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் வரை கூட, விசாரணையின்றி காவலில் இருப்பதை கள ஆய்வில் பார்க்க முடிந்தது.


இதையும் படியுங்கள் : பாசிச பாஜக-வின் பழங்குடிகள் பாசம்!


பயிர்களைப் பாதுகாப்பதற்காக பழங்குடி மக்கள் எடுக்கும் முயற்சியானது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சீர்குலைக்கும் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இது அவர்களது பாரம்பரிய காடுகளின் பயன்பாட்டைக் கணிசமாக மட்டுப்படுத்தி உள்ளது. 2006 ஆம் ஆண்டின் வன உரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்களின் வன உரிமைகள் தனிப்பட்ட வகையில் அங்கீகரிக்கப்பட்டாலும் நடைமுறையில் அவை செல்லாக் காசாகத்தான் உள்ளன. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு எந்த உரிமைகளும் இருப்பதில்லை.

இதன் விளைவாகத்தான் பழங்குடி மக்களின் காடுகளில் மூங்கில் வெட்டுதல், விறகு சேகரித்தல் போன்ற அடிப்படை உரிமைகள் கூட குற்றமாக பார்க்கப் படுகின்றன. இப்போது பாக்சா ஆதிவாசிகள் விஷயத்திலும் இதே போன்றதொரு நிலைதான்  மீண்டும் அரங்கேறி வருகிறது. மலைகள் மற்றும் காடுகளில் பொதிந்துள்ள வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடுவதைத் தடுக்கவும், பழங்குடிகளின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும் போராட வேண்டியது நம் அனைவரின் ஜனநாயகக் கடமையாக உள்ளது.

செய்தி மூலம்: https://scroll.in/article/1034054/how-the-discussion-on-wildlife-conservation-has-sidelined-the-rights-of-forest-dwelling-communities

தமிழில் ஆக்கம் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here