ந்தியா ஒன்றிய அரசு கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழகம் உட்பட பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் செல்லவில்லை என்பதும், முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இழிவுபடுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டார் என்பதும் செய்தியாக மாறி உள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வர் கலந்து கொள்ளாததன் மூலம் இந்திய ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியை பேரம் பேசி வாங்கிக் கொள்வதற்கு மறுத்துவிட்டார் என்றும், இதனால் தமிழகத்தின் உரிமைகளை புறக்கணித்துள்ளார் என்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் ஊது குழல்களான ஊடகங்கள் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பாசிச மோடி, ”இனிமேல் இந்தியாவில் இதுவரை அமல்படுத்தப்பட்டு வந்த திட்டக் கமிஷன் என்ற வழிமுறை கிடையாது என்றும், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதி ஆயோக்” என்று புதிய வழிமுறையை முன்வைத்து பேசினார்.

இந்த நிதி ஆயோக் கொண்டுவரப்பட்ட போது மாநிலங்களின் வளர்ச்சிக்கான ஏற்பாடு என்ற முறையில் மிகப் பெரிய அளவில் பீற்றிக் கொள்ளப்பட்டது. 1950 முதல் 2014 வரை அமுலில் இருந்த திட்ட கமிஷன் ஏன் கலைக்கப்பட்டது என்பதை பற்றியும், 1947 ஆம் ஆண்டு போலியான சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் பொருளாதரத்தை ரஷ்ய பாணியிலான சோசலிசமும் கிடையாது; அமெரிக்க பாணியிலான முதலாளித்துவமும் கிடையாது; இரண்டும் ஒன்று கலந்த கலப்பு பொருளாதாரம் என்ற ஒன்றை நாங்கள் கட்டியமைக்க போகிறோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு முன் வைத்தது.

அதன் பிறகு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததும், அப்படிப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எந்த வகையில் பயன்படுத்தப்பட்டது; பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கையில் இந்த ஐந்தாண்டு திட்டங்கள் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்தது என்பதை பற்றியெல்லாம் நாம் புரிந்து கொண்டால்தான் தற்போது நிதி ஆயோக் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி முடிவுக்கு வர முடியும்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல்வேறு காலனிய நாடுகள் விடுதலையை முன்வைத்து போராடியது. ஒரு சில நாடுகளை ஏகாதிபத்தியங்கள் இனிமேல் ஆள முடியாது என்ற சூழலில் தனது ஏஜெண்டுகளை கொண்டு அதாவது இந்தியா போன்ற நாடுகளில் தரகு முதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்களின் கூட்டு சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்ற கட்சிகளைக் கொண்டு ஆட்சி நடத்த திட்டமிடப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை தனது பிரதிநிதியாக நியமித்து இந்தியாவில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

பிரிட்டன் நாட்டை விட்டு வெளியே சென்ற பிறகு ஏகாதிபத்தியங்களில் நலனுக்கு பொருத்தமாக இந்தியாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டு வரப்படும் திட்டங்கள் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகு மாநிலங்களில் இத்தகைய திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டன.

படிக்க: மக்களிடம் பறிக்கும் வரியை குறை! கார்ப்பரேட்டுகளிடம் வரியை உயர்த்து!

மன்மோகன் சிங் ஆட்சி நடந்த போது இந்தியாவின் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்த மான்டெக் சிங் அலுவாலியா போன்றவர்கள் நேரடியாக உலக வர்த்தக கழகம், உலக வங்கி, மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை முன்வைக்கின்ற பொருளாதார திட்டங்களை நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ற பெயரில் முன்வைத்து அமல்படுத்தியது.

இவ்வாறு திட்டக் கமிஷன் மூலம் ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்கு திட்டத்தை வரைவதும் அந்த ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் விவசாயம், தொழில் துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பல்வேறு துறைகளில் அரசு மூலதனத்தையும், ஒரு சில தனியார் மூலதனத்தையும் ஒன்றிணைத்து வளர்ச்சி திட்டங்கள் வரையப்பட்டது. இது குறிப்பிட்ட அளவிற்கு இந்தியாவின் சுயசார்பு பொருளாதரத்தை உயர்த்தி வந்தது என்பதையும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மறுக்க முடியாது.

2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இந்தியா போன்ற காலனிய நாடுகளில் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கையை தீவிரப்படுத்துகின்ற வகையில் ஏகாதிபத்தியங்கள் கொடுத்த நிர்ப்பந்தத்தை காங்கிரஸ் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அமுல்படுத்தவில்லை என்பதால், தேசத்தின் வளர்ச்சி என்ற போர்வையில் நாட்டை ஒருங்கிணைக்கின்ற ஒரு கட்சியை தேர்வு செய்தனர்.

அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியமாக செய்த வேலை திட்ட கமிஷனை கலைத்துவிட்டு, அந்த இடத்தில் சிந்தனைக் குழாம் என்ற பெயரில் நாட்டின் அரசியல் பொருளாதாரத்திற்கு சிறிதும் தொடர்பற்ற பார்ப்பன, மேல் சாதியினர், மேட்டுக்குடியினரை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கு பெயர் தான் நிதி ஆயோக்.

இந்த நிதி ஆயோக் கொண்டுவரப்பட்டபோது என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள்; அவையெல்லாம் உண்மையிலேயே அமல்படுத்தப்பட்டதா; இன்று ஏன் புறக்கணிக்கின்ற அளவிற்கு சென்றுள்ளது என்பதை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.

செல்லப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here