லக மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்கா தெற்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு குறிப்பாக சீனாவிற்கு எதிராக தைவான் விவகாரத்தில் தொடர்ச்சியாக தலையிட்டு வருகிறது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் கைக்கூலியான பிராந்திய வல்லரசான இந்தியா சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை எப்போதும் ஆதரித்து வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச மோடி மீண்டும் வெற்றி பெற்றதை ஒட்டி தைவான் அதிபர் லாய் சிங்-தேவ் அவரின் எக்ஸ் பக்கத்தில், “வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்தோ பசிபிக் அமைதி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,“அருமையான செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இருந்தார். அதுவரை மோடியின் வெற்றி குறித்து வாய் திறக்காத சீனா ஆத்திரத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்தியது.

“உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே இருக்கிறது. ஒரே சீனா கொள்கையில் இந்தியா தீவிர அரசியல் ஈடுபாடுகளை கொண்டிருக்கிறது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரே சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சீனக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் தைவான், கம்யூனிஸ்ட் சீனாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல.” மிரட்டும் தொனியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சீனா தைவானின் சுயாதிபத்தியத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அமெரிக்கா, தைவானுக்கு ஆயுத உதவிகளையும் உள்நாட்டு கட்டமைப்பு வசதிக்கு தேவையான உதவியும் செய்து வருவதால் தொடர்ச்சியாக தென் சீன கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து பதட்டத்தை அதிகரிக்கிறது. சீனாவை அச்சுறுத்துவது மட்டுமல்ல நவீன அறிவியல் தொழில்நுட்பமான செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் கம்ப்யூட்டர் சிப்  தயாரிப்பதில் தைவானின் பங்கு முக்கியமானது. இதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா விரும்புகிறது.

2.36 கோடி மக்கள் தைவானில் வசிக்கிறார்கள். உலகத்தின் முக்கியமான ஒரு கம்பெனி தைவானில்தான் இருக்கிறது. அந்த கம்பெனிதான் தைவானை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. அந்தக் கம்பெனியின் பெயர் TSMC (Taiwan Semiconductor Manufacturing Company, Limited).

டிஜிட்டல் உலகில் மைக்ரோ சிப்கள்தான் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.. அதைத் தயாரிக்கும் உலகின் பெரிய, முன்னணி கம்பெனி டி.எஸ்.எம்.சி (TSMC) தான். உலகின் பல நிறுவனங்களும், கம்பெனிகளும் இங்கு முதலீடு செய்திருக்கின்றனர். வருவாய் மட்டும் 1.07 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பல லட்சம் கோடிகள். ஆப்பிள் கம்பெனியின் எல்லா சிப்களும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

தைவானின் மீது அமெரிக்காவின் கண் இவ்வாறு இருக்கும் போது கொரோனாவிற்கு பிறகு அணு ஆயுத பரவல் மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடு தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தைவானுக்கு நவீன ஆயுதங்கள் உட்பட 95 மில்லியன் அமெரிக்க டாலர்  பொருமானமுள்ள நிதியை அளித்தது.

படிக்க: அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே தைவானின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 300 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியதும் சீனாவிற்கு ஆத்திரத்தை தூண்டி உள்ளது. இதனால் அணு ஆயுத குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை சீனா நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.

அணு ஆயுத பரவல் என்று ஒரு புறம் பேசிக்கொண்டே சீனா தனது அணு ஆயுதங்களை 500 லிருந்து ஆயிரமாக உயர்த்தி உள்ளது.. ஏற்கனவே அமெரிக்காவிடம் 3700 அணு ஆயுதங்கள் உள்ளன இது தவிர ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் ஆகியவை அனைத்தும் இணைந்து எப்போதுமே பூமியில் அமைதிக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்ற நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா தைவானின் மீது தனது பிடியை இறுக்கிக் கொள்வது மட்டுமின்றி அமெரிக்காவுக்கு எதிராக நவீன தகவல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதற்கும் துடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கும் தைவான் மீதான கண்காணிப்பு மற்றும் சீனாவில் நவீன போர்க்கப்பல்கள் நடமாட்டம் ஆகியவை தொடர்ந்து தென் சீன கடல் பிராந்தியத்தில் அமைதியற்ற நிலைமையை உருவாக்கியுள்ளது.

  • கனகசபை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here