“கன்வார் யாத்திரை” என்பது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித தலங்களில் இருந்து நீர் எடுத்து வந்து சிவன் கோவில்களில் பூஜை செய்து வழிபடும் ஒரு நிகழ்வு. இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் பல்வேறு புனித தலங்களில், நீர் நிலைகளில், ஆறுகளில் இருந்து “தீர்த்தம்” எடுத்து வந்து கோவில்களில் உள்ள சாமி சிலைகளுக்கு ஊற்றி வழிபடும் நிகழ்ச்சியை போன்றது.
டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீப காலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த கன்வார் யாத்திரையை மேற்கொள்வது வழக்கம். இந்த யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் மக்கள் சாப்பிட்டு விட்டு செல்வது என்பது வழக்கமான ஒன்று. இப்படிச் சாப்பிடும் பக்தர்கள், உணவகங்களை, இந்து – இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்கள் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது.
இந்த நிலையில் கன்வார் யாத்திரை நடக்கும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் அவற்றின் உரிமையாளரின் பெயர் மற்றும் அங்கு வேலை செய்யக்கூடிய நபர்களின் பெயர்களை விளம்பரப் பலகையில் எழுதி கடைக்கு முன்பாக அனைவரும் அறியும் வண்ணம் வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து இருந்தன.
இஸ்லாமியர்களின் உணவகங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம் இந்து முஸ்லிம் பிளவை ஆழப்படுத்த வேண்டும் அதன் மூலம் இந்து மத வெறியை கிளப்பி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாத்திரை செல்லும் பக்தர்கள் இது முஸ்லிம்களின் உணவகம் என்பது தெரியாமல் உணவருந்தி விட்டு மன வருத்தப்படுவதாகவும் அப்படி வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதாகவும் சங்கிகள் தரப்பிலிருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் இஸ்லாமியர் கடைகளில் சாப்பிடக்கூடாது என்று இந்து பக்தர்கள் நினைப்பதில்லை என்பதுதான் உண்மை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் உள்ள இஸ்லாமியர்கள் கன்வார் யாத்திரை செல்பவர்களுக்கு பைகாம்-இ-இன்சானியத் போன்ற இஸ்லாமிய உள்ளூர் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் “பண்டாரங்களை” (விருந்து) ஏற்பாடு செய்கின்றன. இந்த நகரில் இப்படி பல முகாம்கள் அமைத்து இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் விருந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த முசாஃபர் நகரில் 2013 ஆம் ஆண்டு இந்து மத வெறியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களின் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: ஹரியானா மதக்கலவரம்; பாஜகவின் திட்டம்!
இப்படி இந்து முஸ்லிம்களிடையே மிகப்பெரும் பிளவை ஏற்படுத்தி மாபெரும் கலவரத்தை நடத்திய இடத்திலேயே இந்து முஸ்லிம்களுக்கு இடையே மிகவும் இணக்கமான நல்லுறவு இருந்து கொண்டிருக்கிறது என்பதும் இஸ்லாமியர்களின் உணவு முகாம்களில் இந்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உணவு உண்டு செல்கின்றனர் என்பதும் பல ஆண்டுகளாக சங்கிகளின் மனதில் மிகப்பெரும் ஆத்திரத்தை கொழுந்து விட்டு எரியச் செய்தபடி இருக்கின்றன.
இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்துமத வெறியர்களின் செல்வாக்கு பெருமளவு சரிந்து விட்ட நிலையில் அதை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்து, இஸ்லாமியர்களின் உணவகங்கள் என்பது மக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்யும் காவி அரசுகள் வெளியிட்டு இருந்தன.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரக்கு 22-07-2024 அன்று இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
படிக்க: கலவரம் செய்ய காத்திருக்கும் சங்பரிவார் கும்பல்!
கலவரங்கள் மூலம் கட்சியை வளர்க்கும் காவி பயங்கரவாதிகள் தொடர்ந்து அதே வழி முறையில் கட்சியை வளர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு செல்வாக்கு இல்லாத பகுதிகளில் கால் ஊன்றுவதற்கும் ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மீண்டும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் இந்த வழிமுறையை தொடர்ந்து கைகொள்வார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காவிகளின் கலவர முயற்சியை – இந்து இஸ்லாமிய மத வெறியை கிளப்பி நாட்டு மக்களை கூறு போடும் முயற்சியை சட்ட ரீதியாக மட்டும் எதிர்கொண்டு வீழ்த்தி விட முடியாது. இந்தக் கலவரத்தை நடத்துவதற்கு என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு குண்டர் படையை தயார் செய்து வைத்துள்ளது. இந்தப் படையை மோதி வீழ்த்தும் வகையில் மக்களும் பாசிச எதிர்ப்பாளர்களும் தம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
அவ்வாறு செய்யவில்லை எனில் பாசிசத்தின் கோர தாண்டவத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.
— குமரன்
தகவல்: TheWire