ன்பு தோழர்களே! பெரியோர்களே! நண்பர்களே! தாய்மார்களே!

அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘கம்பன் விழாவில்’ கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இவ்வாறு கூறினார்.  “திராவிடர் மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனை பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இராம காவியம். சமத்துவத்தையும், சமூக நீதியையும்  எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன். பெரியாருக்கு முன்னால்,  அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு முன்னால், தற்கால முதல்வர் தளபதி ஸ்டாலினுக்கு முன்னால், வெகு நீண்ட காலத்திற்கு முன்பே சமூக நீதியையும் சமத்துவத்தையும் போதித்தவர் ராமர். ஆக, “திராவிட மாடல்” ஆட்சியின் முன்னோடி ராமன்…”  என்ற பாணியில் திராவிட இயக்கத்தின் அடிப்படையே அறியாதவராக பேசியிருக்கிறார்; பேட்டியும் அளித்திருக்கிறார் அமைச்சர் ரகுபதி.

ராமன் அவனது தகப்பன் தசரதன் வாழ்ந்த காலம் திரேதாயாயுகக் காலம் என்கிறார்கள். அக்காலத்தில் மனித குலமே உருவாயிற்றா என்பது தனிக் கேள்வி. ஏனெனில் அக்காலம் என்பது 12 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பிற்காலத்தில் கட்டுக் கதைகளை உருவாக்கி கற்பனை பாத்திரங்களை உருவாக்கி பார்ப்பன பண்பாட்டை  உயர்த்திப் பிடிக்க இந்த குள்ளநரி கூட்டம் சதி செய்தது. அதில் வெற்றியும் ஈட்டியது. இராமாயணம் என்பது “ஆரியர் – திராவிடர்” போராட்டம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களே தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஒரு பார்ப்பனச் சிறுவன் இறக்கிறான். அதற்கு காரணம், சம்பூகன் என்ற சூத்திரன் காட்டினில் தவம் இருப்பதே எனக் குற்றம் சுமத்தி சிறுவனின் தகப்பன் ராமனிடம் முறையிடுகிறான். இது  வர்ணாசிரமத்திற்கு விரோதமாயிற்று என்பதை உணர்ந்த ராமன், விரைந்து காட்டிற்குள் செல்கிறான். அங்கே ஒரு மரக்கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி சூத்திர சம்பூகன் தவம் மேற்கொண்டிருக்கிறான். உடனே சம்பூகனை ராமன் வாளால் வெட்டி கொன்றான் என்றும், மறைந்திருந்து வில் அம்பை ஏவி கொன்றான் என்றும், கதை அளக்கப்பட்டுள்ளது. அதன் பின் பார்ப்பான சிறுவன் உயிர் பெற்று எழுந்தானாம். இது எவ்வளவு ஜோடிக்கப்பட்ட கதை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ராமன் சமூக நீதியின் காவலன் முன்னோடி என்றெல்லாம் வாய்கிழிய ஓலமிடும் கனம் அமைச்சர் ரகுபதி இதற்கு என்ன விடையளிக்க போகிறார்? இதுதான் சமூக நீதியா?

இவர் போற்றிப் புகழும் ‘அறிஞர் அண்ணா’ ராமாயணத்தை “தீ பரவட்டும்” என்ற நூலின் மூலம் நார் நாராய்க் கிழித்தெறிந்துள்ளாரே அதனை இந்த அமைச்சர் படித்தாவது பார்த்திருப்பாரா?

ராமாயணமும் அதன் மூல கதாநாயகனுமான கற்பனை படைப்பான ராமனும் திராவிடர்களை – குறிப்பாக சூத்திர – பஞ்சமர்களை இழிவு படுத்துவதற்காகவே உருவகப்படுத்தப்பட்டவை என்பதை நன்கு உணர்ந்த தந்தை பெரியார், சேலத்தில் ராமன் படத்தை செருப்பால் அடித்த வரலாறும், சென்னை பெரியார் திடலில் ராமன் படத்தை தீயிட்டு கொளுத்திய வரலாறும் அமைச்சர் ரகுபதிக்கு தெரியுமா? தெரியாதா?

படிக்க: சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

வடநாட்டில் பார்ப்பனர்களின் முன்னோடி ராமனுக்கு, ராம லீலா என்ற விழா எடுத்த போது, தமிழ்நாட்டில் தந்தை பெரியார்  “திராவிடர்களின் சூத்திரர்களின்  முன்னோடி” ராவணனுக்கு “ராவண லீலா” என சென்னை பெரியார் திடலில் விழா எடுத்ததும், அவர் மறைவிற்கு பின்னரும் கூட மணியம்மையார் “இராவண லீலா”  நடத்தியதும் அமைச்ச ரகுபதிக்கு தெரியுமா? தெரியாதா?

1968 – 69 களில் நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அண்ணாவின் மறைவுக்கு பின் முதல்வர் பொறுப்பேற்று முதன்முறையாக கலைஞர் காரைக்குடிக்கு வருகை புரிகிறார். “கம்பன் விழா”வை அறிமுகப்படுத்திய காரைக்குடி ‘கம்பன் அடிப் பொடி’ சா கணேசனும் மற்றவர்களும் காரைக்குடியில் கம்பன் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவிற்கு தான் முதல்வர் என்ற முறையில் கலைஞர் அழைக்கப்பட்டு இருந்தார். காரைக்குடி அருணாச்சலா தியேட்டர் அருகில் என எண்ணுகிறேன்… பல்லாயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் நானும் கல்லூரியில் திராவிடர் மாணவர் கழகத்தை சேர்ந்த சிலரும் பங்கேற்றிருந்தோம்!

படிக்க: குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்

விழாவில் கலைஞர் உரையாற்றும்போது, விழித்தழைக்கப்பட வேண்டியவர்களை எல்லாம் பெயர் கூறி ‘அவர்களே! அவர்களே!’ என்று கூறிவிட்டு இப்படி துவங்கினாரே பார்க்கலாம். “இங்கே பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடியிருக்கிறீர்கள். இவர்களில் பலர் மனதிற்குள் என்னை பற்றி முனுமுனுத்துக் கொண்டிருப்பதை நன்றாகவே உணர்கிறேன். ‘இவன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு இராமாயணத்தை தீயிட்டு கொளுத்த வேண்டும்; எரித்து சாம்பலாக்க வேண்டும் என்று பேசியவனாயிற்றே… இவனைப்போய் கம்பன் விழாவில் சிறப்புரையாற்ற அழைக்கலாமா! என்று தானே மனதிற்குள்  முனுமுனுக்கிறீர்கள். விடை கூறுகிறேன் கேளுங்கள்! இதே காரைக்குடி கம்பன் விழா கூட்டத்திலும் உரக்க ஒலிக்கிறேன். கம்ப இராமாயணமோ, வால்மீகி ராமாயணமோ தீயிட்டுக் கொளுத்தி எரிக்கப்பட வேண்டிய நூல்களே! (பலத்த கரவொலி). அது ஒரு கற்பனை காவியம். ஆரியர் – திராவிடர் (சூத்திரர்) பிளவை கூர்மையைப்படுத்துவதற்காக உருவகப்படுத்தப்பட்ட முழுக்கவும் கற்பனை காவியம். அப்படி எனில் இப்படி ஒரு எதிர்மறை கருத்தை வைத்துக் கொண்டுள்ள நீ கம்பன் விழாவில் பங்கேற்க – சிறப்புரை நிகழ்த்த இசைவு தெரிவிக்கலாமா? என்று கூட சிலர் முனுமுனுப்பதை உணர்கிறேன். கம்பனின் இலக்கிய திறனை – கவித்திறனை – கற்பனை திறனை எடுத்து விளக்கவே இவ்விழாவில் பங்கேற்றுள்ளனே தவிர ராமாயணம் உண்மை வரலாறு என்ற அடிப்படையில் அல்ல என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன்…” (பலத்த கரவொலி)

இந்நிகழ்வு இன்றும் என் மனதில் பசுமையாக ஆழப் பதிந்துள்ளது.

இவ்விதக் கலைஞரின் கருத்துக்களுக்கு மாற்றாக அமைச்ச ரகுபதி என்ன சொல்லப் போகிறார்?

இந்த நிலையில் தான் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட (அவர்கள் மொழியில் சொல்வதெனில் சூத்திர பஞ்சமர்)  மக்களுக்கு எதிரான கண்ணோட்டத்தில் பார்ப்பன ராஜ்ஜியம் – அதாவது “ராம ராஜ்ஜியம்” அமைக்க ஆர்எஸ்எஸ் – பிஜேபி – இந்துத்துவா மதவெறிச் சங்கிகள் கூட்டம் கூப்பாடு போடுகின்றன.

நிலமைகள் எல்லாம் இவ்வாறு நீண்டு கிடக்க, “சமூக நீதியின் முன்னோடி” என்றும் “சமத்துவத்தின் முன்னோடி” என்றும் “திராவிடம் மாடலின் முன்னோடி” என்றும் ராமனுக்கு ஒளிவட்டம் சூட்டியிருக்கும் கனம் அமைச்சர் ரகுபதியின் செயல் அருவருப்பாக உள்ளது. இச்செயலுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது உண்மையான “திராவிட மாடல் அரசு” எனில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்!

  • எழில் மாறன்

வெகு மக்களின் ஆன்மீகம் சார்ந்த கடவுள் நம்பிக்கை என்பது வேறு; அதில் நாம் குறுக்கிட விரும்பவில்லை. அதே நேரத்தில் அறிவியல் ரீதியான உண்மைகளை உடைத்துரைப்பதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

முதலில் ராமாயண வரலாறு உண்மை வரலாறா? என்பதை ஆன்மீக உணர்வாளர்கள் கூட அறிவியல் ரீதியாக உணர முன்வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here