‘விடுதலை’ படத்தில் காவல்துறை வன்முறையை அதிகமாக காட்டுகிறார்கள் என கொந்தளித்த சமூகத்துக்கு ஒரு சம்பவம்:

அரவிந்த்சாமி என ஓர் இளைஞர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். திருவிடைமருதூர் இடையநல்லூரை சேர்ந்தவர். ஊரிலேயே M Phil படித்த முதல் நபர் அவர். பட்டமளிப்பு விழாவில் Silver Medal வழங்கப்பட இருந்ததால் உற்றாரையும் நிகழ்வுக்கு அழைத்து செல்கிறார்.

விழா அரங்குக்குள் கிட்டத்தட்ட 1500 மாணவர்கள். அரவிந்தசாமி அவர்களுக்கு நடுவே சென்று அமர்கிறார். நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி வந்து பட்டமளிக்க இருக்கிறார். ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடத்திக் கொண்டிருக்கிறது.

திடுமென ஓர் ஐந்து காவலர்கள் அரங்குக்குள் வருகின்றனர். அரவிந்த்சாமியிடம் வந்து அவரை எழ வைத்து சட்டைப் பை, கால்சராய் எல்லாம் பரிசோதிக்கின்றனர். பரிசோதனை, 1500 மாணவர்களுக்கு முன்னிலும் நட்ட நடுவே அரவிந்தசாமி அமர்ந்திருந்த இடத்திலேயே நடக்கிறது. ஏதேனும் அணுகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பாரா என்றெல்லாம் சோதிக்கவில்லை. கறுப்பு துணி வைத்திருக்கிறாரா என்பதற்குதான் அந்தச் சோதனை.

சற்று நேரம் கழித்து மீண்டும் ஓர் ஐந்து காவலர்கள். அரவிந்தசாமியை அழைத்து அரங்கில் பின்னால் செல்கின்றனர். அரவிந்தசாமியின் தலைமுடி படியாமல் இருந்ததால், முடிக்குள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்ந்திருக்கிறார்கள். நல்லவேளை முடியெல்லாம் கறுப்பாக இருப்பதால், ஆளுநர் வந்ததும் முடிகளை பிடுங்கி கறுப்பு காட்டுவாரோ என்ற சந்தேகம் காவலர்களுக்கு எழவில்லை. கைக்குட்டை வரை துழாவி பரிசோதனை செய்தாகிவிட்டது.

மூன்றாம் முறை சில காவலர்களும் மப்டியில் சபாரி உடையில் இருந்த ஒரு காவலரும் அரவிந்தசாமியை அரங்கு விட்டு வெளியே அழைத்து செல்கின்றனர். அரங்கத்துக்கு அருகே பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே இருக்கும் ஒரு மின்சார அறைக்குள் அழைத்து சென்று பூட்டுகின்றனர்.

பட்டமளிப்புக்கான அங்கி, சட்டைப் பை, கால்சட்டை என மீண்டும் பரிசோதனை. ஒன்றும் தேறவில்லை. அங்கி கழற்றப்பட்டு, சட்டையும் கால்சட்டையும் கழற்ற சொல்கின்றனர். அரவிந்தசாமி கண்டனம் தெரிவிக்க, மீறி உடைகள் கழற்றப்படுகிறது. உள்ளே கறுப்பு பனியன், கறுப்பு ஜட்டி!

ஆளுநர் ரவிக்கு கறுப்பு பனியனையும் கறுப்பு ஜட்டியையும் கழற்றி காட்டிவிட்டால் என்ன செய்வது? காவலர்களின் அடிமாட்டு மூளை அற்புதமாக யோசிக்கிறது. பனியனையும் ஜட்டியையும் கழற்ற சொல்கின்றனர். தோழர் காட்டம் காட்டுகிறார். ‘உள்ளாடையை உருவி யாராவது கறுப்புக்கொடி காட்டுவார்களா’ என்கிறார். அவர் வெள்ளிப்பதக்கம் வெல்லும் மாணவர், அறிவுப்பூர்வமாக கேட்கிறார். காவலர்கள் எல்லாம் தற்குறிகளாயிற்றே. எனவே பலனில்லை.

அரவிந்தசாமியின் ஜட்டிக்குள் கையை விடுகிறது போலீஸ். ஆளுநர் ரவிக்கான பாதுகாப்பை ஓர் இளைஞனின் ஜட்டிக்குள் தேடுகிறது அரசு.

சிறைக்குள் அடைக்கப்படும் முன் செய்யப்படும் பரிசோதனை போல, பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒரு மாணவரின் ஜட்டிக்குள் கை விட்டு முன்னும் பின்னும் துழாவுகிறது காவல்துறை. அரவிந்தசாமி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

ஒரு சாமானியனை மனிதத்தன்மைக்கும் கீழாக நடத்தி அதிர்ச்சியுற வைத்துதான் தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் அதிகாரம்!

தொடர்ந்து அரவிந்தசாமி அறைக்குள்ளேயே பூட்டி வைக்கப்படுகிறார். அரங்குக்குள் விடப்படவில்லை. பிற்பகலில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுமிகு சான்றோர் கூட்டம் ஓர் அற்புதத்தை செய்கிறது. பட்டமளிப்பு பட்டியலிலிருந்து அரவிந்தசாமியின் பெயரை நீக்குகிறது. உடனே காவல்துறை அடுத்ததாக ‘உன் பேரே லிஸ்ட்ல இல்லியாமே.. ஏன் வந்தே?’ என நக்கல் கேள்வி எழுப்புகிறது.

அரவிந்தசாமிக்கு உதவ வந்த தோழர்களையும் மிரட்டி விரட்டுகிறது காவல்துறை. பிறகு அவரை வாகனத்தில் ஏற்றியமர்த்தி சில மணி நேரங்களுக்கு ஊரை சுற்றிக் காட்டி வந்து விடுகிறது.

சம்பவம் நடந்த தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் Vice Chancellor தமிழிசையால் பணிக்கமர்த்தப்பட்ட இந்துத்துவ ஆதரவாளர். இடையநல்லூரை சேர்ந்த அரவிந்தசாமி பட்டியல் சாதியை சேர்ந்தவர். ஓர் ஊரிலிருந்து ஓர் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து M Phil முடித்து விட்டு வெள்ளிப்பதக்கம் பெற வந்த இளைஞரை இச்சமூகமும் அமைப்பும் அரசியலும் கொண்டு வந்து நிறுத்திய இடம் இதுதான்.

இதுதான் அமைப்பு. இதுதான் இதுதான் காவல்துறை. இதுதான் அரச வன்முறை.


இதையும் படியுங்கள்: 


அரச வன்முறைக்கு கண்ணை மூடிக் கொண்டு போவதால் ஒன்றும் நடந்து விடாது. குறைந்தபட்சம் அதைப் பற்றி பேச வேண்டும். பேச வேண்டுமெனில் அதைப் பற்றி தெரிய வேண்டும். தெரிய வேண்டுமெனில் எவரேனும் அதை சொல்ல வேண்டும். சொல்ல வேண்டுமெனில் அந்த வன்முறையின் முழுத்தன்மையும் தெரிய வேண்டும்.

ஊடகங்களில் இச்செய்தி வெளியாகவில்லை. இணைய ஊடகங்களிலும் பெரிய அளவில் இல்லை.

இந்திய மாணவர் சங்க தோழர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மனித உரிமை அமைப்புக்கு, shrc@tn.gov.in என்கிற மின்னஞ்சலில் சம்பவம் குறித்து புகாரை அனுப்பும் இயக்கமும் நடத்துகின்றனர்.

நாமும் செய்வோம்.

சம்பவம் குறித்த தகவலையும் குழுக்களில் பரவலாக பகிரவும்.

அரச வன்முறை தோலுரியட்டும் !

முகநூல் பதிவு

  • Rajasangeethan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here