இன்றைய தலைமுறை இளைஞர்கள் கிரிக்கெட்டில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா, சினிமாவில் ஆர்யா அல்லது சூர்யா, இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா அல்லது அனிருத் போன்றவர்களை தெரிந்து வைத்திருப்பார்கள்.
ரூபாய் 5000 முதல் 50,000 வரை மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல்கள் சரளமாக சந்தையில் புழங்குவதால் அதை வாங்கி வைத்து கொண்டு அன்றாடம் 1.5GB, 2GB நெட்வொர்க் வைத்துக்கொண்டு யூ டியூப் சேனல்களையும், இன்ஸ்டாகிராம் பக்கங்களையும், முகநூல் பக்கத்தில் வருகின்ற ரீல்ஸ்களையும் பார்த்து பொழுதைக் கழிக்கிறார்கள்.
எனினும் இவர்கள்தான் இந்தியாவில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கப் போகின்ற சுட்டெரிக்கும் சூரிய வெப்பமாக உதித்து வருகிறார்கள்.
இந்த இளைய தலைமுறையினரின் சிந்தனைகளை சீரழிப்பதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவம் பல்வேறு வகையிலான கலாச்சார போதைகளையும், காட்சி போதைகளையும், தவிர நேரடியாக குடிபோதையையும் இறக்கி அவர்களை தனது பிடிக்குள் வைத்துள்ளது.
நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதை பற்றியோ அல்லது நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் தனது வாழ்வாதாரத்தை இழந்து நாடோடிகளாக புலம் பெயர் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு தன்னை விற்பதற்கு நாடு முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பதைப் பற்றியோ, தொழிலாளர்கள் வாழ்க்கையை நாசமாக்கக் கூடிய சட்டத் திருத்தங்கள் பற்றியோ, கருத்துச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றிற்கு முற்றாக கல்லறை கட்டக்கூடிய குற்றவியல் சட்ட திருத்தங்களைப் பற்றியோ புரிந்து கொள்வதற்கு நேரமில்லை அல்லது புரிந்து கொள்வதற்கு மனம் இல்லை.
நாட்டுப்பற்று, தேசப்பற்று என்பது அவர்களின் அகராதியில் 30 வயதுக்கு மேற்பட்ட பூமர்களின் பேச்சு என்று தான் பொது கருத்தாக மாற்றப்பட்டுள்ளது.
எதிர்காலம், கருத்துச் சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், சோசலிசம், அறிவியல் பூர்வமான புதிய உலகத்தை உருவாக்குவது, சமத்துவத்தை ஏற்படுத்துவது என்பதை பற்றிய கொள்கைகள், கோட்பாடுகள், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் சாத்தியமில்லாத சொற்களாகவும், லட்சியங்களாகவும் இந்த இளைஞர்களிடம் கருத்துருவாக்கம் செய்யப் பட்டுள்ளது.
’நான், எனது’ என்ற கண்ணோட்டம் இயல்பிலேயே பாசிசத்தை ஆதரிக்கின்ற உளவியலை உருவாக்குகின்ற, அச்சமூட்டக்கூடிய நடைமுறையாக மாறியுள்ளது. அருவருக்கத் தக்க தனிநபர் வாதம் கூட்டுச் சிந்தனையை புறக்கணிக்கின்ற மேட்டிமைத்தனம் ஆகியவை இளைஞர்களின் சிந்தனையை சீரழிப்பதில் முன்னிலை பங்கு வகிக்கிறது.
1947 க்கு முன்பாக இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு போராடிய எண்ணற்ற இளைஞர்கள், படித்தவர்கள் முதல் பட்டதாரிகள், உத்தரவாதமான வேலையில் இருந்தவர்கள், அனைவரும் படிப்பு, பதவி அனைத்தையும் உதறியெறிந்து விட்டு தேசத்தின் விடுதலை மட்டுமே ஒரே நோக்கம்; ”விடுதலை விடுதலை” என்ற முழக்கம் வீதிகளிலும் ஆர்ப்பரித்து நின்றது.
ரத்தம் சிந்தி போராட்டங்களில் பல துப்பாக்கிச் சூடுகளை எதிர்கொண்டு, வாழ்க்கையை இழந்து, பொருளாதார ரீதியாக பல நெருக்கடிக்கு உள்ளாகி கிடைத்தது உண்மையான சுதந்திரம் அல்ல! ஆனால் பெயரளவிற்கு ஒரு சுதந்திரம் கிடைத்தது.
இந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் பற்றியோ, வாழ்க்கையை துச்சமாக உதறியெறிந்து விட்டு நாட்டின் விடுதலை ஒன்றே இன்றைய தேவை என்று முழங்கிய வீரர்களைப் பற்றியோ, இளைஞர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அந்த குரல்கள் சமூகத்தில் மிக மெல்லிய குரலாக ஒடுக்கப்பட்டு பரவலாக்கப்படுவதில்லை.
படிக்க:
🔰 நேபாளத்தில் நடக்கும் அரசியல் அசிங்கங்கள்!
🔰 முதலாளித்துவ நாடாளுமன்ற சீரழிவின் கீழ் நேபாளம்!.
இந்த சூழலில் 2008 ஆம் ஆண்டு 300 ஆண்டுகால மன்னர் ஆட்சியை தூக்கியெறிந்து விட்டு ஜனநாயக குடியரசு ஒன்றை உருவாக்கிய நேபாளத்தில் கால் நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே கம்யூனிசத்தின் பெயரால் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் முதல் ஏற்கனவே ஊழலில் மூழ்கி திளைத்து அம்பலப்பட்டு நாறிய நேபாள காங்கிரஸ் வரை பல்வேறு முறை அரசாங்கத்தை கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். ஆட்சிக் கவிழ்ப்புகளும், புதிய புதிய கூட்டணிகளும் தோன்றி நேபாளத்தின் தலைவிதியை மாற்றினர்.
இந்த ஆட்சிகளின் கீழ் பிரதானமாக உலகம் முழுவதும் பிரதிபலிக்கின்ற வேலையில்லா திண்டாட்டம், தலை விரித்தாடுகிறது. பொருளாதார ரீதியாக விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டுள்ளது. வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை எனும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் படாடோபமாக வாழ்வதைக் கண்டு இளைஞர்கள் மத்தியில் குமுறல்கள் வெடித்துள்ளது.
அத்தகைய குமுறலில் ஒன்றுதான் குரல் நேபாளத்தில் உள்ள ஹோலி பெல் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா. அங்கு பேசிய மாணவர் பெயர் அபிஸ்கர் ரவுத். ‘‘புதிய நேபாளத்தை உருவாக்க இங்கு பல கனவுகளுடன் உங்கள் முன் நிற்கிறேன். நம்பிக்கை, ஆர்வம் என்ற நெருப்பு எனக்குள் எரிகிறது. ஆனால், என் இதயம் கனக்கிறது. ஏனெனில், அந்த கனவுகள் கைநழுவி போகுமோ என்ற அச்சம்.
🎥 ‘Dream of Building New Nepal’ Nepali Student’s Speech Goes Viral#ViralVideo #NepaliStudent #Nepal #TheStatesman pic.twitter.com/M1vzaQZlu8
— The Statesman (@TheStatesmanLtd) March 15, 2025
இந்த நாட்டில் பிறந்தோம். நம்மை வளர்த்த இந்த நேபாளத் தாய்க்கு என்ன செய்தோம். இந்த தாய் திருப்பி என்ன கேட்கிறது? நேர்மை, கடின உழைப்பு, நமது பங்களிப்பு… அவ்வளவுதான். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பின்மை, அரசியல் கட்சிகளின் சுயநல விளையாட்டு, ஊழல் போன்ற சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறோம். ஊழல் நமது எதிர்காலத்தின் ஒளியை அணைத்துவிடும் ஒரு வலையைப் பின்னியுள்ளது’’ என்று பேசியிருக்கிறார்.இந்த உரை நேபாளத்தில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது;
நாட்டுப்பற்று, தேசப்பற்று என்று பேசினால் அது இரண்டு வகையாக உள்ளது என்பது உண்மைதான். ஒன்று அந்த நாட்டில் உள்ள முதலாளிகளின் நலனை கணக்கில் கொண்டு முதலாளித்துவ தேசியவாதம் பேசுகின்ற கட்சிகள், அதன் பிரதிநிதிகள், அதன் சித்தாந்த குருமார்கள் முன்மைக்கின்ற தேசியம் என்பது ஒரு வகை. உலக அளவில் நாடுகளை சூறையாடுகின்ற ஏகாதிபத்தியங்களை எதிர்த்து சுதந்திரமான, சுயசார்பு தன்மை கொண்ட தேசியத்தை உருவாக்குவது என்பது மற்றொரு வகை என இரண்டு வகையில் உள்ளது.
இதில் சுயசார்பு சிந்தனையுடன் தேசபக்தியை முன் வைக்கப்படுபவர்கள் ஒடுக்கப்படுவதும், முதலாளிகளின் நலனிலிருந்து தேசபக்தியை முன்வைக்கின்ற போலி தேசியவாதிகள் ஊக்குவிக்கப்படுவதும் தான் உலகளாவிய நிகழ்ச்சிப் போக்காகவும் பல்வேறு நாடுகளின் வரலாறாகவும் உள்ளது.
இத்தகைய சூழலில் நேபாளத்தில் ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயக குடியரசு என்ற போர்வையில் நடக்கின்ற முதலாளித்துவ அடிவருடிகளின், கார்ப்பரேட் கைக்கூலிகளின் ஆட்சியை தூக்கியெறிவதற்கு எழுப்பப்பட்டுள்ள போர் குரலாக இதனை ஆதரிப்போம்.
மீண்டும் மன்னர் ஆட்சியே தேவை என்ற கருத்து நேபாளத்தில் அதிகரிப்பது மிகவும் பிற்போக்குத்தனத்தை வலிய வரவேற்பதாகும் என்பதை எடுத்துச் சொல்லுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஆதரித்து நிற்போம்.
- முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி