நேபாளத்தைப் பொறுத்தவரையில், ஓட்டுக் கட்சி அரசியல் மாற்றங்கள் ஒன்றும் புதிது அல்ல. 2008-இல் மன்னராட்சி முறை அகற்றப்பட்டு புதிய பாதைக்கு நேபாளம் திரும்பிய பின்னர் கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறியிருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போலவே இப்போது மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய அமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியே வருகிறது.
கிபி 1768 முதல் 2008 வரையிலான 240 ஆண்டுகளுக்கு மேலாக ஷா வம்சத்தின் பிற்போக்கு மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த நேபாளத்தில், மன்னராட்சியை தூக்கி எறிந்து மாவோயிஸ்டுகள் தற்காலிக இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கினர்.
மன்னராட்சியின் கீழ் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம் கிழித்தெறியப்பட்டு புதிய அரசியல் நிர்ணய சபையின் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த அரசியல் நிர்ணய சபை மூலமாக புதிய அரசியலமைப்பு சட்டம் வரைவதில் நேபாளத்தில் காலதாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பாட்டாளி வர்க்க இயக்கம் புரட்சிகர அரசியலின்படி கீழிருந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற வழிமுறையை கையாளும் போதே, குறிப்பிட்ட சில தருணங்களில் மேலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொருத்தமான வடிவத்தை தோழர் லெனின் காலத்திலிருந்து மேற்கொண்டு வருகிறது. தற்காலிக புரட்சிகர அரசாங்கம் என்ற வடிவத்தின் கீழ் மேலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு வழிமுறையாக உள்ளது.
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் மன்னராட்சியை தூக்கி எறிந்த பின்னர் மேலிருந்து அமல்படுத்தக்கூடிய செயல் தந்திரத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த செயல்தந்திரத்தை அமல்படுத்தும் போது இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள் இதற்கு எதிராக விமர்சித்து வந்தனர்.
இந்த விமர்சனத்துக்கும் இந்திய போலிக் கம்யூனிஸ்டுகளான வலது, இடது கட்சிகளின் நாடாளுமன்ற சரணடைவு பாதை பற்றியும் 2008 முதல் 2014 வர புதிய ஜனநாயகம் இதழில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளோம்.
2014 ஆண்டு ஜனவரி இதழில், அரசியல் நிர்ணய சபையின் இரண்டாவது தேர்தலில் மாவோயிஸ்டுகள் தோல்வியடைந்ததை ஒட்டி இவ்வாறு எழுதியிருந்தோம். “நாம் இப்படிக் கூறும் அதேசமயம், இந்தத் தோல்விக்கு வேறொரு எளிதான காரணத்தை இந்திய மாவோயிஸ்டுகள் முன்வைக்க வாய்ப்புண்டு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சிக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த எழுச்சியினையடுத்து நேபாள மாவோயிசக் கட்சி மன்னராட்சியைத் தூக்கியெறிந்து அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் திட்டத்தை முன்வைத்து ஏழு கட்சி கூட்டணியோடு அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. மாவோயிசக் கட்சியினரின் அந்நடவடிக்கையை வலது சந்தர்ப்பவாத சரணடைவு எனக் குற்றஞ்சுமத்திய இந்திய மாவோயிஸ்டுகள், தற்போதைய இத்தோல்விக்கு அதையே காரணமாக கூறக்கூடும். இது மட்டுமின்றி, இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே சொன்னோம் என்று இன்றைய பின்னடைவுக்கு வியாக்கியானம் அளிக்கவும் கூடும்.
நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு – ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் நோக்கத்தோடு நேபாள மாவோயிசக் கட்சி 1996 தொடங்கி மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், அப்புரட்சி 2005-06 ஆம் ஆண்டுகளில் ஒரு புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்தது. இற்றுவிழுந்து கொண்டிருந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டிய உடனடி அரசியல் கடமை முன்வந்தது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலைப் படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கனிந்திருந்தது.
அச்சமயத்தில் நேபாள மாவோயிஸ்டுகள் இப்பேரெழுச்சியைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு, தொடர்ந்து கிராமப்புற ஆயுத போராட்டங்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்தால், அக்கட்சி தனிமைப்பட்டுப் போயிருக்கும் என்பது மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அந்நிய சக்திகளால் மன்னராட்சி காப்பாற்றப்பட்டு, நேபாளப் புரட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.
நேபாள மாவோயிசக் கட்சி இந்த இடைக்கட்டத்திற்கேற்ப, “அரசியல் நிர்ணய சபையை நிறுவு; அதற்கான தேர்தலை உடனே நடத்து” என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரெழுச்சிக்குத் தலைமையேற்றதோடு, மன்னராட்சியை அகற்ற முன்வந்த ஏழுகட்சி கூட்டணியோடும் அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. இதன் விளைவாக நேபாளத்தில் இந்து மன்னராட்சி அகற்றப்பட்டதோடு, அந்நாடு மதச்சார்பற்ற குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இது, புதிய ஜனநாயகப் புரட்சி என்ற போர்த்தந்திரத்தை நிறைவேற்றும் வளர்ச்சிப் போக்கில் செயல்தந்திரரீதியாக மாவோயிஸ்டுகள் அடைந்த வெற்றியாகும்.
இதனையொத்த இடைக்கட்ட நிலைமை ரசியாவில் 1905-லும், சீனாவில் 1924-27 மற்றும் 1945-47 காலக் கட்டங்களிலும் எழுந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி 1924-27 காலக்கட்டத்தில் கோமிங்டாங் கட்சியோடு கூட்டணி அரசில் பங்கெடுத்திருந்தது; 1946 ஜனவரியில் தேசிய ஜனநாயக சட்டப்பேரவையை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியும் கோமிங்டாங் கட்சியும் கையெழுத்திட்டன.
1917 பிப்ரவரியில் ரசியாவில் ஜாராட்சி தூக்கியெறியப்பட்டாலும், அரசுக் கட்டமைவு முழுவதும் வீழ்த்தப்படவில்லை. குறிப்பாக, ஜாராட்சியில் இருந்த இராணுவம் கலைக்கப்படாததோடு, முதல் உலகப் போரிலும் அது ஈடுபட்டு வந்தது. ஜார் தூக்கியெறியப்பட்டதைப் புரட்சி என ஏற்றுக்கொள்ளும்பொழுது, நேபாளத்தில் பழைய இராணுவமும் அரசுக் கட்டமைவும் இன்னும் நீடித்திருப்பதைக் காட்டி, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து மாவோயிஸ்டுகள் அடைந்த செயல்தந்திர வெற்றியை அங்கீகரிக்க மறுப்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல; புரட்சி நெளிவுசுளிவின்றி நேர்கோட்டுப் பாதையில்தான் பயணிக்கும் என்று கருதும் வறட்டுத்தனமுமாகும்.” இவ்வாறு நேபாளத்தின் தற்காலிக புரட்சிகர அரசாங்கமான கூட்டுத்துவ மக்கள் ஜனநாயக குடியரசு (சமஸ்டி குடியரசு) என்ற வடிவத்தை ஆதரித்து எழுதி இருந்தோம்.
படிக்க:
நேபாளத்தில் நடக்கும் அரசியல் அசிங்கங்கள்!
ஆனால் 2007-ல் அதிகாரத்தை கைப்பற்றிய பிரசண்டா-பட்டராய் இருவரும் சிறிது காலம் சரியான திசைவழியில் சென்றாலும், 2010 ஆம் ஆண்டு கட்சியின் பலூங்டார் பிளீனத்தின் தீர்மானத்தை கைவிட்டு மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்தனர். அப்போது துவங்கிய நேபாளத்தின் அரசியல் சந்தர்ப்பவாத போக்குகள் இன்று வரை நீடிக்கின்றது என்பதை தான் தற்போதைய ஆட்சி மாற்றம் நிரூபிக்கின்றது.
நேபாளத்தைப் பொறுத்தவரையில், ஓட்டுக் கட்சி அரசியல் மாற்றங்கள் ஒன்றும் புதிது அல்ல. 2008-இல் மன்னராட்சி முறை அகற்றப்பட்டு புதிய பாதைக்கு நேபாளம் திரும்பிய பின்னர் கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறியிருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போலவே இப்போது மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரும், முன்னாள் கொரில்லா தலைவருமான புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைய, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கட்க பிரசாத் சர்மா ஓலி 4-ஆவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.
உலக மேலாதிக்க போர்வெறியனான அமெரிக்காவை எதிர்த்தும், பிராந்திய வல்லரசான இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும் 21 ஆம் நூற்றாண்டில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவான நேபாளத்தின் புரட்சி கட்சிக்குள் உள்ள முதலாளித்துவ பாதையாளர்களான சந்தர்ப்பவாதிகள், அதிகார வெறியர்களின் கையில் சிக்கி சீரழிந்தது என்பதுதான் வரலாறு.
எந்த மேலாதிக்கத்திற்கு எதிராக போராடினார்களோ அதனை கைவிட்டு இந்தியாவுடன் நட்பு பாராட்டுகின்ற சமரச சரணடைவு பாதையை மேற்கொண்ட நேபாள கூட்டு அரசாங்கம் தற்போது பல மடங்கு பின்னடைந்து வருகிறது. இந்தியாவின் மோடி ஆதரவு ஊடகங்களான இந்தியா டுடே உள்ளிட்டவை நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் நேசிக்கிறார்கள் என்று எழுதுகின்ற அளவிற்கு இந்த போலி கம்யூனிஸ்டுகள் போலி புரட்சியாளர்களின் கூட்டாட்சி சீரழிந்து கிடக்கிறது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்கள் யுத்தத்தை நடத்தி உலகின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், நேபாளத்தின் உழைக்கும் மக்கள் விடுதலை பாதையின் அடையாளமாகவும் திகழ்ந்த நேபாளம் மாவோயிச இயக்கம் சீரழிந்துள்ளது. இதற்கு எதிராக உட்கட்சிக்குள் போராட்டம் நடந்து வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.
இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க மேலாதிக்கத்தையும் உள்நாட்டில் கம்யூனிசத்தின் போர்வையில் பிற்போக்குத்தனமான ஆட்சி நடத்தி வரும் நேபாளத்தின் போலி கம்யூனிஸ்டுகளையும், போலி புரட்சியாளர்களையும் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
- முகம்மது அலி.