பத்திரிக்கைச் செய்தி

மனித உரிமை – மாநில உரிமையை பறிக்கும் என்.ஐ.ஏவை கலைத்திடு!
ஆள்தூக்கி ஊபா சட்டத்தை ரத்து செய்!
கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ தலைவர்களை விடுதலை செய்!

பி.எப்.ஐ அமைப்பின் மீது என்.ஐ.ஏ அமலாக்கத்துறை மூலம் நடத்தப்பட்ட ரெய்டு கைது நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சோதனை என்ற பெயரில் பாசிச நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உடனடியாக டெல்லி அழைத்து செல்லப்பட்டனர். பாசிச பாஜக. ஒன்றிய அரசின் இந்த பாசிச செயலை எமது மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தனது கார்ப்பரேட் நலன் சார்ந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்களையும், இந்து – இந்தி – இந்தியா என்ற பார்ப்பனப் பேரரசை நிறுவும் தனது திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களையும் ஒடுக்கவே தேசிய புலனாய்வு முகமை என்ற கொலைகார உளவு நிறுவனத்தை பயன்படுத்தி ஊபா சட்டத்தில் விசாரணையின்றி சிறையில் அடைத்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான இந்த செயலை அனுமதிக்க கூடாது.

ஆர் எஸ் எஸ் – பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் இந்திய ஒன்றிய ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சிறுபான்மை மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் வேலையை செய்து வருவதுடன் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாய் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒடுக்க வேண்டும், ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையிலே தற்போது என்.ஐ.ஏ ரெய்டுகளை நடத்தி வருகிறது.

இதன் மூலம் தனக்கு எதிரான நிலைப்பாடுகள் கொண்ட ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர அமைப்புகளையும் தடை செய்வது, மக்களை இந்த அமைப்புகளை நோக்கி நெருங்கிச் செல்ல விடாமல் அச்சுறுத்துவது என்ற நோக்கத்திற்காகவே SDPI மற்றும் PFI மீதான இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சொல்லிக் கொள்ளப்படும் பெயரளவிலான ஜனநாயகத்தினையும் மறுத்து எதிர்க்கட்சிகளே இல்லாத பாசிச நடைமுறையை அமுலாக்கத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இதற்கு எதிராக வினையாற்ற வில்லை எனில், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடமாடுவதும், உயிர் வாழ்வதுமே ஆபத்து என்ற நிலையை நோக்கி நகரும்.

இன்று இஸ்லாமியர்கள் மீது தொடங்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அடுத்தடுத்து கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடிகள் என்ற அனைவரின் மீதும் வரிசையாக பாயக் காத்திருக்கிறது. இதுதான் பாசிசத்தின் பயங்கரவாத முகம். சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு கல்லறை! போராடுபவர்களின் மீது அடக்குமுறை என்பதுதான் அதன் தாரக மந்திரம். ஆகவே, ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அறை கூவி அழைக்கிறோம்.

கடலூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் வருகிற 28-9-2022 அன்று ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here