ஆண்டு சிலவாக முப்பதே வயதில்
முடியெல்லாம் நரைத்திருக்க காரணம் கேட்கிறீர்
வாழ்க்கைக்கு என்மீது காதல் இல்லை
கானல் நீர் அளவேனும் மோகம் இல்லை
விருப்போடு அணைக்க யாருமில்லை
மலைபாம்பாய் அணைக்கத்தான் வாழ்க்கை பாதை
மண் கூடாய் கட்டிய விருப்பக் கோட்டை
வெறுங் கனவுகள் உரசவே இடிந்த யாக்கை
மானுட வரலாற்றில் எம் இலட்சியக் கப்பல்
பந்த உறவுகள் பாறைகளால் சிதைந்த கப்பல்
செடிவிட்டு பிரிந்த மலரின் உயிர்போல்
என் தனித்துவம் கொன்றனர் விருப்ப மாக்கள்
கடல் நீந்தும் ஆமைபோல் தகுதி ஆற்றல்
வெறும் பிழைப்பிற்கு பண மலையில் தவளை தாவல்
மனம் ஒத்த காதலுடன் வானவில் பயணம்
சுயநலவெறி மனையாளுடன் சரிந்தேன் சடலம்
எல்லோர்க்கும் ஒளி செய்யும் சூரியன் நீதான்
உன்னை சான்றோராய் உயர்த்துவேன் செல்லப் பிள்ளை
பொருந்தாத மனையாள் வார்த்த வெறுப்பில்
தந்தையா நீ ச்ச்சீ என ஒதுக்கும் தாயின் பிள்ளை
நதிகளுக்கு ஆதாரம் வான் வியர்க்கும் அருவி
எம் அத்தனைக்கும் ஆதாரம் இலாபவெறி குருடி
உணவுக்கும் உயிருக்கும்
உழைப்புக்கும் மதிப்புக்கும்
மண்ணுக்கும் நீருக்கும்
மருந்துக்கும் கருத்துக்கும்
இருப்புக்கும் இறப்புக்கும்
பிழைப்புக்கும் வாழ்க்கைக்கும்
அரண் செய்யாத அரசு
நெற்றி விளக்கில்
இருட்டு முயலை
கண் கூசி வீழ்த்தும்
வேட்டுவ அரசு
வக்கின்றி பல நாடு பறக்கும் கேடி
ஆண் பெண் பேதத்தில் பீப்பீ ஊதி
மதம் சாதி வெறிகளில் பலூன்கள் ஊதி
அறியாமை வேள்வியில் மக்கள் பீதி
வீண் வார்த்தைகளில் வார்த்த லட்டு
வங்கி கணக்கில் பல இலட்சம்
இருட்டோடு உயர்ந்த வரி
கொலை செய்ய உயர்ந்த வலி
பொருள்கள் விலை உயர்ந்த கதி
அய்யோ! வாழ்க்கை முழுதும் லாப சதி
வாழ்வின் முழுமை
விசம் தோய்ந்த சூனியமெனில்
முப்பதே வயதில் தலை நரைக்க
வேறேது காரணம்
இலக்கியம் கலை அறிவியல்
எம் வனத்தில் வண்ணமிட்ட மலர்கள்
நம் வானில் விளக்கிடும் சுடர்கள்
வருங்காலம் உயர்ந்திட படிகள்
படி தாண்ட பலருண்டு
படிப்பார் யாருண்டு
ச்ச்சீ..
என்ன வாழ்க்கை செத்த வாழ்க்கை
இதிலும் உயிர்த்திருக்க காரணம் யாதெனில்?
உயிரெல்லாம் போற்றும் இயற்கை மீதும்
என்னை எட்டி உதைக்கும் உலகம் மீதும்
வருங்கால உலகின் நலன்கள் மீதும்
எம்மில் கோலமிடும் எண்ணங்களும்
எம்மால் தாளமிடும் செயல்களும்
தாய்மை உணர்வால் அவதியுறுவதால்
இன்னும் உயிர்த்திருக்கிறேன்
புதியவன்