டாஸ்மாக் சட்டத்திருத்தம்:
ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும்


“டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கலாம்” என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒரு சட்டதிருத்தத்தை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுமிடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழக அரசு வெளியிட்ட சட்டதிருத்தம் தான் மக்களை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது.

நன்றி: மாலை முரசு

மக்கள் எதிர்க்கும் இடங்களில் மட்டுமல்ல! தமிழகத்தில் தாய்மார்களின் ’தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடு’ என்ற போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய டாஸ்மாக் எதிர்ப்பு வரலாறை நாடே அறியும். எதிர்கட்சியாக இருந்த திமுகவும் இந்த போராட்டங்களை ஆதரித்தது. அதன் ஒரு பகுதியாக அப்போதைய எதிர்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலினும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என போராட்டம் நடத்தினார்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதாவது எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர் ஆனவுடன் டாஸ்மாக் பற்றி தான் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு தற்போது மக்களே தடுக்கலாம் என பித்தலாட்டம் புரிவதை வேடிக்கை பார்க்க முடியாது.

கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு தொடர் போராட்டங்கள் அனைத்தும் “அரசின் கொள்கை முடிவு” என்று உயர்நீதிமன்ற உத்திரவின்படி ஒடுக்கப்பட்டு, அமைப்பின் பல தோழர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எமது அமைப்பின் விடாப்பிடியான போராட்டங்களால் உணர்வூட்டப்பட்ட மக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

கோயிலுக்கும், பள்ளிகளுக்கும் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று போராடிய காந்தியவாதி சசிபெருமாள் இதற்காகவே மரணமடைந்தார் (கொல்லப்பட்டார்?). 2016 சட்டமன்ற தேர்தலில் டாஸ்மாக் பேசுபொருளாக மாறியது.

படிக்க:

♦ டாஸ்மாக்கை மூடு! பொருளாதாரத்திற்கு மாற்று வழிகளைத் தேடு!

♦ அணைந்துவிடாமல் இருப்பது!

அந்த எதிர்ப்புகளை திமுக தனது ஆதரவாக மாற்றிக் கொண்டு ஆட்சிக்கு வர முயற்சித்தது.  ஆனால் முடியவில்லை. தற்போது 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் “மக்கள் நினைத்தால்” – என்றால் என்ன பொருள்? தமிழ்நாட்டின் எந்த மக்கள் எங்களுக்கு டாஸ்மாக் வேண்டும் என்று அரசிடம் மனு கொடுத்து வேண்டி நிற்கிறார்கள்? அரசு சாராய விற்பனையை, டாஸ்மாக் கடைகளை அமைக்கவே செய்யுமாம், மக்கள்தான் அதைத்  தடுத்து நிறுத்தியாக வேண்டுமாம். இப்படி சொல்லும்போது மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசு தொடர்ந்து செய்யும், மக்கள்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் பொருளாகிறது.

சரி, அப்படியே ஒருவேளை மக்கள் திரண்டு தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டால் மட்டும் போதும் மது கடை அங்கே அமைக்கப்படாமல் கைவிடப்படுமா? அதில் என்ன நம்பகத்தன்மை உள்ளது?

Tasmac will be closed from tomorrow till 19 | Shock to alcoholics; Holidays for Tasmac stores from tomorrow - time.news - Time News
டாஸ்மாக்

2017-ஆம் ஆண்டு GST அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநில அரசுகளின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளதுடன் புயல், வெள்ளம், கொரோனோ முடக்கம் போன்ற பேரிடர்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாலும் மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையும் பெருமளவு கூடியுள்ளது. குறிப்பாக, தமிழகத்திற்கு வரவேண்டிய GST வரி பாக்கி ரூ 20,033 கோடி நிலுவைத்தொகையும், இயற்கை பேரிடருக்கான நிவாரணத் தொகையும் ஒன்றிய அரசு முழுவதுமாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இத்துடன் GST வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு தகுந்த இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறக்கவிட்டுள்ளது.

இன்றைய சூழலில் மாநிலங்களுக்கான வரிவருமான ஆதாரங்கள் மது விற்பனை, எரிப்பொருட்கள் மீதான வரி, பத்திர பதிவு, சொத்து வரி, etc என்று ஒன்றிய அரசால் மிகவும் சுருக்கப்பட்டுள்ளது. இன்னிலை புரிந்துக்கொள்ளக் கூடியதே என்றாலும் தமிழக அரசு வரிவருவாய்க்கான மாற்று வழிகளை வகுக்க வேண்டும். சமூக நீதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரம் தான் ’திராவிட மாடல்’ என்று திமுக முன் வைக்கிறது.

டாஸ்மாக் விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி வருவாயாக தமிழகத்தின் முக்கிய நிதி ஆதாரமாக திகழ்கிறது. 2020 ஏப்ரல்-நவம்பர் காலத்தை விட, 2021 ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 11% வருவாய் கூடியுள்ளது என்கிறது நுகர் பொருள் வாணிபக் கழக நிதி அறிக்கை. இது சமூக நீதிக்கும், மக்கள் நலனுக்கும் எதிரானது இல்லையா? இதனால் தான் திராவிட மாடல் பற்றி எழுதியுள்ள கலையரசன் டாஸ்மாக் மூலம் வரி வசூல் செய்வது சரியானதல்ல என்று விமர்சிக்கிறார்.

மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கைக்கு கேடு தரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகும். இதை நன்றாக அறிந்திருந்தும் “மக்களே தடுக்கலாம்” என்று கூறுவது, அரசே மக்களுக்கு எதிரான டாஸ்மாக்கை நடத்திக் கொண்டு, அதனை தடுக்கும் பொறுப்பை மக்கள் தலையில் கட்டுவது மோசடித் தனமாகும்.

  • ஜூலியஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here