
சிரியாவில் பல ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் அசாத், அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார். 53 ஆண்டுகளுக்கும் மேலான அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்புகூட நாட்டின் கணிசமான பகுதிகளை பஷார் அல் அசாத் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அது திடீரென வீழ்ந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதேசமயம் பஷார் அல் அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
“அசாத் ஓடிவிட்டார். அவர் தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். விளாடிமிர் புடின் தலைமையிலான அவரது பாதுகாவல், ரஷ்யா தான். ரஷ்யா, இனி அவரைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டபோவதில்லை” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
“அல்-அசாத்தின் சர்வாதிகாரத்தின் முடிவு ஒரு நேர்மறையான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியாகும். அல்-அசாத்தின் ஆதரவாளர்களான ரஷ்யா மற்றும் ஈரானின் பலவீனத்தையும் இது காட்டுகிறது” என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ், X இல் பதிவிட்டுள்ளார்.
“இறுதியாக, காட்டுமிராண்டி அரசு வீழ்ந்தது” “சிரிய மக்களுக்கும், அவர்களின் தைரியத்துக்கும், பொறுமைக்கும் நான் மதிப்பளிக்கிறேன். இந்த நிச்சயமற்ற தருணத்தில், அமைதி, சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கான எனது வாழ்த்துக்களை அவர்களுக்கு அனுப்புகிறேன்.” எக்ஸ் இல் பிரான்சு அதிபர் மெக்ரோன் எழுதியுள்ளார்.
சிரிய அரசு மீதான இந்த தாக்குதலை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) குழு தலைமையில் பல ஆயுதமேந்திய சிரிய அரசு எதிர்ப்பு குழுக்கள் இணைந்து நடத்தின.
HTS என்பது அபு முகமது அல்-ஜூலானி தலைமையிலான அமைப்பு – மிகப்பெரிய மற்றும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு. இந்த தாக்குதலுக்கு முன் பல ஆண்டுகளாக அவர் சிரியாவின் இட்லிப் நகரை ஆட்சி செய்துள்ளார்.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் விடுதலைக்கான தேசிய முன்னணி, அஹ்ரார் அல்-ஷாம், ஜெய்ஷ் அல்-இஸ்ஸா மற்றும் நூர் அல்-தின் அல்-ஜென்கி இயக்கம், ஆகியவற்றுடன் துருக்கிய ஆதரவு சிரிய தேசிய இராணுவ பிரிவுகள் ஆகியவை HTSயுடன் இணைந்து செயல்பட்டன.
HTS தோற்றமும் அதன் நோக்கமும்!
HTS அமைப்பின் நிறுவனரான அபு முகமது அல்-ஜூலானி 1982 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாத்தில் பிறந்தவர். அங்கு அவர் தந்தை பெட்ரோலிய இன்ஜினியராக இருந்தார். பின்னர் அவரது குடும்பம் 1989 இல் சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே குடியேறியது.
2003 இல் அவர் ஈராக்கிற்குச் செல்வதற்கு முன்பு டமாஸ்கஸில் இருந்த காலம் பற்றி அதிகம் அறியப்படவில்லை, அதே ஆண்டு அமெரிக்க படையெடுப்பிற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு பகுதியாக ஈராக்கில் அல்-கொய்தாவில் சேர்ந்தார்.
படிக்க: காசாவின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத போரை நிறுத்த அமெரிக்காவின் பொருள்களை புறக்கணித்து போராடு!
2006 இல் ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, ஐந்து வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜூலானி, பின்னர் சிரியாவில் அல்-கொய்தாவின் கிளையை நிறுவும் பணியில் ஈடுபட்டார், அல்-நுஸ்ரா முன்னணி, என்ற அந்த அமைப்பு எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறிப்பாக இட்லிப்பில் தனது செல்வாக்கை வளர்த்தது.
அல்-ஜுலானி அந்த ஆரம்ப ஆண்டுகளில் அல்-கொய்தாவின் “இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக்கின்” தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதியுடன் இணைந்து செயல்பட்டார், அது பின்னர் ISIL (ISIS) ஆனது.
ஏப்ரல் 2013 இல், அல்-பாக்தாதி தனது குழு அல்-கொய்தாவுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாகவும், சிரியாவில் விரிவடைவதாகவும் அறிவித்தார், அல்-நுஸ்ரா முன்னணியை ISIL என்ற புதிய குழுவாக மாற்றியமைத்தார்.
அல்-ஜுலானி இந்த மாற்றத்தை நிராகரித்தார், அல்-கொய்தாவுடனான தனது கூட்டைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார்.
பின்னர், அல்-கொய்தாவின் “நாடுகள் கடந்த இஸ்லாமிய அரசாங்கம்” என்பதை நிராகரித்து சிரியாவுக்கான “இஸ்லாமிய அரசாங்கம்” நிறுவுவதே தனது அமைப்பின் குறிக்கோள்என்று அறிவித்தார்.
2011 முதல் ஜூலை 2016 வரை சிரிய எதிர்கட்சிகள் கட்டுப்பாட்டில் இருந்த அலெப்போ சிரிய அரசிடம் வீழ்ந்தது. அதனால் அங்கு இருந்த ஆயுதக் குழுக்கள் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் நீடித்த இட்லிப்பை நோக்கிச் செல்லத் தொடங்கினர். அதே நேரத்தில், அல்-ஜூலானி தனது குழுவை ஜபத் ஃபதே அல்-ஷாம் என மாற்றியதாக அறிவித்தார்.
2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆயிரக்கணக்கான போராளிகள் அலெப்போவை விட்டு வெளியேறி இட்லிப்பில் குவிந்தனர். அல்-ஜூலானி அந்த குழுக்களில் பலவற்றை தனது குழுவுடன் ஒன்றிணைத்து HTS ஐ உருவாக்குவதாக அறிவித்தார்.
‘அசாத்தின் எதேச்சதிகார அரசாங்கத்திடம் இருந்து சிரியாவை விடுவிப்பது’, “ஈரான் போராளிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவது” மற்றும் “இஸ்லாமிய சட்டத்தின்” அடிப்படையில் (தங்கள் சொந்த விளக்கத்தின்படி) அரசை நிறுவுவது HTS இன் குறிக்கோளாக உள்ளது என்று வாஷிங்டன், டி.சி. மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் என்ற சிந்தனைக்குழு தெரிவித்துள்ளது.
‘அரபு வசந்தமும்’ பிற்போக்கு சக்திகளின் எழுச்சியும்
கடந்த 2011 ஆம் ஆண்டு பல்வேறு அரபு நாடுகளில் அந்தந்த நாட்டு சர்வாதிகார அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியது. அரபு வசந்தம் என பின்நவீனத்துவவாதிகளாலும், அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களாலும் புகழப்பட்டது. அந்த எழுச்சி அரபு நாடுகளில் சர்வாதிகாரிகளுக்குப் பதிலாக மதவாத, பிற்போக்கு சக்திகள் ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தது.
வடக்கே துருக்கியையும், கிழக்கே ஈராக்கையும், மேற்கே இசுரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹஃபேஸ் அல் அஸாத் சிரியாவின் அதிபரானார். அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார். சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா முசுலீம்களில் ஒரு பிரிவான அலாவி முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்கள், குர்து இனத்தவர்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கும் சிரியாவில் விவசாயமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் முக்கியத் தொழில்களாக உள்ளன.
பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது. பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். அதே சமயம் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளவர்கள் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல.
சிரியாவில் கடந்த 2011 ஆம் நடந்த ‘தன்னெழுச்சியான’ மக்கள் போராட்டம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் தலையீட்டால் உள்நாட்டுப் போராக மாறியது. மக்கள் எழுச்சியை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முயற்சித்த பிற்போக்கு, இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் களமிறங்கியது. அதனை எதிர்த்து சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஈரானும் களமிறங்கியது. உள்நாட்டுப் போர் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது.
உள்நாட்டுப் போரின் பாதிப்பால் கோடிக்கணக்கான சிரிய மக்கள் அகதிகளாக ஐரோப்பாவில் குடியேறும் நிலை ஏற்பட்டது. சிரியாவில் இருந்துதான் கடந்த பத்தாண்டுகளில் அதிக அகதிகள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மேலாதிக்க வெறியும் அசாத்தின் வீழ்ச்சியும்
சிரிய அரசு ஈரானை ஆதரிப்பதாலும், இஸ்ரேலை எதிர்க்கும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும், பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாசைஆதரிப்பதாலும், இஸ்ரேல் சிரியாவின் கோலன் மலைக் குன்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பதை விலக்கிக் கொள்ள கோருவதாலும், சிரியா அமெரிக்காவின் எதிரி ஆகியிருக்கிறது. சிரியாவின் மீதான அமெரிக்க கழுகின் குறி இன்று நேற்று வைக்கப்பட்டதல்ல. ஈரானை பலவீனப்படுத்தவும், இஸ்ரேல் எதிர்ப்பை மழுங்கடிக்கவும், எண்ணெய் வளங்களை கட்டுக்கு கொண்டு வரவும் சிரியாவில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார். அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளை சமாதானப்படுத்த அதிபர் அஸாத் பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்திருந்தாலும் அமெரிக்கா எனும் போர் வெறி ஓநாய் இரத்தம் குடிக்கும் தமது தாகத்தை அடக்கிக் கொள்ளவில்லை.
அல்கைதா முதல் சவுதி வரையிலான சன்னி பிரிவு வகாபி தீவிரவாதிகள்தான் அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டு அமெரிக்காவின் காசு, துப்பாக்கி சகிதம் சிரியாவின் விடுதலைக்கு போராடுகின்றனராம். இவர்கள் பேசும் இசுலாமிய சகோதரத்துவம் என்பது நடைமுறையில் ஷியா பிரிவு இசுலாமிய மக்களை அன்றாடம் கொல்வதாகவே இருக்கிறது. சிரியாவைப் பொறுத்தவரை இந்த இசுலாமிய அடிப்படை வாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டை நாயாக செயல்படுகிறது.
ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெற்றியை நெருங்கியபோது, அசாத்தின் இராணுவப் படைகளுக்கு ஈரானும் ஹெஸ்புல்லாவும் பெரும் படை பலத்தை அளித்தது. ரஷ்யாவும் விமானப்படையையும் பிற துருப்புக்களையும் சிரியாவிற்கு அனுப்பியது, .
இந்த முறை இந்த உதவிகள் எதுவும் அசாத் அரசுக்குக் கிடைக்கவில்லை. மாஸ்கோ உக்ரைனால் திசைதிருப்பப்பட்டது, ஹெஸ்புல்லா இஸ்ரேலுடனான போரால் பெரிதும் பலவீனமடைந்துள்ளது. இதன் பொருள், அசாத்தின் சரியாக பயிற்றுவிக்கப்படாத, போதிய வசதிகள் இல்லாத மற்றும் மனச்சோர்வடைந்த படைகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவைப் பெற்ற, மிகவும் உந்துதல் பெற்ற கிளர்ச்சியாளர்களின் படைக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் போனது.
பஷார் அல் அசாத்தின் சர்வாதிகாரப் பிடியிலும், கடந்த பத்தாண்டு கால உள்நாட்டுப் போரிலும் சிக்கி சீரழிந்த சிரிய மக்களின் வாழ்க்கை தற்போது இசுலாமிய பயங்கரவாதிகளின் கையில் சிக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அதனிடத்தில் தாலிபான் ஆட்சி அமைந்தது எப்படி அந்நாட்டு மக்களுக்கு விடிவு கொடுக்கவில்லையோ, அதே போல் சிரியாவில் தற்போது நடந்துள்ள ஆட்சி மாற்றமும் சிரிய மக்களுக்கு விடுதலையை கொடுக்கப் போவதில்லை. சிரிய மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயகம் தோன்றி வளர்ந்து வலிமைபெற்றால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை முறியடித்து உண்மையான விடுதலையை பெற முடியும்.
- திருமுருகன்