விவசாயிகளின் மீது மீண்டும் பாய்ந்து குதறிய பாஜக அரசு!

பாசிச பாஜக அரசு, தான் எழுதிக் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவதால் வேறு வழியே இல்லாத நிலையில்தான் இப்பொழுது விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

0

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் “டெல்லி சலோ” ( டெல்லிக்கு செல்) என்று முழக்கத்தின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றுவருகின்றனர்.

இரண்டாவது முறையாக, கடந்த ஞாயிறு அன்று, பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளின் மீது, பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களில் எல்லையான சம்புவில் பாஜக அரசு  கண்ணீர் புகை குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 6 விவசாயிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். விவசாயிகளின் இந்தப் போராட்டம் பாஜக அரசின் அயோக்கியத்தனத்தாலும், நயவஞ்சக தந்திரத்தாலும் விவசாயிகளின் மீது திணிக்கப்பட்ட ஒன்று.

பாஜக அரசு கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக 2019 ல் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டெல்லியை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு வருடத்திற்கு மேலாக போராடினர். டெல்லியின் கொடும் குளிரிலும், தகிக்கும் வெயிலிலும் இடைவிடாது தொடர்ந்து நடந்த போராட்ட களத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள்  இறந்தனர்.

இந்த நிலையில் கூட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாது தொடர்ந்ததால் வேறு வழியின்றி பாசிச மோடி 2021ல் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் சட்டத்தை இயற்றுவதாக ‘தெய்வக் குழந்தை’யான பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார்.

பாசிச பாஜக அரசின் உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பாஜக அரசு  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றிவருகிறது.

இதைக் கண்ட பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியை முற்றுகை இடுவதற்காக செல்ல முயன்ற போது ஹரியானா மாநில போலீசார் அவர்களின் பேரணி மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்தனர்.


படிக்க: விவசாயிகள் பேரணி மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு! கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பாஜக தொடுத்த தாக்குதல்!!


அதன் பிறகும் இன்று வரை, பாசிச பாஜக அரசு, தான் எழுதிக் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவதால் வேறு வழியே இல்லாத நிலையில்தான் இப்பொழுது விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை நிறைவேற்றுவது என்பது கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு மிகப்பெரும் தடையாக அமைந்து விடும் என்பதால் பாஜக அரசு, தான் செய்து கொடுத்த சத்தியத்தை குப்பையில் வீசி எறிந்து விட்டு மீண்டும் திமிர்த்தனமாக விவசாயிகள் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது.

“பாசிச பாஜக அரசே நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று என்று விவசாயிகள் கூறுவது எப்படி குற்றமாகும்?… விவசாயிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று” என்று இந்திய மக்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலாக முழங்க வேண்டும். இதன் மூலம்தான் போராடும் விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here