காஷ்மீரில் மூன்று பழங்குடிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீருக்கான 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்தது பாசிச மோடி அரசு. இதனை உச்ச நீதிமன்றமும் இந்த மாதம் உறுதி செய்தது. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களிலும் வாழும் மக்கள் சிறப்பு அதிகார  சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக அடக்கு முறையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்தை தேர்தலுக்காக பயன்படுத்துவதில் மோடி அரசு கை தேர்ந்தது. 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலே இதற்கு உதாரணம் இந்த தாக்குதலில் பலியான 44 படைவீரர்களின் பிணங்களை வைத்து பிரச்சாரம் செய்து தேசிய வெறியூட்டி 2019  நாடாளுமன்ற தேர்தலில் வென்றது.

காஷ்மீரை பொறுத்தவரையில் ராணுவத்தாலோ போலீசாலோ சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று கதை எழுதி பத்திரிகையாளர்களிடம் கொடுப்பார்கள் அவர்களும் அதனை ஆராயாமல் பதிவிட்டு குற்றத்திற்கு வலு சேர்ப்பார்கள். இத்தனை ஆண்டு காலமும் இதுதான் தொடர் கதை. கல்லையும், உண்டி வில்லையும் வைத்து போராடிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் ஆட்சியாளர்கள் வெற்றியும் கண்டார்கள்.

அவர்களுக்கு ராணுவம் கொடுத்த பரிசுகள் ஏராளம். பெல்லட் குண்டு தாக்குதலால் உடல் சல்லடையாக்கப்பட்டதும், குழந்தைகள் உட்பட பலர் பார்வை இழந்ததும் உண்டு. அரை விதவைகள்(காணாமல் ஆக்கப்பட்டவர்கள்) அதிகம் உள்ள மாநிலமும் காஷ்மீர் தான். இந்த பரிசுகள் போதாது என்று அடிக்கடி மக்களின் உயிர் குடிப்பதும் நடக்கும்.

பெல்லட் குண்டு தாக்குதலால் பார்வை இழந்த இளைஞர்

அது போன்றதொரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து இந்திய ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காஷ்மீரை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டு தெருவில்  கிடந்ததையடுத்து மக்களிடம் ஏற்பட்ட கோபத்தினால் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் கூற்றுப்படி முகமது சோகத் 22, சபீர் ஹுசைன் 45, சபீர் அகமது 32 ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை காலை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப் பாங்கான டோபா பிர் கிராமத்தில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இப்போது பிணமாக்கப்பட்டுள்ளார்கள்.

சபீர் ஹுசைனின் சகோதரர் நூர் முஹம்மது கூறுகையில்  “அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்ட தடயங்கள் இருந்தன. அவர் அதிகப்படியான சித்திரவதையால் தான் இறந்துள்ளார்’’ என்று கூறுகிறார்.

மனைவி மற்றும் பெற்றோர் முன்னிலையில் தன சகோதர் சபீரை ராணுவம் அழைத்துச் சென்றதாக அகமத் கூறுகிறார்.

அரசு எங்களுக்கு வேலை இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் எங்களுக்கு நீதி வேண்டும். அப்பாவி மக்களை கொன்ற அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் சகோதரனுக்கு நாலு குழந்தைகள் உள்ளனர் என்கிறார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேரும் குஜ்ஜார் எனப்படும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாரம்பரியமாக காஷ்மீர் மலைப்பகுதியில் வாழ்க்கை நடத்தி வருபவர்கள்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய ராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்திய ராணுவத்தின் X பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய ராணுவத்தால் பல பெண்கள் பாலியல் உள்ள வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் போராட்டத்தால் குற்றம் இழைத்த இராணுவத்தின் மீது வழக்கு தொடர்ந்தாலும் விசாரணை முறையாக நடைபெறாது. இதுவரை குற்றம் இழைத்த ராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. மாறாக குற்றங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இது போல தான் கடந்த 2020 ஆம் ஆண்டு காஷ்மீரின் ராஜோரியை சேர்ந்த 3 பேர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அவர்களை தீவிரவாதிகளாக் சித்தரிக்க முயன்றது. பின்னர் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட இந்திய இராணுவம் இந்த கொலைக்காக அதிகாரி ஒருவருக்கு உள்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் கடந்த மாதம் இராணுவ நீதிமன்றம் அதிகாரிக்கு வழங்கிய தண்டனைய நிறுத்தி வைத்தது. இதனாலேயே காஷ்மீர் மக்கள் நீதியின் மீது நம்பிக்கையிழந்தவர்களாக உள்ளனர்.

போராடும் மக்களின் வாயை அடைக்க இழப்பீடுகளை அரசு அறிவிக்கும். அதேபோல் இறந்த மூவர் குடும்பத்திற்கும் இழப்பீடு அறிவித்துள்ளது. குடும்பத்திற்கு வேலையும் அறிவித்துள்ளது. குற்றம் செய்தவர்கள் குற்றத்தை மறைக்க வழங்கும் லஞ்சம் தான் இந்த இழப்பீடுகள்.

இழப்பீடு வழங்குவதில் இருந்தே குற்றத்தை ஒப்புக்கொள்கிறது அரசு. “மூன்று பேரும் ராணுவ காவலில் இறக்கவில்லை என்றால் இழப்பீடும் வேலையும் கொடுக்க மாட்டார்களே” என்று இறந்தவரின் உறவினர் கூறுகிறார்.

2018 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கிடையாது. காஷ்மீர் முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு நிர்வாக பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:

அப்போதிலிருந்தே நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் பத்திரிக்கையாளர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தனர். பல மாத சிறைவாசத்திற்கு பிறகு தற்போது தான் விடுவிக்கப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் பல மாதங்கள் இணைய சேவையை அரசு அனுமதிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இதனால் காஷ்மீரில் நடந்த மக்கள் போராட்டங்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

காஷ்மீர் மக்கள் தாங்கள் விரும்பிய படி வாழும் உரிமையை இந்திய ஒன்றிய அரசு தடுக்கிறது. 2018 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகும் கூட ராணுவத்தில் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாத தாக்குதல் 86 சதவீதம் குறைந்துள்ளதாக பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் வன்முறை குறைந்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் மணிப்பூர் ஒருபுறம் பற்றி எரிகிறது. இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களை குறி வைத்து தாக்குகிறது பாசிச கும்பல்.

காஷ்மீர் மக்கள் தாங்கள் நினைத்தபடி வாழும் உரிமையை உறுதி செய்யாதவரை அவர்கள் மீதான அடக்குமுறை நிற்க போவதில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அரசமைப்பே இதற்கு நிரந்தர தீர்வை தரும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here