காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை கோருகிறவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாசிச மோடி.

மகாராஷ்டிரா தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித்ஷா உங்களால் அல்லது உங்கள் தலைமுறைகளால் கூட 370 வது சட்டப் பிரிவை மீட்டெடுக்க முடியாது’’ என்றார்.

1947 க்கு பிறகு காஷ்மீரின் மன்னன் ஹரிசிங் என்பவருடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீருக்கு. இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அவ்வாறு பிரித்தது மட்டுமின்றி அந்த மாநிலத்தில் இருந்து செயல்படுகின்ற ஊடகங்கள், இணையத் தொடர்புகள் மற்றும் செய்திகள் அனைத்தையும் மிருக பலத்துடன் தணிக்கை செய்தது அல்லது வெளிவராமல் தடுத்தது.

காஷ்மீரி என்ற தேசிய இனத்தில் சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தவிர சிறுபான்மையாக வேறு சில மதத்தினரும் உள்ளனர் என்பது தான் வரலாற்று ரீதியான உண்மையாகும்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைந்த போது மன்னர் ஹரிசிங்குடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறார்களா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து செல்ல விரும்புகிறார்களா? இரண்டும் இல்லாமல் தனியாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய வாக்கெடுப்புகள் எதுவும் நடத்தப்படாத சூழலில் பாசிச ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நீண்ட நாள் கனவான அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் என்ற அடிப்படையில் காஷ்மீர் மக்களின் தேசிய உணர்வுகள் அனைத்தும் நசுக்கப்பட்டு பார்ப்பன இந்திய தேசியத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பாஜகவின் இத்தகைய கொள்கைகளை எதிர்த்து சட்டபூர்வமாக எதிர்ப்போ அல்லது ஊடகங்களில் கருத்தோ சொல்ல முடியாத அளவிற்கு அரசு பயங்கரவாத ஒடுக்குமுறை தலைவிரித்தாடுகிறது.

கொள்கை ரீதியாக இத்தகைய முடிவுகளை விமர்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றும், அர்பன் நக்சல்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். பிரிவினைவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட கால சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்த சூழலில் காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உமர் அப்துல்லா அரசாங்கம் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே ரத்து செய்யப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் இயற்றியது..

இதனை எதிர்த்து பாஜகவின் குண்டர் படையினர் சட்டமன்றத்துக்குள்ளேயே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி அந்த தீர்மானத்தின் நகல்களை கிழித்தெறிந்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டனர்.


படிக்க: காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!


எனினும் காஷ்மீரில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மீண்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதில் காங்கிரசு ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி “நான் உயிரோடு இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் பின்பற்றப்படும்..370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பது பற்றி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதையும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ எம்எல்ஏக்கள் தூக்கி எறியப்பட்டதையும் நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். நான் உயிரோடு இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. கொண்டு வர விடமாட்டேன்.

இதை நம் நாட்டு மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சாதிகளையும், சமூகங்களையும் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது. ஒரு சாதியை இன்னொரு சாதியினருக்கு எதிராக நிறுத்தவும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களை தூண்டிவிட்டு அவர்களை பலவீனப்படுத்தவும் காங்கிரஸ் விரும்புகிறது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரசும் அவரது குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டை எதிர்த்தனர். இப்போது அவர்களது நான்காம் தலைமுறையான இளவரசர் (ராகுல்காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு) சாதிகளிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.


படிக்க: காஷ்மீர்  சட்டமன்ற தேர்தல்கள்; ஜனநாயகம் மீண்டதா?


நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நீங்கள் உணர வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் காங்கிரசின் அரசியல் முடிந்துவிடும். .முன்பு மத அரசியலில் ஈடுபட்டு நாட்டின் பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்த காங்கிரஸ், இப்போது சாதி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டிற்கு எதிராக இதை விட பெரிய சதி வேறொன்றும் இருக்க முடியாது.

மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி, சக்கரங்கள் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது. அங்கு டிரைவர் சீட்டில் உட்காரப் போவது யார் என்ற மோதல் நடக்கிறது.பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியால் மட்டுமே மகாராஷ்டிராவின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்”. இவ்வாறு அவர் பேசினார்.

இதுபோல், சாங்கிலியில் பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, ‘‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் இருந்த மாநிலத்தில் இருந்து ராகுலுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். உங்களால் அல்லது உங்கள் தலைமுறைகளால் கூட 370 வது சட்டப் பிரிவை மீட்டெடுக்க முடியாது’’ என்றார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆண்டு வரும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் பாசிச மோடி, அமித்ஷா கும்பலானது பகிரங்கமாகவே காஷ்மீர் மக்களுக்கு எதிராக சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

கருப்புச் சட்டங்களையும், பயங்கரவாத பீதி மற்றும் பிரிவினைவாத பீதியூட்டி, போலியான தேசபக்தியின் கீழ் நாட்டு மக்களை ஒன்றிணைத்து அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் காலடியில் நாட்டை மறுகாலனிக்குவதற்கு துடித்துக் கொண்டுள்ள பாசிச மோடி கும்பலுக்கு எதிராக மக்களை அணி திரட்டி போராடுவோம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மட்டுமல்ல, அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என்று போராடுவதும், அதனை அங்கீகரிக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதற்காக மக்களை திரட்டுவோம்.

கணேசன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here