தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இந்த மாதம் (மே மாதம்) தொடக்கத்தில் இருந்து பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துவரம் பருப்பு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சாதாரண உழைக்கும் மக்களை பெருமளவில் பாதித்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் மாதா மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இது அன்றாடம் உழைக்கும் கூலி தொழிலாளிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயனுள்ளதாய் உள்ளது. அரிசி ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வீதம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக உள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் மானிய விலையில் பருப்பு கிலோ 30, பாமாயில் ஒரு லிட்டர் 25 என்ற விலையிலும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 2016 முதல் , கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பாமாயிலின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இன்று வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் பாமாயில் 100 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் மலிவான விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை கிடைப்பதால் அடித்தட்டு உழைக்கும் மக்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கொடுக்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை உள்ளது. உழைக்கும் மக்கள் வாங்கும் சம்பளத்தில் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதனால் பெரும்பான்மை மக்கள் ரேஷன் கடைகளை நம்பியுள்ளனர்.
தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஒப்பந்த புள்ளியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 நியாய விலை கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மே மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளும் தேவை. ஆனால் ஏப்ரல் மாத கடைசியிலேயே இருப்பு குறைந்தது அரசுக்கு தெரிந்து இருக்கிறது. அடுத்த மாதத்திற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே ஒப்பந்தப்புள்ளி கோரி பெற்று வைக்கவில்லை. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஒப்பந்தப்புள்ளி கோரி ஒரு மாதம் கழித்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 16 ஆம் தேதி அரசு வெளியிட்ட விவரங்களின்படி 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பும், 31,11,722 லிட்டர் பாமாயிலும் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என அரசு அறிவித்திருந்தது. அதாவது தேவையான அளவைவிட நான்கில் ஒரு பங்கு நுகர் பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அதனால் இன்று வரை முக்கால்வாசி பேருக்கு பாமாயில், பருப்பு வழங்கப்படவில்லை.
அரசோ இந்த மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாமாயில், பருப்பு வழங்கப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாதம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே மிச்சம் உள்ளது. மாதத் தொடக்கத்திலேயே கிடைக்க வேண்டிய பாமாயில் இதுவரை கிடைக்காததால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நியாய விலை கடைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். 100 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்க முடியாத நிலையிலேயே பெரும்பான்மை இந்திய மக்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டின் நியாய விலை கடைகள் இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் உள்ளன. இங்கு தான் பல்வேறு உணவுப் பொருட்கள் மானிய விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வு நீடிக்கும் வரையில் நியாய விலைக் கடைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாய் உள்ளன. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் ஒன்றிய அரசோ நியாயவிலை கடைகளை ஒழித்துக் கட்டுவதற்கு திட்டம் போடுகிறது. நியாய விலை கடைகளில் பொருட்களை வழங்காமல் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது என்று திட்டமிட்டது. இதனை முன்னோட்டமாக பாண்டிச்சேரியில் அமல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பாஜகவின் எடுபுடியாக இருக்கும் ரங்கசாமியின் மூலம் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய அரசு.
அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதும் , அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன.
படிக்க:
♦ உலகப்பட்டினி குறியீட்டில் ‘முன்னேறிய’ இந்தியா!
♦ அரிசி ஏற்றுமதிக்குத்தடை: உண்மையும்-விளைவுகளும்.
ஆனால் இதனை அனைத்து மாநிலங்களும் அறிவிப்பது தற்போது பொருத்தமாக இருக்காது என்று காத்திருக்கிறது ஒன்றிய அரசு. இதனை தொடங்கி வைத்ததில் காங்கிரசுக்கும் பெரிய பங்கிருக்கிறது. தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தி நூல்விட்டு பார்க்கிறது. பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையென்றால் கட்டாயம் அமல்படுத்தும்.
அதனால் நியாயவிலை கடைகளில் அலட்சியம் செய்யாமல் ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்கள் கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் இதனையே காரணம் காட்டி உணவுப் பொருட்களின் மானியத்தை வங்கி கணக்கில் போட ஒன்றிய அரசு முயற்சிக்கும். இன்று இலவசமாக கிடைக்கும் அரிசி நாளை 50 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் மானியமாக ₹3 அல்லது ₹4 வரவு வைக்கப்படும். அதுவும் கேஸ் மானியம் போல் காணாமல் போகும் நிலை ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் ரேசன் கடைகளும், சத்துணவு திட்டமுமே உழைக்கும் மக்களை பட்டினியில் இருந்தும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்தும் காக்கிறது. உணவுப் பொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி நியாயவிலை கடைகளுக்கு மூடுவிழா நடத்த அரசு முயற்சிக்கலாம். ஆகையால் இத்திட்டத்தினை பாதுகாக்கவும் உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் நாம் போராடுவது அவசியம்.
- நந்தன்