கடந்த ஜூன் 22-ல் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ‘முருகனைப் பற்றிய வழிபாடுகள் மட்டுமே இடம் பெறும்; இவர்கள் உருவாக்கிய அறுபடை வீடுகளுக்கு பூஜை புனஸ்காரம் மட்டுமே நடக்கும்; எத்தருணத்திலும் அரசியல் பேசப்பட மாட்டாது; வெறுப்பு அரசியல் பேசப்பட மாட்டாது…என மாநாட்டு ஏற்பாட்டாளர்களான இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தில் சத்தியம் செய்து பல நிபந்தனைகளுடன் அனுமதி பெற்றது.
மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன், மற்றும் மூத்த வழக்கறிஞர் தோழர் லஜபதிராய் ஆகியோர் இதற்கு முன்பு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் பலவற்றை சுட்டிக் காண்பித்து இவர்கள் நடத்துவது ஆன்மீக மாநாடு அல்ல; அரசியல் மாநாடு… என்பதற்கான விளக்கங்கள், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வேலைகள் எல்லாவற்றையும் தெளிவுபட எடுத்துரைத்து மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அவ்வாறிருந்தும் மதுரை பெஞ்ச் உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தியும், காவல்துறையும் 54 நிபந்தனைகளை விதித்து விட்டதாக படம் காண்பித்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கினார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
‘கெட்டிக்காரத்தனமாக’ அனுமதியைப் பெற்றுவிட்ட இந்து முன்னணி அனைத்து நிபந்தனைகளையும் மீறி அரசியல் மாநாடாகவே நடத்தியது. ஆபரஷேன் சிந்தூர் நடத்திய மோடிக்குப் பாராட்டு, இந்துக்கள் ஒற்றுமையாக தேர்தலில் வாக்களிக்க கோரியது; இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை மீட்பது என அரசியல் தீர்மானங்களையே நிறைவேற்றியது. வெறுப்பு அரசியலைக் கக்கியது. பல்லாயிரம் கோடி பெரும் நிதியை மிகவும் இழிவான முறையில் அரட்டியும், உருட்டியும், மிரட்டியும், பெரும்புள்ளிகளிடம் ஆளுக்காள் வசூல் வேட்டை செய்து கொள்ளையடித்தனர்.
பாமர மக்களிடம் ஏற்கனவே மண்டிக் கிடக்கும் ‘பக்தி’ என்ற வலைக்குள் சிக்க வைத்து, மற்ற எவருக்கும் வழங்கப்படாத ‘வாகனங்களுக்கு ஈ பாஸ் தேவையில்லை’என்ற சங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பையும் பெற்றனர், பல்வேறு கல்வி நிறுவனங்கள், பெரும்பணக்காரர்கள் வாகனங்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளச் செய்தனர்.
அந்த அடிப்படையில் பல்லாயிரக்கணக்கில் இலவச வாகனங்களில் மக்களை அள்ளிக் கொண்டு வந்தனர்.
நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி மீது நீதிமன்றம் – அரசு – காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை தான் என்ன?
எந்தெந்த நிபந்தனைகளை மீறினால் எத்தனை எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை, எவ்வளவு அபராதம் என்றெல்லாம் நிபந்தனை விதித்த நீதிமன்றம், அனைத்தையும் மீறி அரசியல் மாநாடாக நடத்தி இருக்கக்கூடிய இந்து முன்னணி கும்பல் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
காவல்துறை எத்தனை வழக்குகள்(FIR) பதிவு செய்துள்ளன? திமுக அரசு ஏன் இது விடயத்தில் மௌனம் காக்கிறது. அனுமதியளித்த நீதிமன்றமும் தன் உத்தரவை மீறிய இந்து முன்னணி மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்தாதது ஏன்?
இதேபோன்று மற்ற அரசியல் இயக்கங்கள் நிபந்தனைகளை மீறி செயல்பட்டு இருந்தால் இவர்கள் என்னென்ன நடவடிக்கைகளைப் பாய்ந்து பாய்ந்து செயல்படுத்தி இருப்பர். அப்படியானால் ஒன்றிய அரசில் பாஜக இருக்கிறது; உள்துறை அமைச்சராக அமித்ஷா இருக்கிறார். எனவே இது விடயத்தில் பதவுசாக நடந்து கொள்வோம் என்ற நிலைப்பாடு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
பாஜகவில் கரைந்து விட்ட அதிமுக: கேவலம்; அவமானம்!
சங்கிகள் மாநாட்டில் பல்வேறு மக்கள் விரோத தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். திருப்பரங்குன்றம் மலை முற்றிலும் முருகனுக்கே சொந்தம் என்பது ஒரு முக்கியத் தீர்மானம். அதன் மூலம் சிக்கந்தர் தர்கா மீது ஏற்கனவே எச்ச.ராஜா தெரிவித்தபடி மாநாட்டின் மூலமாகவும் குறி வைத்து விட்டார்கள் என்பது மட்டுமல்ல; அடுத்த கார்த்திகை தீபத்தின் போது செயல் மூலமாக சில விபரீதங்களை செய்வார்கள் என்பதற்கான ‘பச்சைக்கொடி’-யையும் காண்பித்து விட்டார்கள்.
மத நல்லிணக்க பூமியில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய கடமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் இந்த மாநாட்டிற்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனம் குளிர வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மாநாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முதலானோர்
மாநாட்டின் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்படி மாநாட்டை இவர்கள் ரசித்து கொண்டு இருந்த வேளையில் தான் தந்தை பெரியார், அண்ணா முதலானோரை இழிவு படுத்தி மேடையில் வீடியோ ஒளிபரப்பு செய்துள்ளனர்.
அண்ணா பெயரில் கட்சி, கட்சிக் கொடியில் அண்ணா படத்தை பொறித்துக் கொண்டு இருக்கக்கூடிய இவர்கள், அந்த இடத்திலேயே தங்களது ஆட்சேபனையை தெரிவிக்க எள்ளின் முனை அளவும் முற்படவில்லை.
படிக்க:
🔰 அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!
மாநாடு முடிந்த பிறகு ஊடகங்களும், பத்திரிகைகளும், பல்வேறு தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பிய பின் ஆர்.பி. உதயகுமார் ‘மாநாட்டுத் தீர்மானங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை; பெரியார்- அண்ணா பற்றி வீடியோ ஒளிபரப்பானதை நாங்கள் கவனிக்கவில்லை…’ என்பதாக முழுப் பூசணியை சோற்றில் மறைத்த கதையாக – சமாளிப்புக்காக சில கருத்துக்களை உளறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு கண்டனத்தைக் கூட இதுவரை எடப்பாடி வெளியிடவில்லை. கட்சியின் சார்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் எதிலும் ஈடுபடவில்லை.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள இவ்வேளையில் எங்கள் அரும்பெரும் தலைவர்கள்/ குருநாதர்கள் பெரியார் – அண்ணாவை ‘முருக பக்தர்கள்’ மாநாட்டில் அவமானப்படுத்திய பிறகு நாங்கள் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது என்றெல்லாம் வீர வசனம் பேச அதிமுக தயாராக இல்லை.
காரணம், அதிமுக பெரும் தலைகளின் பெரும் சொத்துகளுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இவற்றின் மூலமாக எவ்வித இடையூறுமின்றி அரசியல் செய்ய வேண்டும் என்பதால் அதிமுக இப்படிப்பட்ட அவர்களது ஆசான்களின் அவமதிப்பையே பொறுத்துக் கொண்டுதான் போவார்கள் என்பது வெள்ளிடை மலை உண்மையாகி விட்டது. கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!
- எழில்மாறன்
மிக பெரிய தவறு
எது ‘மிகப் பெரிய தவறு’ என்பதை விளக்க வேண்டாமா தோழர்?👍
அடிமை அதிமுக என்பது ஏற்கனவே வழக்கு சொல்லாகி விட்ட நிலையில் தற்போது கொள்கையோ தலைவர்களோ யாரும் இல்லை.
இனியெல்லாம் அமித்ஷா வே!
ஜெயலலிதா மொழியில்
வாழ்க அமித்ஷா நாமாம்!
வாழ்க மோடி நாமாம்…..