‘யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!’ என்ற பழமொழியை போல மே மாதம் இறுதியில் பெற்றோர்களின் வயிற்றை கலக்கிக் கொண்டிருப்பது தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி பற்றிய கேள்விதான்.

நாடு முழுவதும் உள்ள நிலைமையில் இருந்து தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளின் நிலைமை வேறுபட்டுள்ளது, மேம்பட்டு உள்ளது என்ற போதிலும் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டத்திற்கிடையில் தான் படிக்க வைக்க நேரிடுகிறது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் முடிந்து மே மாதம் விடுமுறை குழந்தைகளுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், பெற்றோர்களுக்கு அடுத்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை எப்படி கட்டுவது என்ற கேள்வி மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வளர்ந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மன், பிரான்சு போன்ற நாடுகளிலும் சரி, முதலாளித்துவ நாடுகளான செக் குடியரசு, நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம் போன்ற நாடுகளானாலும் சரி கல்வி இலவசமாக கொடுக்கப்படுகிறது, அது போல இந்தியாவிலும் கல்வி இலவசமாக தரப்பட வெண்டும் என்ற கோரிக்கை இன்று தொடர்ச்சியாக கல்வியாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இருந்த போதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை அரசு கல்வியை கொடுக்கும் மகத்தான பணியை சேவை என்பதிலிருந்து மாற்றி லாபம், வியாபாரம் என்ற கண்ணோட்டத்தில் மாற்ற துவங்கியது முதல் பெற்றோர்களின் நிலைமை படு மோசமாகியுள்ளது. கல்விக்காக ஒதுக்குகின்ற தொகையைக் காட்டிலும் இராணுவ தளவாட உற்பத்திக்கும், வெவ்வேறு செலவினங்களுக்கும் அதிகமாக செலவு செய்கிறது இந்திய ஒன்றிய அரசு. 2023-24 பட்ஜெட்டில் ரூபாய் 1.13 லட்சம் கோடிதான் ஒதுக்கப்பட்ட்து. ஆனால் இராணுவத்திற்க்கு ஒதுக்கீடு ரூபாய் 6.2 லட்சம் கோடியாக உள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், ”மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தேவையான கல்வித்துறைக்கு அரசு நிதியை ஒதுக்குவதில் அக்கறை காட்டுவதில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஏனென்றால் இந்த மாணவர்கள் தான் ஒரு சமூகத்தின் சொத்தாக உள்ளனர் எனும் போது அவர்களின் கல்வி அறிவியல் பூர்வமாகவும், நவீன வசதிகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் முன் வைக்கிறார்.

படிக்க:

♦ கருகும் இளமை: எந்திரகதியான கல்விமுறையின் விளைவு!

♦ தற்கொலைக் களங்கள் ஆகும்  உயர் கல்வி நிறுவனங்கள்!

இந்தியாவில் அரசு பள்ளி, கல்லூரிக்கும், தனியார் பள்ளி, கல்லூரிக்கும் இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமாக உள்ளது. தனியார் பள்ளி கல்லூரிகளில் சுமார் 75.62 சதவீதம் இணைய சேவை கொண்டதாக உள்ளது எனும்போது அரசு பள்ளி, கல்லூரிகளில் வெறும் 30% கூட தாண்டவில்லை என்கிறது புள்ளி விவரங்கள். கல்வித் துறைக்கு அக்கறை செலுத்துகின்ற தமிழகத்திலேயே இதுதான் நிலைமை. இந்தியா முழுவதும் அரசு பள்ளி, கல்லூரிகளில் வெறும் 18% மட்டுமே இணைய வசதி பெற்றுள்ளது என்று நிலைமை தான் நீடிக்கிறது.

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான். வகுப்பறை, காற்றோட்ட வசதி, கழிப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானம், ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் போன்ற பல அம்சங்களில் இந்த வேறுபாடு நீடிக்கிறது.

ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும் போதும் தனியார் கல்வி கட்டண கொள்ளையை பற்றி ஒன்றிரண்டு மாதங்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளும், போராட்ட உணர்வும் தோன்றுகின்ற போதிலும், பிறகு மெல்ல மெல்ல வடிந்து நமது தலைவிதி இவ்வளவுதான் என்ற நொந்து கொண்டு, தனியார் கல்விக் கொள்ளையர்கள் கேட்கின்ற கட்டணத்தை செலுத்துகின்றனர்.

புற்றீசல் போல தனியார் நர்சரி பள்ளிகள் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகள் துவங்கி, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கல்வி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கொடூரமான விளைவுகளை பெற்றோர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

தனது வருமானத்தில் பாதிக்கும் மேல் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் பெற்றோர்கள். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கின்ற குடும்பங்களில் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது என்றபோதிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் கட்டாயமாக ஒருவர் மற்ற இரு குழந்தைகளின் கல்விக்காக தனது படிப்பை தியாகம் செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்குவதும், ஆரம்பக் கல்வி நிலையங்களை அருகமை பள்ளிகளாக மாற்றுவதும், தனியார் கல்வி கொள்ளையர்களுக்கு முடிவு கட்டுகின்ற வகையில் அனைத்தையும் அரசடமையாக்கி அரசே ஏற்று நடத்துவதும் தான் நிரந்தர தீர்வு என்ற போதிலும், தற்போதைய சூழலில் கல்வி வியாபாரிகளை நம்பியே கட்சிகள் அனைத்தும் இருப்பதால் இதைப் பற்றி பேசினாலே கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நாட்டை கொள்ளையடிக்கின்ற கார்ப்பரேட் முதலாளிகள், கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற பெயரில் சில கோடிகளை மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்குவது போல், இந்த கல்வி கொள்ளையர்களும் ஒரு சில சமூக நடவடிக்கைகளுக்கு உதவுவதன் மூலம் தனது கொள்ளையை மறைத்து உத்தமர்களை போல வேடம் போடுகின்றனர். இவர்கள் தான் அரசியல் கட்சிகளின் புரவலர்களாக உள்ளனர் என்பதால் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற நிலைமையே நீடிக்கிறது.

சாதாரண ஆரம்பக் கல்வித் துவங்கி உயர்நிலை கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தற்போதைய நவீன உலகத்திற்கு தேவையான கல்விகளை அறிமுகப்படுத்தி பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடிக்கின்றனர் தனியார் கொள்ளையர்கள்.

இந்த கொள்ளையர்களின் கொள்ளைக்காக தனது வருமானத்தில் கணிசமான தொகையை இழந்து வாழ்நாள் முழுவதும் கல்வி கட்டணத்தை செலுத்துகின்ற கடனாளியாகவே வாழ்ந்து மறைந்து போகின்ற மக்களும் உண்டு. இந்த கேடான நிலைமையை நிலவுகின்ற போக்க சட்ட்த்தினால் முடியாது.

”கல்வியில் தனியார்மயத்தை தடுத்து நிறுத்து!” என்ற கோரிக்கையுடன், ”கல்வியை அந்தந்த மாநில பட்டியலுக்கு கொண்டு செல்!” என்ற கோரிக்கையையும் தொடர்ந்து உயர்த்தி பிடித்து போராடுவோம். இந்த கோரிக்கைகளை நேர்மையாக பரிசீலிக்கும் ஜனநாயக் கூட்டரசு ஒன்றை கட்டியெழுப்புவோம்.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here