ந்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி பாஸ்மதி அல்லாத பிற அரிசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. நாட்டில் அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தது. இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாகவும் அமைந்தது.

இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஜூலை 21 அன்று அனைத்து கடைகளிலும் அரிசி விற்றுத்தீர்ந்தது. ஒருவருக்கு ஒரு சிப்பம் அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கும் நிலைமை ஏற்பட்டது. தற்போது விலை இரண்டு மடங்காகிவிட்டது. மூன்றாண்டுகளுக்கு முன் இந்திய அரசு கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்திய போதும் இதே சூழலை எதிர்கொண்டதாக அமெரிக்க மக்கள் தெரிவித்தனர். இது பற்றிய வீடியோக்கள் அப்போது வைரலானது. உண்மையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடையால் அதிகம் பாதிக்கப்படப்போவது அமெரிக்கா அல்ல. பின் தங்கிய ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏழை நாடுகளும் ஏற்கெனவே ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவிக்கும் அந்த நாடுகளின் பரிதாபத்துக்குரிய மக்களும்தான்.

உலகளவில் அரிசி ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிப்பது இந்தியா. இந்தியாவிற்கு அடுத்தபடியாக உள்ள தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் ஏற்றுமதியை விட இந்தியாவின் ஏற்றுமதி அதிகம். உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் ஏறத்தாழ 40% இந்தியாவில் இருந்தே 140-க்கும் அதிகமான உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 22.26 மில்லியன் (2.23 கோடி) டன் அரிசியை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இதுவரை எட்டப்படாத உச்சபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020- 21 ஆம் நிதி ஆண்டை பொறுத்தவரை பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளில் நேபாள நாட்டிற்கு 12.84 லட்சம் டன், பெணின்(Benin) நாட்டிற்கு 12.3 லட்சம் டன், செனகல் நாட்டிற்கு 10.36 லட்சம் டன், வங்கதேசத்திற்கு 9.11 லட்சம் டன், டிகோ 7.8 லட்சம் டன், கோட் டி ‘ஐவோரி 7.3 லட்சம் டன், கினியா 6.1 லட்சம் டன், மலேசியா 4.53 லட்சம் டன், ஈராக் 2.9 லட்சம் டன், ஐக்கிய அரபு நாடுகள் 2.9 லட்சம் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெறும் 27,000 டன் மட்டுமே. உண்மை இவ்வாறிருக்க, அமெரிக்கா மட்டும் அதிக பாதிப்படைந்து விட்டதாக அங்கு வாழும் அக்ரகாரத்து அம்பிகள் மூக்கை சிந்தினர். மோடியின் பக்தர்களான என் ஆர் ஐ பார்ப்பனர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

எங்கே நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க அம்பிகள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடி, ஒரே நாளில் தேவைக்கு அதிகமாக வாங்கி கடையையே காலி செய்து விட்டனர் என்பதும், அமெரிக்காவின் தும்மலுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் அதீத முக்கியத்துவமும்தான் இதற்கு காரணம். உண்மையில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பல தங்கள் இறக்குமதியில் 60 – 80 சதவீதம் இந்திய இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தன. அந்த நாடுகளின் பஞ்சைப்பராரிகள் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்ற இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஊடகங்களின் அலட்சியம் அருவெறுக்கத்தக்கது. இந்த லட்சணத்தில் G-20 நாடுகளுக்கே இந்தியாதான் தலைமைதாங்கும் என்ற வெட்டிப்பெருமை வேறு!

ஏற்றுமதி தடைக்கு கூறப்பட்ட காரணங்கள் உண்மையில்லை!

இந்த ஆண்டு ஜுலை – 20 ஆம் தேதி பாஸ்மதி அல்லாத பச்சரிசிக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, புழுங்கல் அரிசிக்கு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமே குருணை அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததுடன், புழுங்கல் உள்ளிட்டு அனைத்து வகை அரிசிக்கும் 20%  ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இதுவும் ஏற்றுமதியை தடுப்பதற்கான முயற்சிதான்.

அப்போதும் இவர்கள், பாஸ்மதி அல்லாத பச்சரிசி (வெள்ளை அரிசி) போதுமான அளவில் இந்திய சந்தைகளில் கிடைப்பதை உறுதி செய்யவும் விலை ஏற்றத்தை தவிர்க்கவும்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினர். அந்த ஆண்டு வட இந்தியாவில் பயிர் சாகுபடி காலத்தில் தாமதமாக மழை பெய்ததால் நடவு பாதிக்கப்பட்டது ஒரு புறமிருக்க, அடுத்து பெய்த மழை நடவு செய்த வயல்களை பாதிப்படையச்செய்தது. இவற்றின் காரணமாக, 5-6 சதவீதம் அதாவது 10-12 மில்லியன் டன் (1-1.2 கோடி டன்) விளைச்சல் பாதிக்கும் நிலை இருப்பதாக கூறப்பட்டது. எதிர்பார்த்ததை விடவும் 2021-22 காலத்தில் மோசமான முறையில் 13.84 சதம் விளைச்சல் குறைந்து போனது.

அரிசி விலை சென்ற ஆண்டு ஜுலை முதல் உயர்ந்து வருகிறது. 12 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக சந்தையில் இது 30 சதவீதமாகவும் உள்நாட்டில் சுமார் 15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பருவ மழை, குறிப்பாக உரிய காலத்தில் பெய்யாமலும் பின் அதிகம் பெய்தும் விளைச்சல் பாதிக்கப்படுவதும் அதனால் அரிசி உற்பத்தி குறைவது ஒரு காரணம் என்றாலும், அது மட்டுமே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமல்ல. எனவே, சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியைத் தடை செய்வதன் மூலம் அதை சரி செய்து விடவும் முடியாது.

மறுபுறம், இந்தியா ஏற்றுமதியைத் தடை செய்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளும் ஏற்றுமதிக்கு தடை விதித்தன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசி ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு முக்கிய இடைமாற்று இடமாக இருப்பது அரபு நாடுகள்தான் என்பதால் அவை கடுமையாக பாதிப்படைந்தன.

ஏற்கெனவே, ரசிய – உக்ரைன் போரைத் தொடர்ந்து ரசியாவிற்கெதிரான பொருளாதாரத் தடை, கடும் முயற்சிக்குப்பின் உருவான கருங்கடல் தானிய ஒப்பந்த முயற்சியின் தோல்வி போன்றவை உலக உணவுப்பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில், ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாட்டு மக்களை இந்திய அரிசி ஏற்றுமதிக்கான தடை பட்டினிச்சாவை நோக்கி தள்ளுவதாகவே அமையும்.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஏற்றுமதி தடையால் இந்திய நுகர்வோருக்கு பலன் ஏதும் கிட்டவில்லை. ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையிலும் சர்வதேச சந்தையில் அரசிவிலை அதிகரித்ததன் காரணமாக இந்திய வர்த்தகர்கள் அப்போதும் நல்ல லாபம் பார்த்தனரே தவிர, உள்நாட்டு சந்தைக்கு வரவில்லை. அது மட்டுமல்ல, 5 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஏற்றுமதியும் செய்யாமல், உள்நாட்டு சந்தைக்கும் அனுப்பாமல் வணிகர்கள் முடக்கி வைத்துள்ளனர்.

எத்தனால் உற்பத்திக்காக பலியிடப்படும் உணவுப்பாதுகாப்பு.

சென்ற ஆண்டு நொய் (குருணை) அரிசி தடை செய்யப்பட்டதற்கு முதன்மைக் காரணம், அதை எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு அப்படியே திருப்பி விட்டதுதான். உள்நாட்டு அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது, இந்திய மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் அரிசி கிடைத்து ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதெல்லாம் சங்கி மோடியின் சிந்தனையிலேயே தோன்றுவதில்லை. இது நாம் வலிந்து திணிக்கும் அபாண்டமான குற்றச்சாட்டல்ல என்பதை பின் வரும் விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20% எத்தனாலைக் கலப்பது என்ற ( E-20 ) இலக்கை நிர்ணயித்துள்ளது பாசிச மோடி அரசு. பெட்ரோல் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் 4 பில்லியன் டாலர் (ரூ. 30,000 கோடி) அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்கின்றனர். எனவே, எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அரிசி, மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்களை எத்தனால் தயாரிப்புக்கு திருப்புவதுடன், எத்தனால் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக விளங்கும் மக்காச்சோளம், கரும்பு போன்றவற்றை பயிரிடுவதற்காக உணவு தானிய உற்பத்திப் பரப்பை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது பாசிச கும்பல்.

எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலை

2022 ஆம் ஆண்டில் பட்டினிக்குறியீட்டில் சென்ற ஆண்டை விட 6 இடம் மேலும் பின் தங்கி 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. மொத்தமுள்ள 116 நாடுகளில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மர் போன்றவை கூட முறையே 99, 64, 84, 81, 71 என்ற இடங்களைப்பெற்றுள்ள நிலையில், அவற்றை விட கேவலமாக பின் தள்ளியிருப்பது பற்றி துளியும் வெட்கப்படாத ஆட்சியாளர்கள், நிலவை ஆய்வு செய்வதில் அமெரிக்கா, சீனா, ரசியாவையெல்லாம் முந்திக்கொண்டு முதலிடத்தில் உள்ளோம் என மார்தட்டுவதில் முனைப்பு காட்டுகின்றனர். தற்போது, எத்தனால் உற்பத்திக்காக உணவு தானியங்களை திருப்பி விட்டு இந்தியாவை மட்டுமல்ல, மொத்த உலகத்தையுமே பட்டினிச்சாவுக்கு தள்ளத் துணிந்து விட்டார்கள். கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளின் இந்த நடவடிக்கை மனித நேயம் கொண்ட அனைவரையும் அவமானத்திற்கும் உள்ளாக்குகிறது.

இதையும் படியுங்கள்:

♦ செறிவூட்டப்பட்ட அரிசி  ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?

♦ இனிப்பில்லா கரும்பு விவசாயம் கசக்கும் தமிழர் திருநாள்.

உணவுப்பொருள் விலையேற்றத்தாலும் உணவுப்பொருள் பற்றாக்குறையாலும் உலகமே தவித்துவரும் நிலையில்தான் 2023 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி வரை 130.5 லட்சம் டன் குருணை அரிசியை எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கு திருப்பி விட்டுள்ளது. அந்த ஆலைகளின் உற்பத்தி இலக்கு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் குருணை அரிசி ஏற்றுமதி தடைக்கு முக்கிய காரணமாகும். கர்நாடக அரசு, ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவிக்கும் தனது மாநில ஏழை மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் தருவதற்கு, கிலோ 38 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாகக் கூறியும் அரிசி தர மறுத்து விட்டு, எத்தனால் தயாரிக்கும் டிஸ்டிலரிகளுக்கு வெறும் 20 ரூபாய் விலைக்கு (அடக்க விலையை விட குறைவாக) அரிசியை அள்ளித்தருகிறது மோடி அரசு. 2020 – 21 ல் வெறும் 4.9 லட்சம் டன்னாக இருந்த இந்த ஒதுக்கீடு E-20 இலக்கிற்குப்பிறகு 130 லட்சம் டன்னாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் இந்த திட்டம் உணவுத்தட்டுப்பாட்டையும் பட்டினிச்சாவையும் நோக்கி தள்ளும் என எச்சரிப்பதுடன், நடைமுறையில் இது சிக்கலானது, விரயமானது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டி எச்சரித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, ஒரு ஹெக்டேர் சூரிய ஆற்றலில் இருந்து ரீசார்ஜ் செய்யப்பட்ட மின்சார வாகனத்தின் வருடாந்திர பயண தூரத்தைப் பெறுவதற்கு, 187 ஹெக்டேர் அளவு நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டால்தான் அதற்கு இணையான எத்தனாலைப் பெற முடியும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எத்தனால் தயாரிப்புக்கு கரும்பையோ, அரிசியையோ பயன்படுத்துவது அதிக தண்ணீரை விரயம் செய்வதாகவும் நல்ல விளை நிலங்களை எத்தனால் தயாரிப்புக்கானதாக மாற்றி உணவுப் பாதுகாப்பை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால், மக்களைப்பட்டினிச்சாவுக்கு தள்ளினாலும் E-20 இலக்கை இரண்டாண்டுகள் முன்னரே எட்டிவிட வேண்டும் என்ற வெறித்தனத்துடன் வேலை செய்கின்றன மனித குல விரோத பாசிஸ்டு கும்பல்.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த 2025 க்கு முன்னதாக 2023 லேயே எட்டிவிட வேண்டுமென்ற மோடி அரசின் வெறித்தனத்தை காட்டும் அட்டவணை.

 

பெட்ரோலில் எத்தனால் கலப்பது என்பது, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் முயற்சிக்கப்பட்டு கைவிடப்பட்ட திட்டமாகும். தற்போது பிரேசில் தவிர வேறெந்த நாடும் இந்த முயற்சியை பின்பற்றவில்லை. தோல்வியடைந்த இந்த திட்டத்திற்காக மக்களை பட்டினிச்சாவுக்கு தள்ளுவதுதான் பாசிஸ்டுகளின் சாதனை.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், எத்தனால் இலக்கை எட்ட எங்களுக்கு அரிசியை சலுகை விலையில் தந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிய டிஸ்டிலரி முதலாளிகள், அந்த அரிசியை அதிக விலைக்கு மறு விற்பனை செய்து கொள்ளையடித்துள்ளனர். இதன் காரணமாக, அவர்களுக்கு குருணை அரிசி சப்ளை செய்வதை இந்திய உணவுக் கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

(தொடரும்…)

  • மணிகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here