பாஜகவினரின் இந்துத்துவா சோதனைச் சாலையான குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் டிஆர்பி கேமிங் ஜோன் என்ற பெயரில் இயங்கி வந்த பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் மே 25 அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகியுள்ளனர். இது விபத்து அல்ல. மாநில அரசால் – அரசு எந்திரத்தால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்தப் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து 18 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரையிலும் இந்தக் கட்டுமானத்திற்கு தீ தடுப்பு சான்றிதழ் கட்டுமானத்தின் உறுதி உத்திரவாத்திற்கான சான்றிதழ் போன்றவை பெறாமலேயே நடத்தி வந்துள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான எந்த சான்றிதழ்களும் பெறாமல் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை எப்படி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அவர்களால் கல்லா கட்ட முடிந்தது? பயன்பாட்டிற்கு வந்த பிறகு ஒரு முறை கூட அரசு தரப்பிலிருந்து ஆய்வுக்கு செல்லவே இல்லை என்பதற்கு காரணம் என்ன?
இந்தக் கேள்விகள் நமக்கு முக்கியமானதாக இருக்கலாம் ஆனால் அந்த நகரில் உள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பொருட்டே அல்ல.
மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் படேல் அவர்களே டிஆர்பி கேமிங் ஜோன் என்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவிற்கே சென்றுள்ள நிலையில் எந்த அதிகாரிக்கும் சோதனை செய்ய வேண்டும் அல்லது உரிய அனுமதி பெறாமல் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே வந்திருக்க வாய்ப்பு இல்லை. அதற்குக் காரணம் பயம் என்றும் நாம் கூறவில்லை. தொடர்புடைய அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சிறப்பான கவனிப்புகள் செய்யப்பட்டு இருக்கும் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
சரி, தீ பிடித்து 30 பேர் கொல்லப்பட்ட பிறகாவது பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததா என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் அங்கு நடப்பது சங்கிகளின் ஆட்சி. இதைக் கண்டு எரிச்சலடைந்த நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது.
அந்த விசாரணையின் போது மாநகராட்சி கமிஷனர் திறப்பு விழாவுக்கு சென்றது, தீ பாதுகாப்பு சான்றிதழ், கட்டமைப்பு உறுதித்தன்மைக்கான சான்றிதழ் இல்லாமல்,18 மாதங்களாக, இது செயல்பட்டுக் கொண்டுடிருப்பதை மாநகராட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குறித்து நீதிபதி வைஷ்ணவ் காட்டமாக கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த அரசு மீது நம்பிக்கையே இல்லை என்றும் கூறியுள்ளார்
இதன் பிறகு வேறு வழியின்றி மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் படேல் மற்றும் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா ஆகியோர் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பாஜக அரசு. கொல்லப்பட்ட 30 மனித உயிர்களை கூந்தலுக்குச் சமமாக பாசிச பாஜக அரசு கருதுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. 3000 இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்களுக்கு இது மிகவும் இயல்பான ஒன்று.
நீங்களே சொல்லுங்கள்.
இந்த 7 அதிகாரிகள் மட்டும்தான் குற்றவாளிகளா? ஆளும் பாஜக அரசு குற்றவாளி இல்லையா?
— குமரன்