
தொழிலாளி வர்க்கம் எத்தருணத்திலும் மனத்தில் இறுத்தி வைக்க வேண்டிய ஆசான் கார்ல் மார்க்ஸின் கருத்துக் கருவூலம்!
“கைத்தொழில்களிலும் பட்டறை உற்பத்தியிலும் தொழிலாளி கருவியை பயன்படுத்துகிறான். தொழிற்சாலையிலோ இயந்திரம் அவனை பயன்படுத்துகிறது. அங்கு உழைப்புக் கருவிகளை அவன் இயக்கினான் .இங்கோ இயந்திரத்தின் அசைவுகளை தான் அவன் பின்பற்ற வேண்டும். அதே வேளை, இந்த இயந்திர அமைப்பு நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக தளர்வடையச் செய்கிறது. தொழிற்சாலை வேலையானது தசைகளின் பன்முக இயக்கங்களுக்கு இடமில்லாமல் செய்துவிடுகிறது. உடல் ரீதியான செயலாகட்டும், அறிவு ரீதியான செயலாகட்டும், இரண்டிலும் ஓர் அணு அளவு கூட சுதந்திரம் இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவகை சித்திரவதை ஆகிவிடுகிறது. ஏனெனில் இயந்திரமானது உழைப்பாளியை வேலையில் இருந்து விடுவிப்பதில்லை. மாறாக வேலையை முற்றிலும் சுவாரசியம் அற்ற தாக்குகிறது. உற்பத்திக்கு உடல் உழைப்பும் மூளை உழைப்பும் தேவை. மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்தலும், இந்த மூளைத் திறன்களை உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூலதனத்தின் வலிமையாக மாற்றியமைத்தலும் (ஏற்கனவே எடுத்துக்காட்டியது போல) இயந்திரம் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட நவீன தொழிலால் முழுமை பெற்றது.”
–காரல் மார்க்ஸ்
(அரசியல் பொருளாதாரத்திற்கு ஒரு விமர்சனம் என்கிற நூலில் இருந்து)
“….. அதாவது உழைப்பு, தொழிலாளியின் உயிர்ச் செயலாகும். தனக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்காக அவன் உயிர்ச்செயலை முதலாளிக்கு விற்கிறான்…. முதலாளியின் உடைமையாக, அவனால் மாற்றி தந்துவிடப்பட்ட பரிவர்த்தனைச் சரக்கே அது…
அவன் தனக்காக உற்பத்தி செய்வது அவன் நெய்யும் பட்டுத்துணியோ, சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கும் தங்கமோ, கட்டி எழுப்பும் மாடமாளிகையோ அல்ல. அவன் தனக்கு உற்பத்தி செய்து கொள்வது கூலி உழைப்பைத் தான்… 12 மணி நேரம் நெய்தோ, நூற்றோ, துளைத்தோ, கடைந்தோ, கட்டிடம் கட்டியோ, மண்வெட்டியோ, கல் உடைத்தோ, சுமை தூக்கியோ, வேறு ஏதோ வேலை செய்தோ வருகிற உழைப்பாளி, தனது பன்னிரண்டு மணி நேர வேலை என்பதைத் தனது வாழ்வாகக் கருதுகிறானா? இல்லை… உணவு மேஜை, மது விடுதி, ஓய்வு ஆகியவற்றுக்கு அவனை இட்டுச் செல்லும் கூலி என்னும் வகையில் மட்டுமே இந்த உழைப்பு அவனுக்கு அர்த்தம் உடையதாக தெரிகின்றது. பட்டுப்புழு ஒரு கம்பளிப் புழுவாக தொடர்ந்து நீடிக்கும் பொருட்டு நூற்றுக் கொண்டே இருக்குமானால் அதுவும் முழுக்க முழுக்க கூலித் தொழிலாளியாக ஆகிவிடும்.”
-கார்ல் மார்க்ஸ்.
(கூலி உழைப்பும், மூலதனமும் என்கிற நூலிலிருந்து)
தொகுப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி