சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பழி வாங்கும் நடவடிக்கையை கண்டித்து கடந்த 05 பிப்ரவரி முதல் சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்க உரிமைக்காகவும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 38 நாட்கள் நீண்ட போராட்டத்தை நடத்தி வந்தார்கள் சாம்சங் தொழிலாளர்கள். இதில் அரசும் காவல்துறையும் சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளை செலுத்தியது. தொழிலாளர் துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுத்து சாம்சங் முதலாளிக்கு எடுபுடி வேலை பார்த்தது.
இதற்கிடையில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தொழிற்சங்க பதிவு சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த மாதம் சாம்சங் தொழிற்சங்க பதிவை உறுதி செய்தது தமிழக அரசு.
அப்போதே போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பியவர்கள் அனைவரையும் பணிக்கு எடுத்துக் கொள்ளாமல் சில தொழிலாளிகளை மட்டும் வேலையில் அனுமதித்து மீதமுள்ள தொழிலாளர்களை பயிற்சி என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது சாம்சங் நிர்வாகம். பணி செய்யவிடாமல் மன அழுத்தத்தை ஏற்படுத்தி சாம்சங் நிர்வாகம் உருவாக்கியிருக்கும் கமிட்டியில் சேர நிர்பந்தித்தது.
இந்நிலையில் தான் சங்கம் அமைத்ததற்காக மூன்று நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்து தனது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்கிறது. பொய் குற்றச்சாட்டின் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் சாம்சங் தொழிலாளர்கள்.
படிக்க:
♦ சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது! போராட்டத்தை சிதைக்கும் திமுகவின் துரோக செயல்!
தங்களது ஊதிய உயர்வு குறித்து மன்றாடியும் சாம்சங் நிர்வாகம் அசைந்து கொடுக்காத காரணத்தினால் தான் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நாடினார்கள். அதன் பிறகு தொழிலாளர்களுக்குள்ளேயே பிளவை ஏற்படுத்தும் விதமாக பெரும்பான்மை தொழிலாளர்கள் இருக்கும் சங்கத்தை அங்கீகரிக்காமல் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியை வைத்துக்கொண்டு சாம்சங் நிர்வாகம் அவர்களுடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் பெரும்பான்மை தொழிலாளர்கள் நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், சட்டத்தை மீறி ஒப்பந்த தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி வருகிறது. இது அனைத்தும் தெரிந்தும் கண்டும் காணாதது போல் நடந்து கொள்கிறது தொழிலாளர் நலத்துறை.
படிக்க:
♦ சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான போராட்டமும்! ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் விசுவாசமும்!
இதுகுறித்து பேசிய சாம்சங் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் முத்துக்குமார் “நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய தொழிலாளர்களை குறிவைத்து, சாம்சங் நிர்வாகம் தொடர்ந்து இடையூறுகளை கொடுத்து வருகிறது. தொழிலாளர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத இதர துறைகளுக்கு இட மாற்றம் செய்துள்ளது. தொலைக் காட்சி உற்பத்தி, கம்ப்ரசர் பிரிவு, குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இதில், தொலைக்காட்சி தயாரிப்புப் பணியில் உள்ளவர்களை அவர்களுக்குப் பழக்கம் இல்லாத போர்க்லிப்ட் பணிக்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு பலரையும் இடமாற்றம் செய்துள்ளது. இதுபற்றி, தொழிலாளர் நலத்துறையிடம் புகார் தெரிவித்தோம்.” என்றார்.
இதுநாள் வரை போராடும் தொழிலாளர்கள் பக்கம் தமிழ்நாடு அரசும், தொழிலாளர் துறையும் நிற்கவில்லை. முதலீடுகள் வந்தால் பொருளாதார உயரும், தமிழ்நாடு வளர்ச்சியடையும் இன்று திமுக அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் அந்த முன்னேற்றம் எல்லாம் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு பலன் அளிப்பதாக இல்லை. மாறாக லாபத்தை தின்று முதலாளித்துவமே கொழுத்து வருகிறது.
சங்கம் வைப்பது குற்றம், போராடுவது குற்றம், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்பது குற்றம். இது முதலாளித்துவத்தின் எழுதப்படாத விதியாக உள்ளது. இதற்கு எதிராக முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அரசிடம் முறையிட்டாலும் பலனளிக்காது. முதலாளித்துவத்தின் ஒவ்வொரு அடக்குமுறையும் தொழிலாளர்கள் வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
சாம்சங் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!.
- நந்தன்