நேற்று (08.10.2024) இரவு samsung தொழிற்சங்க நிர்வாகிகளை திமுக அரசின் காவல்துறை வீடு புகுந்து கைது செய்துள்ளது.
சாம்சங் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் எல்லன், துணைத் தலைவர்கள் ஆசிக், மோகன்ராஜ், மாதேஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை, அரசு நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி வருவாய் துறையினர் அகற்றி உள்ளனர்.
நேற்று(08.10.2024) போராட்டத்திற்காக சென்ற சாம்சங் தொழிலாளர்களை பேருந்தில் வைத்து தீவிரவாதிகளை விசாரிப்பது போல் அடையாள அட்டையை கேட்டு மிரட்டியுள்ளது காவல்துறை.
இவை அனைத்தும் சாம்சங் நிறுவனத்தின் நலனுக்காக, கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் திமுகவின் துரோக செயல்.
30 நாட்களாக நடந்து கொண்டிருக்கும் samsung தொழிலாளர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சாம்சங் நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து திமுக அரசு பொய்யான செய்தியை பரப்பி வருகிறது.
சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிராக துரோக ஒப்பந்தம்!
நேற்றைய தினகரன் செய்தித்தாளில் “சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு” என்ற தலைப்பிட்டு உள்ளே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து அடுத்து நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சண்முகம், டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இதில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. சாம்சங் நிறுவனத்தின் பெரும்பான்மை தொழிலாளர்கள் தங்களை சிஐடியு சங்கத்தில் இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சங்கத்தை அங்கீகரிக்காமல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்காததாலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சாம்சங் நிறுவனத்தின் அப்பாவி தொழிலாளர்களை தவறாக பயன்படுத்திக் கொண்டு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என திமுக அரசு செய்தி வெளியிடுவது பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம்.
இது குறித்து சாம்சங் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “…திமுக அமைச்சர்கள் மூவர் முன்னிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ஒன்பது பேர் அடங்கிய பேச்சுவார்த்தை குழு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும், அரசின் முன்னால் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசு அவர்களை அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது” என்று நமது நிலைமையை திட்டவட்டமாக தெரிவித்தோம் என்றார்.
📌 சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான போராட்டமும்! ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் விசுவாசமும்!
மேலும், “இது குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும் முதலமைச்சரிடமும் நாளை தெரிவித்துவிட்டு எங்கள் முடிவை சொல்லுகிறோம் என்று அமைச்சர் தாமோ அன்பரசன் தெளிவுபட சொன்னார். நாங்கள் வெளியே வந்து விட்டோம் அதன்பின்பு அப்பாவி சாம்சங் தொழிலாளர்களை வைத்துக்கொண்டு முன்கூட்டியே தயாரித்து எடுத்து வரப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து சாம்சங் தொழிலாளர்களுடன் உடன்பாடு ஏற்பட்டு விட்டது என்று அமைச்சர் அலுவலகங்களில் இருந்து அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இதனை எல்லா ஊடகங்களும் சமீபத்தில் வெளியிட்டுள்ளன. இது தொழிலாளி வர்க்கத்திற்கு திமுக செய்திருக்கும் மாபெரும் கருங்காலித்தனம்” என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த மொத்த செயலும் அப்பட்டமாக சாம்சங் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்திற்கு மிகப்பெரும் துரோகம் இழைக்கும் செயலை ஆளும் திமுக அரசே செய்திருக்கிறது.
போராடும் தொழிலாளர்களையும் உறுதுணையாக நிற்கும் தொழிற்சங்கத்தையும் அவதூறு செய்யும் விதமாக வீடியோக்களை பரப்புவதையும் திமுகவும் சாம்சங் நிறுவனமும் கூட்டு சேர்ந்து வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளம் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதா? ஆம், என்று திமுக சொல்லுமானால் எம்எல்ஏக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை பத்தாயிரம் ஆக குறைக்குமா?
எட்டு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களை சக்கையாக பிழிந்து விட்டு அற்ப கூலியை கொடுத்து ஏமாற்றுவதை திமுகவின் திராவிட மாடல் அரசு ஊக்குவிக்கிறது இதனை துளிர் வளர்ச்சி என்று புகழ் பாடுகிறார் புகழ் பாடுகிறது ஆனால் தொழிலாளர்களோ ஒட்டச் சுரண்டப்பட்டு ஓட்டாண்டி ஆகிறார் கள்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை சீர்குலைக்க சாம்சங் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொய்யான ஒப்பந்தத்தை போட்டு துரோகம் இழைத்த திமுக அரசை தொழிலாளர்கள் மன்னிக்க மாட்டார்கள். வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் நலனை அடக்க வைக்கும் திமுகவிற்கு பாடம் கற்பிப்பார்கள்..
- நலன்
கட்டுரை சிறப்பு.
ஆனால் சில இடங்களில்
எழுத்துப் பிழை உள்ளது தோழர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் கருத்துக்களை ஏற்கிறோம் தோழர். சரி செய்துக் கொள்கிறோம்
கார்ப்பரேட் சேவையில் பாசிச பாஜகவை மிஞ்சும் கார்ப்பரேட் கைக்கூலி ‘திராவிட மாடல்’ திமுக!