குமார வயலூரில் தொடங்கிய போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வரை ஓயாது!

குமாரவயலூரில் போராடிய மக்கள் கலை இலக்கிய கழகம் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வையும், தன்மான உணர்வையும் தனது போராட்டத்தினால் நிலைநாட்டியது.

போராட்ட பதாகைகளுடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள்

ந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், இழிவு படுத்தப்பட்டு வரும் நாட்டின் பெரும்பான்மை மக்கள் பார்ப்பன மதத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பல்வேறு அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

பார்ப்பன மதம் என்று இந்து மதத்தை நாம் ஏன் விமர்சிக்கின்றோம் என்றால் பிரம்மனின் முகத்தில் பிறந்ததாக தம்மை உயர்த்திப் பேசும் பார்ப்பனர்கள், தன்னை பூதேவர்களாக கருதிக் கொள்வது மட்டுமின்றி தன்னையே கடவுளாக கூறிக் கொள்கின்றனர்.

தனக்கு கீழ் உள்ள சாதிகளை வைசியர்கள், சத்திரியர்கள் என்று ஓரளவுக்கு கௌரவமாகவும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று அவமானப்படுத்தியும், இழிவுபடுத்தியும் நடத்துகிறார்கள்.

விவசாயம் முதல் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை அனைத்திலும் வேலை பார்ப்பதற்கு சாதி தேவையில்லை; அதேபோல அரசுத்துறை முதல் தனியார் துறை வரை அனைத்திலும் அதிகாரிகளாகவும், தமிழகத்திலும் சரி! இந்திய ஒன்றிய அமைச்சர்களாகவும் சரி! செயல்படுவதற்கு சாதிய பின்னணி ஒரு தகுதியாக கொள்ளப்படுவதில்லை.

ஆனால் உழைக்கும் மக்கள் தனது உதிரத்தை சிந்தி உழைப்பதின் மூலமாக உருவாக்கிய பணத்தை கொடுத்து, தனது உடல் உழைப்பை செலுத்தி உருவாக்கிக் கொடுக்கின்ற கோவில்களில் கருவறைக்குள் புகுந்து அர்ச்சனை செய்யும் உரிமை மட்டும் சாதியின் பெயரால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து பல நூற்றாண்டுகளாக பார்ப்பன மதத்தில் உள்ள சமூக சீர்திருத்தவாதிகள் போராடி வந்த போதிலும், மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு, பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் இருக்கக் கூடாது என்பதை முன்வைத்து தந்தை பெரியார் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று 1970 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுப் போராடத் துவங்கினார்.

அதன் பிறகு சட்டரீதியிலும், சமூகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 2006 ஆம் ஆண்டு திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது.

அதன்படி அர்ச்சகர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி முறையாக ஆகம விதிகள், பூசை செய்யும் முறைகள் அனைத்தையும் முறையாக பயின்று 207 மாணவர்கள் தேர்ச்சியும் பெற்றனர்.

போஸ்டர்

பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008 ஆம் ஆண்டில் தீட்சை முடித்துவிட்ட நிலையில், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை உத்தரவைப் பெற்றது. இதனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தீர்ப்பும் வெளியானது.

அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியேற்ற 100 வது நாளில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த முறையாக ஆகம விதிகளை படித்து பட்டம் பெற்ற தீட்சை பெற்ற பார்ப்பனரல்லாத அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து பல்வேறு கோவில்களில் அர்ச்சர்களாக நியமித்தனர். 28 பேருக்கு பணிகள் வழங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட போதே பெரும்பான்மையான ஆகம விதிகளின்படி செயல்படுகின்ற கோவில்களில் அவர்களை நியமிக்காமல், விதிவிலக்காக சில கோவில்களிலும், ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு அன்றாடம் காய்ச்சிகளாகவும், உண்டக்கட்டியாகவும் இருந்த கோவில்களில் மணியடிக்கவும் அவர்களை நியமித்தது திமுக அரசு.

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் இருவர்தான்
“ஏழ்தலம் புகர் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா’
என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட திருச்சி அருகில் உள்ள குமார வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர்களான ஜெயபால் மற்றும் பிரபு ஆகியோர் முருகனைத் தொட்டு பூசை செய்யும் உரிமை இல்லாதவர்களாகவும், பார்ப்பனக் கும்பலுக்கு வெறும் எடுபிடியாகவும் மட்டுமே வைத்துக் கொள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் 2021 ஆண்டு முதலே போராடி வருகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று நேர்மையாக போராடுகின்ற திராவிட இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவை சட்டரீதியாக வழக்கு நடத்துவது; அவ்வப்போது அறிக்கைகளை விடுவது என்று ஒரு வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் சூழலில், மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்த அவமானத்தை துடைத்தெரிய உறுதி மேற்க்கொண்டது.

இந்த வயலூர் முருகனை எண்ணி திருப்புகழில் 18 பாடல்களை பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். குமார வயலூர் கோவிலில் கிருபானந்த வாரியார் நடத்திய குடமுழுக்கு தான் பிரபலமானது. அதன் பிறகு தற்போது இந்து சமய அறநிலைத்துறையால் நடத்தப்படும் குடமுழுக்கு சமயத்தில், தமிழக அரசால் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட ஜெயபால், பிரபு ஆகியவர்களை புறக்கணிக்கின்ற பார்ப்பன கும்பலை எச்சரித்தும் அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 17-02-2025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

படிக்க:

♦  திருச்சியில் ம.க.இ.க சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு!

உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக வழக்குகள் நடைபெற்று வருவதாலும், குறிப்பாக குமார வயலூரில் நியமிக்கப்பட்ட ஜெயபால், பிரபு ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளதாலும் அவர்களை அர்ச்சகர் வேலையில் அமர்த்த முடியாது என்று இந்து அறநிலையத்துறை தனது ’பவரை’ காட்டியது.

மக்கள் மத்தியில் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களும், வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டு வந்த சூழலில், ”அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்,” ”குமார வயலூரில் அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களை அவமானப்படுத்தாதே,” ”உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர்கள் நியமன தடைக்கு எதிராக உள்ள வழக்கை பொருத்தமான வழக்கறிஞர்களை முன்வைத்து எதிர்கொள்’ என்ற முழக்கங்களை முன்வைத்து குடமுழுக்கு நடத்தப்படும் கோபுரத்தின் கீழே நின்று போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.

”புரியாத மொழிக்கு மரியாதை எதற்கு” என்ற ஆவேசத்துடன் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், அனைத்து சாதியினரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற சமத்துவ சிந்தனையையும் உயர்த்திப் பிடித்து குமாரவயலூரில் போராடிய மக்கள் கலை இலக்கிய கழகம் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வையும், தன்மான உணர்வையும் தனது போராட்டத்தினால் நிலைநாட்டியது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட மார்க்சிய- லெனினிய அமைப்புகள் துவக்கப்பட்ட காலத்தில் மனு கொடுப்பது என்பதை ஒரு போராட்ட வடிவமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும், மனு கொடுப்பது என்பது தமது போராட்டத்தின் ஒரு அடையாளம் என்பதால் மனு கொடுப்பது என்பதை ஏற்றுக் கொண்டது; அதே சமயத்தில் மனு கொடுத்தால் மட்டும் அனைத்தும் முடிந்துவிடும் என்று ஊடகங்களுக்கு முகத்தை காட்டி, பல்லை காட்டி விட்டு செல்வதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் தயாராக இல்லை.

இன்று சிறு பொறியாய் குமாரவயலூரில் உருவாகிய தீப்பொறி, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு இவற்றுக்கும் ஆன்மீகத்தின் மூலம் அவர்களை அவமானப் படுத்தும் பார்ப்பன மதத்திற்கும் இடையில் உள்ள உறவை சரியாகப் புரிந்துக் கொண்டு விட்டால் அனைத்து கோவில்களும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்; அப்போது தமிழ் மொழி அங்கே நிரந்தரமாக ஒலிக்கும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையும் நிலை நாட்டப்படும்.

  • தமிழ்ச் செல்வன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here