கிராஸ்ரூட்ஸ் ஆக்சன் மற்றும் App-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு எட்டு நகரங்களில் 5,302 கார் ஓட்டுநர்கள் மற்றும் 5,028 டெலிவரி நபர்களை உள்ளடக்கிய GIG தொழிலாளர்களிடையே ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில் App அடிப்படையிலான வாகன ஓட்டுநர்களில் ஏறக்குறைய 83% பேர் நாளொன்றுக்கு 10 மணிநேரத்துக்கும் அதிகமாகவும், மூன்றில் ஒரு பங்கினர் 14 மணிநேரத்துக்கும் அதிகமாகவும் உழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் GIG தொழிலாளர்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் ஓட்டுநர்களில் முற்பட்டபிரிவைச் சேர்ந்தவர்கள் 16 சதவீதமாகவும், பட்டியல்சாதிகள் மற்றும் பழங்குடியினர் 60 சதவீதமாகவும் உள்ளதைக் கண்டறிந்துள்ளது. இந்திய GIG தொழிலாளர்களிடையே சமூக ஏற்றத்தாழ்வுகள் பிரதிபலிக்கும் ஆபத்தான போக்குகளையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நிதி சிக்கல்

ஆய்வில் பங்கேற்ற தொழிலாளர்களில் 43%-க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு ரூ. 500 அல்லது அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.15,000-க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். கிட்டத்தட்ட 34% டெலிவரி பணியாளர்கள் மாதம் ரூ.10,000-க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், 78% பேர் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்டி, “இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்கனவே இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகப்படுத்துகிறது, இந்த சமூகங்களுக்குள் வறுமை மற்றும் துயரத்தின் சுழற்சியை நிரந்தரமாக்குகிறது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஓட்டுநர்கள் உடல் ரீதியாக சோர்வடைந்து, நீண்ட வேலைநேரம் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயத்திற்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. சில டெலிவரி தளங்களின் “10 நிமிட டெலிவரி” கொள்கையால் இது இன்னும் மோசமாகிறது. டெலிவரி பணியாளர்களில் 86% பேர் இத்தகைய கொள்கைகள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனக் கூறியுள்ளனர்.

ஏறக்குறைய 72% கார் ஓட்டுநர்கள் மற்றும் 76% டெலிவரி பணியாளர்கள் வாழ்க்கை செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்றும், குறிப்பாக டெலிவரி பணியாளர்களில் 68% பேர் தங்கள் வருமானத்தை விட அதிக செலவுகளை செய்யவேண்டியிருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த App அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு தகுந்த இழப்பீடு மற்றும் ஆதரவை அரசு அளிக்கவேண்டுமென்று இந்த அறிக்கை கோருகிறது.

நியாயமற்ற இழப்பீடு, ஓய்வில்லா வேலை!

80%க்கும் அதிகமான App அடிப்படையிலான கார் ஓட்டுநர்களும், 73% டெலிவரி பணியாளர்களும் தங்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களில் அதிருப்தி தெரிவித்தனர். ஒரு சவாரிக்கான கட்டணத்தில் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்ட 20% மாறாக 31-40% வரை நிறுவனங்கள் கழிப்பதாகக் கூறுகின்றனர். App நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான, அறிவிக்கப்படாத இந்த பிடித்தத்தை 68% பேர் நியாயமற்றதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: 

குறைந்த ஊதியத்தைத் தவிர, 41% ஓட்டுநர்கள் மற்றும் 48% டெலிவரி பணியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முடியாமல் வேலைசெய்கின்றனர்.

ID-களை செயலிழக்கச் செய்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் தவறான நடத்தை ஆகிய சிக்கல்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ID-யை செயலிழக்கச் செய்வது தங்களை எதிர்மறையாக பாதிக்கிறது என்று 83% கார் ஓட்டுநர்கள் தெரிவித்தனர், 47% பேர் இது தங்களை மிகவும் கடுமையாக பாதிக்கிறது என்று கூறியுள்ளனர். 87% டெலிவரி பணியாளர்களும் இதை ஆமோதிக்கின்றனர். வாடிக்கையாளர்களின் தவறான நடத்தையால் பெரும்பான்மையான (72%) கார் ஓட்டுனர்களும், 68% டெலிவரி பணியாளர்களும் எதிர்மறையாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கைக் கூறுகிறது.

மொழியாக்கம்: செந்தழல்

ஆதாரம்: thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here