
போலியான நீதிபதி, போலியான அரசு அலுவலகம், போலியான டோல்கேட்டு, போலியான ரூபாய் நோட்டுகள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த பாசிச மோடி – அமித்ஷாவின் குஜராத்தில் இப்பொழுது போலியான மருத்துவக் கல்வி நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டு கல்லா கட்டி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலியாக மருத்துவர் பட்டம் பெற்ற போலி மருத்துவர்கள் 14 பேர் குஜராத் முழுவதிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
₹ 70,000 For Medical Degree: 14 Fake Doctors Arrested In Gujarat https://t.co/Qn682Ycn8A pic.twitter.com/Auf0BsLcgK
— NDTV (@ndtv) December 5, 2024
குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் ஒரு போலியான மருத்துவ கல்வி நிறுவனம் ஒன்றை ‘துவங்கி’ அதில் Bachelor of Electro Homeopathy Medicine (BEHM) என்ற இளகலை பட்டத்தை ரூ.70,000 -க்கு கூவிக்கூவி விற்றுள்ளது ஒரு கும்பல்.
கல்லூரி வளாகம் இல்லை. பாடம் நடத்துவதற்கு பேராசிரியர்கள் இல்லை. எனவே ‘மாணவர்கள்’ கல்லூரிக்கு வரத் தேவையில்லை. ஆனால் பணம் கொடுத்த 15 நாட்களில் மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி 12,000 பேருக்கு போலிச் சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதில், BEHM என்ற ஒரு படிப்பே குஜராத்தில் இல்லை என்பதுதான் சிறப்பு. அதுவும் எட்டாவது படித்தவர்களுக்கும் இந்தப் பட்டத்தை விற்று அவர்களையும் மருத்துவர்களாக இந்த சமுதாயத்தில் வைத்தியம் செய்ய வைத்துள்ளனர். இந்தப் போலி மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 செலுத்தி தங்களின் சான்றிதழ்களை புதுப்பித்தும் வந்துள்ளனர்.
படிக்க: போலிகள் ஜாக்கிரதை! அம்பலமாகி நாறி வரும் ’குஜராத் மாடல்’!
இந்தப் போலி மருத்துவ கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் தங்களது கல்வி நிறுவனத்திற்கு என ஒரு இணையதளத்தையும் தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அந்தத் தளத்தில் இவர்களிடம் போலி மருத்துவச் சான்றிதழ் பெற்ற 1630 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் போலியான மருத்துவக் கல்வி நிறுவனம் 20 ஆண்டுகளாக சீரோடும் சிறப்போடும் தங்களது ‘கல்விப் பணியை’ ஆற்றி வந்திருக்கிறது என்பதுதான் சிறப்பிலும் சிறப்பான சாதனை.
தெய்வக் குழந்தை மோடி பட்டபடிப்பில் சேர்ந்து, படித்து, பட்டம் பெற்றதாகக் கூறப்படுது உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் காட்ட முடியாத நிலையில் உள்ள பாசிச பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில், இம்மாதிரியான போலி கல்வி நிறுவனம் 20 வருடங்களாக நடந்து வருவது ஆச்சரியப்படத்தக்க ஒன்று அல்ல.
— குமரன்