
விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயிக்க வேண்டும். அதற்கு சட்டபூர்வமான உத்தரவாதம் வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் டிசம்பர் 6 அன்று, தொடங்கினர். விவசாயிகள் சென்ற பேரணியின் மீது பாசிச பாஜக அரசு கண்ணீர் புகை குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதை இந்தியாவில் யாரும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. அவ்வளவு ஏன்? 2014 ஆம் ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியில் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று பாசிச பாஜக கூறியிருந்தது.
பத்து வருடங்கள் கடந்த பின்னும், இன்று வரை, பாஜக விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காமல் இருப்தற்கு காரணம் என்ன?
விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டால் இந்த விவசாய விளை பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு மிகப்பெரும் தடையாக அமையும். எனவேதான் பாஜக விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது.
விவசாய பொருட்களில் வணிகம் செய்வதன் மூலமாக கார்ப்பரேட்டுகள் வரைமுறையற்ற லாபம் சம்பாதிக்கும் வகையில் பாசிச பாஜக அரசு கடந்த ஆட்சியின் போது மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. அந்த வேளாண் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தால் இந்திய விவசாயிகளின் நிலைமை அதள பாதாளத்திற்கு சென்று இருக்கும்.
படிக்க: விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய பா.ஜ.க
இந்த மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக வடிவமைக்கப்பட்டவை என்பதை விவசாயிகள் உணர்ந்து கொண்டனர். அதன் விளைவாகத்தான் இந்திய வரலாற்றில், ஏன், உலக வரலாற்றில் கூட இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டத்தை டெல்லியின் எல்லையில் இந்திய விவசாயிகள் நடத்தி பாசிச பாஜகவை நடுநடுங்க வைத்தனர்.
700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்த போதும் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உலகம் முழுவதும் கொடுக்கப்பட்ட ஆதரவு போன்ற காரணங்களால் பாசிச பாஜக அரசு வேறு வழியே இன்றி மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
ஒரு சோப்பு கம்பெனி முதலாளி உற்பத்தி செய்யும் சோப்பிற்கான விலையை அவரே நிர்ணயிக்கிறார். எந்த முதலாளித்துவ கொம்பனாலும் உற்பத்தி செய்யப்படாத தண்ணீரை விற்கும் அக்வாஃபினா, பிஸிலரி போன்ற தண்ணீர் கம்பெனிகள், தண்ணீருக்கான விலையை அந்த கம்பெனினிகளே தீர்மானிக்கின்றன.
படிக்க: குறைந்தபட்ச ஆதார விலை: சாத்தியமில்லாத கோரிக்கையா?
அரசுத்துறையான பிஎஸ்என்எல் -இன் கட்டுமானங்களை பெருமளவில் பயன்படுத்தி இயங்கி வரும் ஜியோ, ஏர்டெல் போன்ற செல்போன் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் செல்போன் சேவைகளுக்கான கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு மக்களை கொள்ளை அடிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலைகளை வரைமுறையின்றி ஏற்றி நாட்டு மக்களை கொள்ளை அடிப்பதற்கு ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.
இப்படி கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காகவே இந்திய நாட்டின் சட்டங்கள், திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் விவசாய விளைபொருட்களிலும் வணிகம் செய்து விவசாயிகளையும் நாட்டு மக்களையும் வரைமுறையின்றி கொள்ளையடிப்பதற்கு கார்ப்பரேட்டுகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்றினால் அது கார்ப்பரேட்டுகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு மிகப்பெரும் தடையாக அமையும்.
கார்ப்பரேட்டுகளின் லாபவெறிப் பசிக்கு விருந்து வைப்பதற்கு தடையாக இருக்கும் ஒரு சட்டத்தையோ திட்டத்தையோ கொண்டு வருவதற்கு பாசிச பாஜக ஒன்றும் விவசாயிகளுக்கான கட்சியோ, மக்களுக்கான கட்சியோ அல்ல. அது கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மக்கள் மீது பாசிசத்தை ஏவிக் கொண்டிருக்கும் கட்சி.
விவசாயிகளின் உரிமைக்காக பாசிச பாஜகவை எதிர்த்து, கார்ப்பரேட்டுகளை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.
— குமரன்
தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை எல்லாம் நிறைவேற்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட கட்சிகளா அவர்கள்.
பஞ்சாப் அரியானா விவசாயிகள் உணர்ந்ததைப் போல நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் உணர்ந்து, போராடும் போது தான் மாற்றங்கள் வரும்.