மதுரை செக்கானூரணியில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்ட ஒருவர் அடித்து கொல்லப்பட்டு விட்டார்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன். டிசம்பர் 2-ம் தேதி வாலாந்தூர் கண்மாய் கரை அருகே அவர் ஓட்டிவந்த லாரி தீ விபத்தில் சிக்கியது. அது தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் அல்லது புகார் தருவதற்காக ஓட்டுனரே காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் .

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், நவம்பர் 14, 2026 அன்று காலை கழிவறையில் தூக்கிட்டு இறந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

லாக்கப் மரணங்கள் தமிழக காவல்துறைக்கு புதிது அல்ல. தொடர்ந்து கொட்டடிக் கொலைகள் நடப்பதும் அது மக்கள் மத்தியில் தீவிரமான எதிர்ப்பை கிளப்பி விடுவதும், போராட்டங்கள் வெடிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.

ஏன் இத்தகைய கொட்டடி கொலைகள் இதுவரை தடுக்கப்படவில்லை? ஏனென்றால், அரசாங்கமானது, அரசு இயந்திரமானது, அதிகார வர்க்கமானது, நீதித்துறையானது, இத்தகைய காவல்துறையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விரும்பவில்லை. மாறாக காவல்துறைக்கு மேலும் அதிக வலிமையை தரும் வகையிலேயே கொட்டடி கொலை தொடர்பான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடித்து நீர்த்துப் போக வைக்கின்றனர். இதன் மூலம் பெரிய தண்டனை இல்லாமல் காக்கி கிரிமினல்களை தப்ப வைத்து வந்துள்ளன.

ஏலக்காய் லோடுடன் லாரி எரிந்ததாக தெரிகிறது. போலீசுக்கு டிரைவர் பாலகிருஷ்ணன் மேல் சந்தேகம் வந்திருக்கிறது. அவர்கள் FlR போட்டு விசாரிக்கலாமே தவிர அடித்து நொறுக்கக் கூடாது.

மொத்த அரசு எந்திரமும் தனக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறது என்பதை காக்கிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதன் விளைவாகத்தான் தற்பொழுது செக்கானூரணியில் காக்கிகள் துணிச்சலாக விசாரணைக்கு அழைக்கப்பட்டவரை அடித்து தொங்கவிட்டுள்ளனர்.

எனவே கொட்டடி கொலைகளை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறையில் மட்டும் களை எடுத்துக் கொண்டிருந்தால் போதாது என்பதைத்தான் லாக்கப் படுகொலைகளின் விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வசமாக சிக்கிய காக்கிகள்!

இந்தப் பிரச்சனையில் உடனடியாக குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுத்தாக வேண்டிய நெருக்கடிக்குள் காவல்துறை சிக்கிக் கொண்டுள்ளது. ஏனென்றால் கொல்லப்பட்ட லாரி ஓட்டுனரின் குடும்பத்தினர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் களத்திற்கு வந்து சகோதரனின் படுகொலைக்கு காவல்துறையை கேள்வி கேட்டு உலுக்குவது செய்திகளில், சமூக ஊடகங்களில் பரவி, காவல்துறையின் திமிரை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.

படிக்க: சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா?

‘”தரையிலிருந்து கூரையின் உயரம் ஆறடி இருக்கும் பொழுது, அந்த கழிவறைக்குள் அஞ்சரை அடி உயரம் உள்ள ஒருவர் எப்படி தூக்கில் தொங்க முடியும்?” என்று எதார்த்தமாக கேள்வி எழுப்புகின்றனர் கொலை செய்யப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தினர்.

காவல்துறையானது, தான் சந்தேகிக்கும் அனைவரையும் இப்படி அடித்து விசாரிப்பதில்லை. ஏப்ப சாப்பைகள் என மதிப்பிடுபவர்களிடம்தான் கையை வைக்கிறது. அதிலும் குறிப்பாக எதிர்தரப்பு ‘கவனித்தால்’ மட்டுமே உற்சாகத்துடன் வினையாற்றுகிறது. கொல்லப்பட்ட ஓட்டுனரின் மனைவி மற்றும் சகோதரர்கள் உறுதியாக நிற்பதால் இப்பிரச்சனையில் நிச்சயமாக தம்மில் சிலரை பலி கொடுத்தாக வேண்டிய நெருக்கடி காவல்துறைக்கு வந்தே தீரும்.

தற்போது செக்கானூரணி கொலையில் பின்னணியில் யார் காவல்துறையை தூண்டினார்கள் என்பதோ, காவல் துறையே தனது சொந்த விருப்பத்தில் டிரைவரை அடித்து நொறுக்கி இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதுவோ இனிமேல் தான் விசாரணையில் தெரியவரும். அதற்கு காவல்துறைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தங்கள் தரப்பட வேண்டும். நீதி கேட்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கவும் வேண்டும்.

நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது!

சாட்சிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு காக்கிகள் செயல்படுவதாகவும், அவர் தூக்கில் தொங்கியதாக சொல்லப்பட்ட சட்டையை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டி உள்ளனர். இறந்தவரின் கையில் அடிக்கப்பட்ட காயங்கள் இருந்ததையும் போஸ்ட்மார்ட்டம் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும் நீதிபதி கண்காணிக்க வேண்டும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு உடன் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கை காவல்துறையே விசாரித்தால் நீதி கிடைக்காது; அது சிபிஐ வசம் தரப்பட வேண்டும் என்ற குடும்பத்தினரின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

படிக்க: லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!

இப்போது காவல்துறையின் மீதுதான் களங்கம் விழுந்துள்ளது. இந்த கொட்டடிக் கொலையில் நீதித்துறை தனது பங்குக்கு காவல்துறையோடு கரம் கோர்க்காமல், உண்மையை வெளியே கொண்டு வந்து, காக்கி கிரிமினர்களை தண்டித்து, கொட்டடிக் கொலைகளை தடுப்பதில் ஒரு முன் உதாரணத்தை படைக்க வேண்டும். தவறினால், காவல்துறையோடு நீதித்துறையின் இலட்சணமும் மக்கள் மத்தியில் அம்பலமாகும். துடைத்தெறியப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக மாறி சாமானிய உழைக்கும் மக்களிடம் மேலும் மதிப்பிழக்கும்.

TVK அரசை நம்பலாமா?

முதல்வர் விஜய்க்கு தனது கரூர் படுகொலைகளை மடைமாற்றி திமுகவின் சதி என புளுகி ஏமாற்றி வருகிறார். இதில் தற்போது காவல்துறை தனக்கு உதவ வேண்டும் என்பதால் அத்துறையின் அத்துமீறல்களை முதல்வர் கண்டுகொள்ள மாட்டார். மேலும் உழைக்கும் மக்களின் மீது உண்மையில் பரிவுடன் இருப்பதற்கும், திரையில் வேசம் போட்டு நடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அவரை பொறுத்தவரை தன்னை வாழவைத்த தெய்வங்களான கருப்பு பண முதலைகளை, சினிமா தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை மேலும் மகிழ்விக்கவே செயல்படுவார். திரைத்துறையை ஆட்டிப்படைக்கும் கருப்பு பண கார்ப்பரேட் கயவர்களுக்கும், தொழில் மற்றும் சேவை துறையில் கோலோச்சும் கார்ப்பரேட்டுகளுக்கும் IAS, IPS உள்ளிட்ட அதிகார வர்க்க அடியாட்களின் சேவை தேவை. மக்களை அடக்கி ஒடுக்கி கோடிகளை குவிப்பதற்கு அதிகார வர்க்கத்தின் தயவு தேவை. அதிலும் குறிப்பாக காவல்துறையின் உதவி தேவை. அந்த வகையில், தனது வேலைக்காரனை காப்பாற்ற எஜமான் வருவான்; எஜமானின் ஏவலர்களாக அதிகார வர்க்கத்தின் பிற துறைகளில் உள்ளவர்களும் வருவார்கள். மைய ஊடகங்களும் உழைக்கும் மக்களுக்காக உண்மையை எழுதாது. இந்தச் சூழலில் ஒரு சாமானிய ஓட்டுநரின் சாவுக்கு நீதி கிடைப்பது நாட்டு மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தான் அடங்கியுள்ளது. உயிரை பறிக்கக் கூடிய நாய் இனங்களுக்கு வாயில் கவசம் அணிவித்து தான் தெருவில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. நாமும் காவல்துறையின் கோரைப் பற்களுக்கு கவசத்தை மாட்டுவோம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here