தமிழ்நாடு பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரனை நியமித்து 10.11.2026 அன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நியமனம் பல்வேறு கேள்விகளையும் கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

ஒரு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் வெறுமனே ஓய்வுபெற்ற நீதிபதியாக இருந்தால் மட்டும் போதாது. அந்த ஆணையம் பாதுகாக்க வேண்டிய மக்களின் வரலாறு, வாழ்வுரிமை, சமூகப் பின்னணி, அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றில் ஆழமான புரிதலும் உணர்வும் கொண்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைக்கும் உரிமை மறுப்புக்கும் ஆளாகி வரும் பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காவிப் பாசிச அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சாதாரணமானதல்ல.

ஆனால், முரளிதரனின் கடந்தகால நீதித்துறை நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இத்தகைய பொறுப்புக்கு அவருடைய நியமனம் பொருத்தமானது இல்லை என்பதே எமது கருத்து.

மணிப்பூர் விவகாரம்: மறக்க முடியாத நீதிமன்ற உத்தரவு!

2023 மார்ச் 27 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன், மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு சாதாரணமான நீதிமன்ற உத்தரவு அல்ல. மணிப்பூரின் சமூக, அரசியல் மற்றும் இனக்குழு உறவுகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

மணிப்பூரின் மெய்தேய் சமூகம் பெரும்பான்மையாக இம்பால் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழ்கிறது. குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின சமூகங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றன. நில உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்கெனவே பதற்றம் நிலவிய சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மெய்தேய் – குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடுமையான வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து அகதிகளாகினர். பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.

அதாவது பழங்குடி மக்களுக்கு எதிரான உத்தரவின் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கும், பழங்குடியின பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது நீதிபதி எம்.வி.முரளிதரனின் உத்தரவு. இதனை தெரிந்தே செய்தவர் தான் எம்.வி.முரளிதரன்.

உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்த உத்தரவு!

முரளிதரன் பிறப்பித்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குச் சென்றபோது, மணிப்பூரே பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதனை மிகக் கடுமையாக விமர்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 341 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின்படி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சமூகங்களைச் சேர்ப்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்துக்குரிய அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டது. இத்தகைய விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுடன் பரிந்துரைக்குமாறு உத்தரவிடுவது சட்டரீதியாகக் கடுமையான கேள்விகளை எழுப்பியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், அந்த உத்தரவு உண்மைகளின் அடிப்படையில் தவறானது என்றும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. நாட்டின் உச்ச நீதிமன்றமே ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் சட்டரீதியான அடிப்படையைச் சுட்டிக்காட்டிய விவகாரம்.

படிக்க: 2023 மணிப்பூர் கலவரம்: 2024ல் நாம் செய்ய வேண்டியதை உணர்த்துகிறது!

பழங்குடியின மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய ஆணையத்தின் தலைவராக, பழங்குடியினர் பட்டியலில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட உத்தரவைப் பிறப்பித்தவரை நியமிப்பது எவ்வாறு பொருத்தமானதாக இருக்க முடியும்?

கொலீஜியத்தின் இடமாற்றப் பரிந்துரை எழுப்பும் கேள்விகள்!

2023 அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் முரளிதரனை மணிப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரைத்தது. அவர் தன்னை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது மணிப்பூர் உயர் நீதிமன்றத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் கொலீஜியம் அந்தக் கோரிக்கையை ஏற்காமல் இடமாற்றப் பரிந்துரையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த இடமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணமாக ‘நீதித்துறை நிர்வாகத்தை மேம்படுத்துதல்’ (Better Administration of Justice) என்று கொலீஜியம் குறிப்பிட்டது. இந்த இடமாற்றம் முரளிதரனின் செயல்பாட்டுக்கு எதிரான முடிவுதான் என்றாலும் உச்சநீதிமன்றம் அவ்வாறு வெளிப்படுத்தினால் நீதித்துறையின் செயல்பாடு கேள்விக்குள்ளாகும் என்றே அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு அரசின் நியமனம் ஏன் கேள்விக்குரியது?

தமிழ்நாட்டை ஆளக்கூடிய தவெக அரசு சமூகநீதி, சமத்துவம், இடஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் ஆகியவற்றை பேசும் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் அதன் நோக்கமும் செயல்பாடுகளும் காவிகளின் கூட்டாளி என்பதையே வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைச் செயலாளர் பதவிக்கு எந்த ஒரு கட்சியும் தன் கொள்கைக்கு உடன்பட்டு செல்லக்கூடிய அதிகாரிகளையே நியமிக்கும். தவெக அரசோ பாஜகவின் கையாளாக செயல்படும் தேர்தல் ஆணையம் நியமித்த சாய்குமாரையே தலைமைச் செயலாளராக வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட்களைக் கணக்கெடுக்கும் உத்தரவு, போராடும் மாணவர் அமைப்புகளைக் கண்காணிக்கும் உத்தரவு ஆகியவை ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

படிக்க: மணிப்பூரில் தொடரும் கலவரம் !  எம் எல் ஏ க்களின் வீடுகள் எரிப்பு !

இதேபோல், காவல்துறைத் தலைவர் (DGP) பொறுப்புக்கும் ஒன்றிய மோடி அரசு கொடுத்த பட்டியலில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அமர்த்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போதைய பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணையத்தின் தலைவரைத் தேர்வு செய்யும்போது அதனை ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலிடம் விட்டுவிட்டது போலும்.

மணிப்பூர் விவகாரத்தில் எழுந்த சட்டரீதியான விமர்சனங்கள், பழங்குடியின மக்களின் நில உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நியமனத்தை மக்கள் எதிர்ப்பார்கள் என்ற குறைந்த அரசியல் அறிவைக் கூட பெற்றிருக்காத தவெக அரசு, காவிகளின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்துள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த நியமனத்திற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் உட்பட பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. முரளிதரன் நியமனத்தை திரும்பப் பெறக் கோரி கோரிக்கை விடுத்துள்ளன.

இது ஒரு தனிநபர் நியமனம் குறித்த கேள்வி மட்டுமல்ல; சமூகநீதி குறித்த கேள்வி!

பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையம் என்பது அலங்காரப் பதவிகளை வழங்குவதற்கான அமைப்பு அல்ல. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, நில அபகரிப்பு, வன உரிமை மறுப்பு, காவல்துறை அத்துமீறல், இடஒதுக்கீட்டு உரிமை மறுப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கச் செய்ய வேண்டிய அமைப்பு. அந்த அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்பவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது எந்தவிதமான சமரசமும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

படிக்க: அடிப்படை வசதிகள் ஏதுமற்ற பழங்குடி மக்கள் வாழ்க்கையும், அவர்களின் மீதான தாக்குதலும்!

முரளிதரன் நியமனத்தை எதிர்ப்பது அவருடைய ஓய்வுபெற்ற நீதிபதி என்ற தகுதியை மறுப்பதற்காக அல்ல. அவர் கடந்த காலத்தில் பிறப்பித்த முக்கியமான நீதித்துறை உத்தரவுகள் அவரின் வர்க்கசார்பு என்ன என்பது நடைமுறையில் அம்பலமாகியுள்ளது.

நீதித்துறைப் பதவியில் இருந்த ஒருவருக்கு மற்றொரு அரசுப் பொறுப்பை வழங்குவதற்கு முன்பாக, அந்தப் பொறுப்பின் நோக்கம், அவர் கடந்த காலத்தில் எடுத்த நிலைப்பாடுகள், அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலன்கள் ஆகியவற்றை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம். ஆனால் தவெக அரசு இந்தளவுக்கு ஆழமாக யோசித்து முடிவை எடுக்காமல் சிலரின் ஆணைக்கிணங்க இந்த முடிவை அறிவித்துள்ளது.

தவெக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீண்டகால அக்கறையும், அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதிக் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கையும் கொண்ட ஒருவரை இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும்.

பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காப்பதற்கான ஆணையத்தின் தலைவரைத் தேர்வு செய்வதில் அவர்களுடைய நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் முதன்மையாக இருக்க வேண்டும். அதிகாரத்தின் வசதிக்காகவோ, பதவி நிரப்புவதற்காகவோ இத்தகைய நியமனங்கள் நடைபெறக் கூடாது. ஏற்கனவே தலித் மக்களின் பாதுகாவலர்களாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் இன்று அதிகாரத்தில் அமர்ந்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு சுகபோக வாழ்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களே அப்படியிருக்கையில் பழங்குடி மக்களின் நலனுக்கு எதிராக தீர்ப்பெழுதி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைக்கு காரணமான முரளிதரனை தமிழ்நாடு பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்தின் தலைவராக நியமிப்பது அம்மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here