2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக தெய்வக் குழந்தையான மோடி பேசிக் கொண்டிருக்கும் வசனங்கள் அனைவரும் அறிந்ததே. உலக அரங்கில் இந்தியாவின் புகழை விஸ்வகுரு மோடி உயர்த்தி இருக்கிறார் என்ற சங்கிகளின் பிரச்சாரமும் அனைவரும் அறிந்தது ஒன்றுதான்.
சங்கிகளின் இந்த சதிராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தான், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று, 104 இந்தியர்கள் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு அமெரிக்காவிலிருந்து விலங்குகளை போல் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது குறித்து எதிர்க்கட்சிகள் கொதித்து எழுந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘2012 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா தனது நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை இப்படித்தான்’ கை விலங்கிட்டு நாடு கடத்தி வருகிறது என்று திருவாய் மலர்ந்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போதே, தான் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற போவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ட்ரம்ப்.
தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்காவில் ஆவணங்களின்றி வசிக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் “சட்டவிரோதமாக புலம்பெயர்வதை இந்தியா எப்போதும் ஆதரிக்காது. இத்தகைய குடியேற்றம் பலவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு சட்டபூர்வமாக அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
படிக்க:
🔰 அமெரிக்காவிலிருந்து அவமானப்படுத்தி வெளியேற்றப்படும் இந்திய உழைப்பாளிகள்! ரத்தம் கொதிக்கிறது!
இவர் கூறியபடி செய்திருக்க வேண்டும். அமெரிக்கா திருப்பி அனுப்ப இருந்த 104 பேரையும் இந்திய அரசு தனது விமானத்தை அனுப்பி அழைத்து வந்திருக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் மானம் உலக அளவில் நாறுவது தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஜெய்சங்கர், பாசிச பிஜேபி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பாசிஸ்டுகளின் வெளி உறவுக்கு கொள்கை என்பது அம்பானி, அதானிகளின் சொத்துக்களை உயர்த்துவதற்கானது மட்டும்தான் என்பது போலவே உள்ளது. எனவே தான் 104 இந்தியர்கள் கை கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்படப் போவது தெரிந்தும் பாசிச பிஜேபியினர் அதைப்பற்றி சிறிதும் மனச்சஞ்சலமின்றி இருந்துள்ளனர். இத்தனைக்கும் இப்படி அழைத்துவரப்பட்டவர்களில் 66 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் விலங்குகளை போல கை, கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுவது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று நம்பிய இந்த பாசிஸ்டுகள் இதைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்தியர்கள் கை கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது பாசிஸ்டுகளின் தலையில் இடியை இறக்கியது போல் ஆகிவிட்டது.
இப்பொழுது, எதுவும் மானக்கேடாக நடவாதது போலவும் இந்த விசயத்தில் அமெரிக்க அரசு வழக்கம்போல தான் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறி தங்களது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு சங்கிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவாதத்தின் போது, தெய்வக் குழந்தையான மோடி, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவிற்கு தன்னையும் அழைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் லாபி செய்தும் அவ்வாறு அழைக்கப்படாதது குறித்து தகவல்கள் வெளி வந்து நாறிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்கு ஆதரவாக அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே மறைமுக பிரச்சாரத்திற்காக மோடியின் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் விஸ்வகுரு மோடியும் நண்பர்கள் என்று சங்கிகள் வாய் அளந்து கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க பாசிஸ்டான ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பாசிச மோடி, அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவிற்கு தன்னை அழைப்பதற்காக அமெரிக்காவில் லாபி செய்த மோடி, 104 இந்தியர்கள் விலங்குகள் போல் நடத்தப்படுவதை தடுக்க, உலக அரங்கில் இந்தியாவின் மானம் நாறிப்போகாமல் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரிய படத்தக்க ஒன்று அல்ல. மோடியே மக்கள் நலனில் அக்கறையற்ற ஒரு பாசிஸ்ட் என்பதுதான் இதற்கு காரணம்.
— குமரன்