மக்கள் கல்விக் கூட்டியக்கம்

 அறிக்கை


முறைகேடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்ட பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை!

சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம் தரமான மற்றும் அறமான கல்வியை அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக  தமிழக அரசால் 1997 இல் உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இப்பல்கலைக் கழகம் பல முறைகேடு புகார்களுக்கு உள்ளாகி வருகின்றது.

உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் போலி சான்றிதழ்    முறைகேடுகள், நூலகர், உடற்கல்வி இயக்குனர் பதவி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின் பற்றாதது, தட்டிக் கேட்டவர்களை பணி இடை மற்றும் பணியிலிருந்தே நீக்கம் செய்தல்  போன்ற நிர்வாகத்தின் பழி வாங்கும் செயல்கள் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் சு.பழனிச்சாமி, இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி யுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்ரமணி, பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக  எழுதிய ’பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம், கடந்த ஆண்டு வெளியானது. தொடர்ந்து ஏற்கெனவே இவர் எழுதிய ’மெக்காலே’ `பழைமைவாத கல்வியின் பகைவன்’ என்ற நூலின் மறு பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.  நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு  குறிப்பானை வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாசாரத் தன்மையுடைய விவகாரங்களுக்கு எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால் பெரியார் குறித்து  பெரியார் பலகலைக் கழகப் பேராசிரியர் புத்தகம் எழுதுவதை கண்டித்து பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது.

இந்த நிலையில்  சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர், கணிணித் துறைத் தலைவர் என மூவருடன் இணைந்து, பல்கலைக் கழக ஆட்சிக்குழு அனுமதியின்றி, தமிழக அரசின் அனுமதியின்றி “பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை” (PUTER FOUNDATION)” என்ற நிறுவனத்தை கம்பெனி சட்டப் பிரிவில் பதிவு செய்து தொடங்கியுள்ளார்.  இதன் பங்குகளை நால்வரும் ஆளுக்கு பத்தாயிரம் பங்குகள் என பிரித்துக் கொண்டுள்ளனர். இந்தத் தொழில் நிறுவனம் எட்டு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பலகலையின் எல்லா கட்டமைப்பு வசதிகளையும் பயன் படுத்திக் கொள்ளும் இந்நிறுவனம் என்ன சொன்னாலும் சட்டப்படி ஒரு தனியர் கம்பெனியே ஆகும். இந்த விதி மீறலை சுட்டிக்காட்டி பெரியார் பலகலைக் கழகத் தொழிலாளர் சங்க கெளரவத் தலைவர் பேரா. இளங்கோவன் அரசுக்கு மனு அனுப்பியுள்ளதற்கு எதிராக துணைவேந்தர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பேரா.இளங்கோவன் இது பற்றி துணைவேந்தரிடம் நேரில் கேட்டபோது தரக்குறைவாக துணைவேந்தர் ஏசியதுடன் இளங்கோவனின் சாதியைச் சொல்லி திட்டியதாகவும் தெரிகின்றது. மிகப் பெரிய சட்ட மீறலை செய்துள்ள துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் வேண்டும் வேளையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை துணை வேந்தருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளதும் கண்டிக்கத் தக்கது.

  • தமிழக அரசு பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்துகின்றது.
  • பல்கலைக் கழகத்தின் பெயரால் அதன் வளாகங்களில் தனியார் கம்பெனிகள் தொடங்கப்படுவதை தடுக்கும் தனி சட்டம் இயற்றவும் வேண்டுகின்றது.
  • சாதியின் பெயரால் நீதிக்காக குரல் எழுப்புபவர்களை கேவலப்படுத்தும் துணை வேந்தரை உடனே கைது செய்யவும் மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்துகின்றது.
  • சேலம் வாழ் மக்கள் பல்கலை ஊழல்களுக்கு எதிராக இணைந்து குரல் எழுப்பவும் வேண்டுகின்றது

***************************************************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here