மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு உள்ளூர் பிரச்சனைகள் துவங்கி சர்வதேசப் பிரச்சனைகள் வரை விவாதிக்கப்பட்டு மக்களை புதிய அரசியல் கண்ணோட்டத்தில் பயிற்றுவிக்க உதவியது.
2025 ஏப்ரல் மாதம் நான்காம் தேதி பிற்பகலில் இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் இன் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. ஏப்ரல் 6 முற்பகல் வரை பிரதிநிதிகள் மாநாடு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் அகில இந்திய அளவிலான அரசியல் பிரச்சனைகள் குறித்த விவாதங்களும், அவற்றின் அடிப்படையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன .மாநாட்டின் நிறைவு நாளில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே சமயத்தில் தற்போது நடந்த முருகன் மாநாடு மக்களின் பிரச்சினைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு அனைத்திற்கும் மத சாயத்தை பூசுகின்ற வகையிலும், இஸ்லாமியர்களை மிரட்டுகின்ற வகையிலும், முருகனை உயர்த்தி பிடிக்கின்றோம் என்ற போர்வையில் இந்து முன்னணி பல்வேறு சவடால்களை அடிக்கவும் உதவியது.
இந்தியாவில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் வர்க்கத்தால் கூலி விவசாயிகளாகவும், நிலமற்ற ஏழைகளாகவும் உள்ள மக்களை அவர்களது வாழ்க்கை நிலைமையிலிருந்து ஒரு படி முன்னேற்றுவதற்கான வழியை தேடுவது கம்யூனிஸ்டுகளின் நோக்கமாக உள்ளது.
பொதுவாக கம்யூனிஸ்டுகளின் நோக்கம் இவ்வாறு இருந்தாலும் அதன் வழிமுறைகளில் வேறுபட்டு அவர்களுக்குள் சித்தாந்த ரீதியாக விமர்சித்துக் கொள்வதும், அதனை முன்னிறுத்தி சித்தாந்த போராட்டம் நடத்துவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுள்ளது.
ஆனால் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதையோ அல்லது மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதையோ ஒருபோதும் முன் வைப்பதில்லை.
படிக்க:
🔰 சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!
ஆனால் அதற்கு நேர் மாறாக முருகன் பெயரில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நடத்திய முருகன் மாநாடு மக்களை பிளவுப்படுத்தி 2026 தேர்தலில் தனது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வெறித்தனமாக திட்டமிட்டுள்ளதை பட்டவர்த்தனமாக காட்டியுள்ளது.
வட மாநிலங்களுக்கு ராமர் அரசியல். ராமர் அரசியல் செல்லுப்படியாகாத இடங்களுக்கு அந்தந்த நிலம்சார்ந்த கடவுள்களை கையில் எடுத்தல். இதுதான் பா.ஜ.கவின் பாணி. அந்த பாணி வெகு சமீபத்தில் வெற்றியை கொடுத்த இடம் ஒடிசா. நவீன் பட்நாயக்கை வீழ்த்த ‘ஜெய் ஜெகநாதர்’ கோஷம் போட்டது பா.ஜ.க. ‘பூரி ஜெகநாதர் கோவிலின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.’ என பட்நாயக்கின் நம்பிக்கையாக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை அட்டாக் செய்தே வென்றது பா.ஜ.க. இதோ இப்போது தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுத்து ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…’ கோஷத்தை போட தொடங்கியிருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் இன் தென் பாரத அமைப்பைச் சேர்ந்த வன்னி ராஜன் என்பவர் பேசுகையில், ‘இது ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு. இந்த ஆண்டில் இதே போல 6-7 பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறோம்.’ எனக் கூறியிருந்தார். தமிழகத்தில் தேர்தலுக்குமே இன்னும் 8-9 மாதங்கள்தான் இருக்கிறது. ஆக, தேர்தலை மையப்படுத்தி அவர்கள் கையிலெடுத்திருக்கும் முருகரை வைத்து பா.ஜ.கவுக்கு பெரிய திட்டமே இருப்பதை அறிய முடிகிறது.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மாநாடு கீழடியில் கிடைத்த தமிழர்களின் முன்னேறிய நாகரிகத்தின் தொன்மங்கள் முதல் கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்பட்ட கொடூரமான ஒடுக்குமுறைகள் வரை அனைத்தையும் எடுத்துச் சொல்லி மக்களை வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் சிந்திப்பது எப்படி என்பதையும் அந்த கண்ணோட்டத்தில் புதிய வகையிலான சமுதாயத்தை உருவாக்குகின்ற நோக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது.
இந்த சமூக மாற்றத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கின்ற வழிமுறைகள் மீது புதிய ஜனநாயகத்திற்கு விமர்சனங்கள் உள்ள போதிலும் ஏற்கனவே முன்பு கூறியது போல மக்களை பிளவுபடுத்தவோ அல்லது இனரீதியாகவோ மத ரீதியாகவோ பிளவு படுத்தி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்வதை இந்த மாநாடு முன்வைக்கவில்லை என்று மதிப்பீடு செய்கிறோம்.
ஆனால் முருகன் பெயரில் நடத்தப்பட்ட மாநாடு தனது சுயலாபத்திற்காகவும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கடவுளர்களின் பெயரைச் சொல்லி மக்கள் மத்தியில் உள்ள பிற்போக்குத்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும், சாதிய உணர்வுகளையும் உசுப்பி விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதும், அதன் மூலம் பிளவுபடாத இந்திய சந்தையை கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைப்பது என்பதையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது என்று அதன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றோம்.
மார்க்சிஸ்டுகளின் மாநாட்டில் திரண்ட செம்படை மக்களுக்கு உணர்வு ஊட்டிய நிகழ்வு எங்கே? ஆனால் இந்து முன்னணி கும்பல் நடத்திய முருகர் மாநாட்டில் 80 ஆயிரம் சேர்கள் போடப்பட்டு அவை ஓரளவு நிரம்பி வழிந்ததும், அதில் பங்கு கொண்டவர்கள் ஒரு பிரிவினர் ஆறுபடை வீட்டையும் வேடிக்கை பார்த்துவிட்டு கலைந்து சென்றனர் என்பதும், மற்றொரு பிரிவினர் ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவார அமைப்பினர்கள் அணி திரட்டி வந்த கூட்டம் என்பதும், மூன்றாவது பிரிவினர் பாசிச பாஜகவிற்கு காவடி தூக்குகின்ற அடிமை எடப்பாடி கும்பல் பணத்தைக் கொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து திரட்டி வந்த அதிமுக கட்சியினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
மதுரையில் நடத்தப்பட்டுள்ள இந்த முருகர் மாநாடானது 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு உதவுகின்றதோ இல்லையோ அதிமுகவில் உள்ளவர்களை கணிசமாக பாஜகவின் பக்கம் இழுப்பதற்கு உதவும் என்பதையே இந்த மாநாடு வெளிப்படுத்தியுள்ளது.
மாநாட்டில் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சித்து இந்து முன்னணி குண்டர்கள் ஒளிபரப்பிய செய்திகளை அங்கேயே எதிர்த்துப் போரிடாமல் வெளியில் வந்து கோழைத்தனமாக, இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பேசிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் சுயமரியாதையும், பகுத்தறிவும் உள்ள மனிதர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல. ஆனால் அண்ணா திமுக பதவி வெறியுடன் அவ்வாறு நடந்து கொண்டுள்ளது.
ஒரு ஒப்பீட்டிற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டையும் இந்து முன்னணி குண்டர்களின் மாநாட்டையும் ஒப்பிட்டு சில விஷயங்களை விளக்குகின்றோமே ஒழிய தன்னுடைய சுயநலத்திற்காகவும், கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காகவும், பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவும் நடத்தப்படும் முருகர் மாநாடுகளும் மக்களின் நலனிலிருந்து நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கட்சி போன்ற கம்யூனிஸ்டுகளின் மாநாடும் வெவ்வேறு தன்மை கொண்டது என்பதை மறுக்க முடியாது.
இறுதியாக மாநாட்டிற்கு வந்து வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்ட கூலிப்படையினரும், அரோகரா அரோகரா என்றும் கூச்சலிட்டவர்களும், தேர்தலுக்கு பாசிச பாஜகவிற்கு ஓட்டு போடுவார்களா என்பது தான் ‘முருகன்’ அறிந்த உண்மை! தன்னைப் பயன்படுத்தி ஓட்டுப் பொறுக்க துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு மொட்டை அடித்து பாடம் புகட்டுவாரா என்று பார்ப்போம்!
◾பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







