
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள பிராந்திய மேலாதிக்கப் போர், ஒரு தேசத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்து வருகிறது. இதுவரை 3,700-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பெய்ரூட் நகரின் பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன் கிழமை இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் 1000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளதாகவும் அல்சஜீரா செய்தி கூறுகிறது. இந்த தாக்குதலின் காரணமாக திறக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் போர்விதிமுறைகளை சிறிதும் மதிக்காத ஜியோனிச இராணுவம் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. இந்தத் தாக்குதல் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை உணவுப் பஞ்சமாகும்.
உணவுப் பஞ்சத்தின் கோரப்பிடியில் தற்போது லெபனான் நாடு சிக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, லெபனானின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதம் பேர் (சுமார் 8,74,000 மக்கள்) ஏற்கனவே கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் கடுமையான தாக்குதலின் காரணமாக இந்த எண்ணிக்கை 2026 ஜூலை மாதத்திற்குள் 18 சதவீதமாக (9,61,000 மக்கள்) அதிகரிக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தெற்கு லெபனானில் உள்ள சந்தைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது செயல்படவில்லை.
விவசாய அழிவும் பொருளாதாரச் சுரண்டலும்
இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனானின் முதுகெலும்பான விவசாயத் துறையை நேரடியாகக் குறிவைத்துள்ளன. 2023 அக்டோபர் முதல் 2025 ஏப்ரல் வரையிலான தாக்குதல்களால் விவசாயத் துறைக்கு 117.9 மில்லியன் டாலர் நேரடிச் சேதமும், 586 மில்லியன் டாலர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனானில் உள்ள விளைநிலங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் விதைகள் அழிக்கப்பட்டதால், எதிர்கால உற்பத்தி கேள்விக்குறியாகியுள்ளது. 2025 – ஆம் ஆண்டின் தானிய உற்பத்தி அதன் வழக்கமான சராசரியை விட 50 சதவீதம் குறைந்து, வெறும் 90,000 டன்களாகச் சுருங்கியுள்ளது. தெற்கு லெபனானில் போர் காரணமாக இங்குள்ள சந்தைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை செயல்படவில்லை. தெற்கில் உள்ள வர்த்தகர்களிடம் ஒரு வாரத்திற்கும் குறைவான உணவு இருப்பே உள்ளது. பெய்ரூட்டில் சந்தைகள் செயல்பட்டாலும், பொருட்களின் விலை அதிகரிப்பினால் மற்றும் குறைந்த வருமானம் காரணமாக ஏழை மக்கள் போதுமான உணவைப் பெற முடிவதில்லை.
படிக்க:
♦ லெபனான் ஹிஸ்புல்லா பேஜர் வெடிப்புகளும் உலக மக்கள் மீதான கண்காணிப்பு அதிகரிப்பும்
ஏழைக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் சுமார் 40 சதவீதத்தை உணவுக்காகவே செலவிடுகின்றனர். வருமானம் போதாத நிலையில், அவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வதோடு, சத்து குறைந்த மலிவான உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.
உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய லெபனான் மக்கள் பின்வரும் கடினமான முடிவுகளை எடுக்கின்றனர்:
- வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகளை விற்று உணவு வாங்குதல்.
- குழந்தைகளுக்கு உணவளிக்க பெரியவர்கள் தங்கள் உணவைத் தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது.
- மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகளைக் குறைத்தல்.
- மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் மற்றும் பிச்சை எடுத்தல் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
ஏற்கனவே 2019 முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனானின் நாணயம் (LBP), அமெரிக்க டாலருக்கு எதிராக 95 சதவீத மதிப்பை இழந்துவிட்டது. இப்போரின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. மார்ச் 2026 முதல் காய்கறிகளின் விலை 20 சதவீதமும், ரொட்டியின் விலை 17 சதவீதமும் அதிகரித்துள்ளது. வருமானம் இழந்த ஏழை மக்கள் மற்றும் அகதிகள் தங்கள் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மனிதாபிமான உதவி முடக்கம்
இக்கட்டான இந்தச் சூழலில், லெபனானுக்கு வழங்கப்பட்டு வரும் சர்வதேச உணவு உதவிகள் 2026 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கணிசமாகக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால்பெக்-எல்-ஹெர்மல் (Baalbek-El Hermel) மற்றும் அக்கார் (Akkar) போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையான நெருக்கடி (IPC Phase 3) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதாகக் கூறிக்கொண்டு, லெபனானின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும், ஏழை மக்களையும் பட்டினியால் சாகடிப்பது ஜியோனிச ஏகாதிபத்தியத்தின் ஒரு போர் உத்தியாகும். உணவு என்பது ஒரு அடிப்படை உரிமை, ஆனால் அது இன்று லெபனானில் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைப் பஞ்சத்திலிருந்து லெபனானைக் காக்க உடனடி சர்வதேசத் தலையீடும், போர் நிறுத்தமும் அவசியமாகும். போர் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவும் அதன் இளைய பங்காளியான இஸ்ரேலும் தண்டிக்கப்பட வேண்டும்.
- நலன்






