இஸ்ரேலுக்கு எதிராக போராடிவரும் லெபனானின் தீவிரவாத குழுவானா ஹிஸ்புல்லா அமைப்பு தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஹேக்கர்கள் மூலமாக திடீரென்று வெடிக்கச் செய்யப்பட்டது.
ஒரே சமயத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததன் காரணமாக தற்போது இதுபோன்ற தகவல் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவதில் மிகப்பெரும் அச்சமும், ஊடுருவல் மற்றும் திருடுதல் குறித்த விவாதமும் முன்னிலைக்கு வந்துள்ளது. தகவல் தொழிற்நுட்ப கார்ப்பரேட்டுகள் இது போன்று ஹேக் செய்யும் செயலை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று கருதினால் அதைவிட பாமரத்தனம் ஏதும் இல்லை.
படிக்க:
♦ வெடிகுண்டாகும் பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் !
♦ ராமராஜ்ஜியத்தில் பெகாசஸ் உளவு!
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் பல்வேறு நாடுகளில் இயங்குகின்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய கட்சிகளின் இணைப்புகள் ஆகியவற்றை உளவறிவதில் நிபுணத்துவமாக செயல்பட்டு வருகிறது என்பதுதான் இராணுவ ஒற்றாடல் குறித்த மிகவும் அச்சுறுத்தும் அபாயமாக மாறி உள்ளது.
இந்த இஸ்ரேலுடன் தான் பாசிச மோடி அரசு பல்வேறு இராணுவ ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே பெகாசஸ் உளவுக் கருவி மூலம் அனைவரையும் கண்காணித்து வருகிறார்கள் என்று விமர்சனம் இருக்கின்ற போதே அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாசிச மோடி இஸ்ரேலின் யூத-ஜியோனிச வெறி பிடித்த அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டுள்ளார் என்பது மட்டுமின்றி, உளவுக் கருவிகளை மனம் போன போக்கில் இறக்குமதி செய்து வருகின்றார் என்பதும் நாம் கவனிக்கத்தக்கதாகும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர்.
சில தின்ங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இணைய தளப் பக்கத்தில், ”அமெரிக்காவின் ரிப்பில் லேப்ஸின் எக்ஸ்ஆர்பி கிரிப்டோகரன்சியின் புரொமோஷன் பற்றிய விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் முடக்கி, அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு மேற்கொள்வது தொடர்பாக ரிப்பில் லேப்ஸ் நிறுவனம் யூடியூப் தரப்புக்கு புகார் அளித்துள்ளது.
பொதுவாக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பின் வரும் வகையில் ஹேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
1.போலி இணைப்புகள்
பெரும்பாலும், ஹேக்கர்கள் இதுபோன்ற போலியான லிங்குகளை ஃபோன்களுக்கு அனுப்பி, நம்மிடமிருந்து தகவல்களை திருடுவார்கள். இதனை ஃபிஷ்ஷிங் (Phishing) என அழைக்கிறார்கள்.
2. இ-மெயில் அபாயம்
இதுவும் ஃபிஷிங் போன்றதுதான். ஏதாவது ஒரு நபரிடமிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு செய்தி வரும். பார்ப்பதற்கு எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில், உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து வந்தது போல் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருப்பார்கள். அதனை திறந்து பார்க்கச் செய்து உங்கள் தகவல்களை திருடிக் கொள்வார்கள்.
3.இ-மெயில் இணைப்பு
முன்பே சொன்னது போல், நமக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலான லிங்குகளையோ அல்லது கோப்புகளையோ இந்த மின்னஞ்சலோடு சேர்த்து ஹேக்கர்கள் அனுப்பியிருப்பார்கள். அதனை திறந்து படிக்கும் போது உங்கள் தகவல்கள் திருடப்படும்.
4. வலைதள முகவரி (டொமைன்) மூலம் மெயில் அனுப்புதல்.
இணையதளத்தில் எந்தவொரு வலைதளத்திற்குச் செல்ல வேண்டுமென்றாலும், அதற்கென்று தனிப்பட்ட டொமைன் (முகவரி) இருக்கும். இதை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தி, இந்த டொமைன் மூலம் தீங்கிழைக்கும்.
5.பெரிய நிறுவனங்களின் பெயரில் வரும் போலியான செய்திகள்.
உதாரணத்திற்கு, மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என உங்களுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கும். பார்ப்பதற்கு அச்சுஅசல் உண்மை போலவே இருக்கும். அதில் ஒரு இணைப்பை கொடுத்து, உங்கள் விவரங்களை நிரப்ப சொல்வார்கள். நீங்கள் கண்ணை மூடித் திறப்பதற்க்குள் உங்கள் தகவல் திருடப்பட்டு விடும்.
6.பாஸ்வேர்டு போன்ற விவரங்களை திருடுதல்.
போலியான செய்திகள் மூலம் உங்களை ஆசைகாட்டி, உங்களை நம்ப வைத்து உங்கள் வங்கியின் ஆன்லைன் பாஸ்வேர்டு மற்றும் சமூக ஊடக கணக்கின் லாகின் விவரங்களை பெற முயல்வார்கள். இந்த வழிகளில் தான் உங்கள் மீது கண்காணிப்பு மற்றும் உங்கள் தகவல்கள் திருட்டு நடக்கிறது.
’உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது’ என்று பிரமிக்கத்தக்க வகையில் தகவல் தொழில்நுட்ப உலகம் வேகமாக முன்னேறியுள்ளது. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இயக்கப்படும் அதிநவீன கருவிகள் உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வேகமாக தகவல்களை கொண்டு சேர்க்கிறது என்பதெல்லாம் டிஜிட்டல் யுகத்தில் சாதனைகளாக பேசப்படுகிறது.
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இது போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை இடைமறித்து கார்ப்பரேட்டுகள் செய்திகளை சேகரித்துக் கொள்கிறார்கள் என்பதையும், அந்த செய்திகளை அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும், பிற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் விற்பனை செய்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொண்டு இந்த தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய பேஜர்களை பயன்படுத்தினார்.
ஆனால் பேஜர்களை பயன்படுத்துவார்கள் என்பதை தகவல் தொழில்நுட்ப ஹேக்கர்கள் மூலம் தெரிந்துக் கொண்ட இஸ்ரேலின் மொசாத் உளவுப் படை அது எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த கருவிகளை கட்டுப்படுத்துகின்ற கண்காணிக்கின்ற அதிகாரத்தை தானாகவே எடுத்துக் கொண்டது என்பதை தான் தற்போதைய பேஜர் வெடிப்புகள் நமக்கு நிரூபித்துள்ளன.
இதன் மூலம் நவீன தொழில்நுட்பம் என்று பீற்றிக் கொள்ளப்படும் வன்பொருட்கள், மென் பொருட்கள் அதன் விநியோக சங்கிலி முதல் அதனைப் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு கையடக்க அலைபேசிகள், சமூக ஊடகங்கள் வரை எதுவுமே பாதுகாப்பானது கிடையாது என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
’வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பதைப் போல whatsapp நிறுவனம் தனது செயலி என்கிரிப்டட் செய்யப்பட்டது என்று வாக்குறுதி கொடுப்பதை நம்பிக் கொண்டு அந்த நிறுவனம் ஏதோ மிகப் பெரும் உண்மை விளம்பி என்பதைப் போல கருதிக் கொண்டு தன்னைப் பற்றிய அனைத்து தரவுகளையும், whatsapp லேயே பரப்பிக் கொள்வது ஆபத்தானதாகும். அதைவிட முகநூல் பக்கங்களில் தன்னை பற்றி பல்வேறு விவரங்களை அதாவது தன் வீட்டில் குழந்தை பிறந்தது முதல் தனது நாய்க்குட்டி மரித்துப் போனது வரை அனைத்தையும் பொதுவெளியில் வெளியிடுவதன் மூலம் அற்ப பிரபலம் கிடைக்கின்றது என்று சிலர் கருதிக் கொள்வது அதைவிட மிக மிக ஆபத்தானது.
இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் உங்களின் தரவுகளை திரட்டி வைத்துக் கொண்டு அதனை பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வதற்கு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் என்று புகழப்படும் நிறுவனங்கள் வெறித்தனமாக அலைந்து கொண்டுள்ளது.
இதற்காகவே உங்கள் தரவுகளை சேமித்து வைக்கின்ற கிளவுட் மவுண்ட், டேட்டா மைனிங் என்று கூறப்படும் தொழில்நுட்பங்களின் மூலம் உங்களிடமிருந்து மிகவும் லாபகமாக தகவல்களை திருடுகிறார்கள் இந்த தகவல் தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள்.
அவ்வாறு உங்களிடமிருந்து திருடிய தகவல்களை பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளுக்கு, கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த தகவல்களை திரட்டுகின்ற வழிமுறைகள் தான் வெறுபடுகிறது. ஒன்று நீங்களாகவே அவர்களுக்கு கொடுப்பது, மற்றொன்று உங்களுக்கு தெரியாமல் உங்களை ஹேக் செய்து உங்கள் தகவல்களை திருடுவது.
இத்தகைய தகவல் திருட்டு என்ற தரவுகள் சேகரிப்பு இன்று மிகப்பெரும் உளவுக் கருவியாகவும் உங்களின் ஆசைகள், விருப்பங்கள், தேவைகள், எதிர்கால கனவுகள், லட்சியங்கள், கொள்கைகள் போன்ற அனைத்தையும் ஒன்று விடாமல் கட்டுப்படுத்துகின்ற மிகப்பெரும் அதிகார மையமாக மாறியுள்ளது என்பதுதான் ஹிஸ்புல்லா அமைப்பின் பேஜர் வெடிப்பு நமக்கு தெரிவித்துள்ள உண்மையாகும்.
இவை மட்டுமின்றி GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் எங்கே எப்படி இருக்கிறீர்கள் என்பது துவங்கி எங்கே பயணம் செய்கிறீர்கள், எந்த வழியில் செல்கிறீர்கள், என்ன செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் மேலாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கண்காணிப்பதற்கு நவீன உளவுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜனநாயகம், கருத்துரிமை போன்ற முதலாளித்துவ விழுமியங்களுக்கு கல்லறை கட்டப்பட்டு சில தசாப்தங்களாகின்றன. உலகம் முழுவதும் பாசிச பயங்கரவாத ஒடுக்கு முறைகளும், கண்காணிப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதுதான் உலகு தழுவிய யதார்த்த உண்மையாகும்.
இதை நாம் முன் வைக்கின்ற போது தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தெரியாத தற்குறிகளாக இருக்க வேண்டும் என்று பழைய கற்காலத்திற்கு மனித குலத்தை கொண்டு செல்வது நமது நோக்கம் அல்ல! அதே சமயத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகப்பெரும் புரட்சியை உருவாக்க போகின்றோம் என்று வாயடிப்பவர்களின் அதிமேதாவித்தனத்தை அப்படியே அங்கீகரிப்பதும் நமது நோக்கம் அல்ல!.
’இதெல்லாம் எங்களுக்குத் தெரியும், ஆனால் முகநூல் பக்கத்தில் எங்களது முகர கட்டைகளை போடுவது மிகவும் பயனுள்ளது தானே என்று வாயடிப்பவர்கள் அதற்கு பொருத்தமான எதிர்வினை நிகழும் போது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற வேண்டியிருக்கும் என்பதை ஒரு எச்சரிக்கையாக நாம் கூற வேண்டியுள்ளது.
முகம்மது அலி.