பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை பெற வேண்டுமெனில் ஆறு வீடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பெங்களூரில் நடத்தப்பட்ட ஆய்வில் வீட்டுமுதலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55%) தங்களுடைய வீட்டுப் பணியாளர்களுக்கு “தாராளமாக” ஊதியம் வழங்குவதாக நம்புவதாகவும் சென்னையில் 51% பேர் சேவைகளுக்கு “போதுமான” ஊதியம் வழங்குவதாக நம்புகிறார்கள் என்றும்  Indian institute of Human settlements  நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . பெங்களூரில் உள்ள கல்வி நிறுவனம், இந்திய மக்கள் குடியிருப்புகளின் சமமான, நிலையான மற்றும் திறமையான மாற்றத்தை ஆய்வு செய்கிறது.

தொழிலாளர்களின் ஊதியம் பணிகளின் எண்ணிக்கை – சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல் மற்றும் பராமரித்தல் – மற்றும் இந்த பணிகளில் செலவிடும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஊதியத்தை நிர்ணயிக்கும் போது திறமை, நற்பெயர் மற்றும் அனுபவம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில்  நம்பகத்தன்மை, கடின உழைப்பு மற்றும் நேரமின்மை ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். அதே நேரத்தில் இரு நகரங்களிலும் வீட்டுப் பணியாளர்களை நியமிக்கும் பெரும்பான்மையான குடும்பங்கள் சாதி, மதம், பிறப்பிடம் போன்றவற்றை “முக்கிய அம்சமாக கருதுவதில்லை” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள 9,636 குறைந்த, நடுத்தர மற்றும் அதிக வருமானம் உள்ள குடும்பங்களை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்ததில் பெங்களூரில் 54% பேர் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், அதே சமயம் சென்னையில் 32% பேர் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

பெங்களூரு மற்றும் சென்னையில் “சுயபராமரிப்பு மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக” என்பதே வேலையாட்களை பணியமர்த்துவதற்கு பிரதான காரணமாக இருப்பதாகவும் “வேலை செய்ய நேரம் கிடைக்கும் என்பதாலும்/ தன் வேலையை தக்க வைத்துக்கொள்ள” எனும் காரணம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Periodic labour force-ன் கணக்கெடுப்பில்  வீட்டு வேலைகள் – “முறைசாரா தொழில்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 40 இலட்சத்து 75 ஆயிரம்  வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10  மட்டுமே வீட்டுப் பணியாளர்களை குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்துள்ளன.

கூலி போதுமானது

வீட்டுப் பணியாளர்களுக்கு சென்னையில் ஒரு வீட்டில் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.2,000 முதல் ரூ.13,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,241 முதல் ரூ.14,711 வரை உள்ளது, அதாவது குறைந்தபட்ச ஊதியத்தை உருவாக்க பெங்களூருவில் உள்ள குறைந்த ஊதியம் பெறும் ஆறு வீடுகளில் ஒரு தொழிலாளி வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 8,005 முதல் ரூ. 9,418 வரை உள்ளது, அதாவது குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற ஒரு வீட்டுப் பணியாளர் குறைந்தது எட்டு வீடுகளில் வேலை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்: வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் கர்நாடகா கார்மெண்ட் தொழிலாளர்கள்!

வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மாநிலம் தழுவிய குறைந்தபட்ச ஊதியம் ஏற்புடையதல்ல என்று அறிக்கை கூறுகிறது. எனவே டெல்லி போன்ற நகர-மாநிலத்துடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமானது. பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள தொழிலாளர்கள் டெல்லியில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு இணையான ஊதியம் பெற 7-14 வீடுகளில் வேலை செய்ய வேண்டும்.

இந்த அறிக்கையானது முதலாளிகளின் பதில்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற ஒரு வீட்டுப் பணியாளர் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று அது கூறவில்லை.

சென்னையில் பதிலளித்தவர்களில் 51% பேர் தாங்கள் போதுமான ஊதியம் வழங்குவதாக நம்புவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் தாங்கள் “தாராள மனப்பான்மை உடையவர்கள்” என்று நம்பினர். ஊதிய உயர்வு கோருவதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை அடிப்படையில் குறைக்கிறது.

வீட்டு வேலையை “திறமையற்ற உழைப்பு” (Unskilled labour) என்று பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் கருதுவதால் ஊதியத்தை நிர்ணயிக்கும் போது ஒரு தொழிலாளியின் திறன் முக்கிய அம்சமாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. மாறாக, பணிநேரம், செய்யப்படும் பணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நிலவும் ஊதிய விகிதம் போன்றவையே கணக்கில் கொள்ளப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. “இருப்பினும், நபர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதால் குழந்தை அல்லது முதியோர் பராமரிப்பு போன்ற பராமரிப்பு பணிகளுக்காக பணியமர்த்தப்படும் தொழிலாளிக்கு திறன்கள் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுவதாக அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான அந்தரா ராய் சௌத்ரி விளக்கினார்.

ஊதியங்கள் குறித்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும். மாநில அரசுகளிடமிருந்து பதில் வரும்போது இந்த அறிக்கையை மேம்படுத்தி வெளியிடப்போவதாக இந்தியா ஸ்பெண்ட்  குறிப்பிட்டுள்ளது.

ஆய்வின்படி, இரு நகரங்களிலும்,  வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு என்பது வேலைகள் அல்லது பணிநேரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு பதிலாக மட்டுமே வழங்கப்படுவதாகவும், மேலும் ஏறக்குறைய அனைத்து முதலாளிகளும்  தொழிலாளர்களுடன்  எந்தவித விவாதமும் இல்லாமல் ஊதிய உயர்வு தொகையை தன்னிச்சையாகவே தீர்மானிக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு?

சென்னையில் 62% குடும்பங்களும், பெங்களூரில் 32% குடும்பங்களும் ஒரு வீட்டுப் பணிப்பெண் கர்ப்பமாகிவிட்டால், ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களை வேலையை விட்டு நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளனர். பெங்களூரில், 68% குடும்பங்களும் சென்னையில் 80% குடும்பங்களும் தங்களின் உதவியாக வாராந்திர விடுப்பு தருவதாக கூறியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள 41% குடும்பங்களும், சென்னையில் 37% குடும்பங்களும் தங்கள் தொழிலாளி ஒருவர் நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைக்கான செலவை தாங்களே முன்வந்து ஏற்பதாக கூறியுள்ளனர். நோய்கால விடுப்புகள் வழங்குவதில் சென்னையிலும், பெங்களூருவிலும்  ஆதரவும் – எதிர்ப்பும் விகிதத்தில் மாறுபடுகிறது.  நோய்கால விடுப்புகளுக்கு ஆதரவாக சென்னையில் 44 சதவீதமும் பெங்களூருவில் 59 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், நோய்கால விடுப்புகளுக்கு எதிராக சென்னையில் 55 சதவீதமும் பெங்களூருவில் 36 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற வீட்டுப் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் குறித்து இந்த ஆய்வில் கணக்கில் எடுக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டின் வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை வரைவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, துன்புறுத்தல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் தன் முன்மொழிவில் சேர்த்துள்ளது.

நவம்பர் 2021 இல் அறிவிக்கப்பட்ட வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை மற்றும் அகில இந்திய வீட்டுப் பணியாளர்களின் கணக்கெடுப்பு ஆகியவற்றின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு IndiaSpend கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் பதிலளிக்கும்போது இந்த அறிக்கை மேம்படுத்தப்படும்.

பெங்களூரு மற்றும் சென்னையில் வீட்டு வேலைக்கு தொழிலாளர்களை தேர்வு செய்யும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் வீட்டுப் பணியாளரை பணியமர்த்தும்போது சாதி, மதம் மற்றும் பிறப்பிடம் (ஆசிரியர்களின் மொழியின் ப்ராக்ஸி) ஆகியவற்றை முக்கிய அம்சமாக கருதுவதில்லை.  பெங்களூரில், 12-14% வீடுகளில் வீட்டு வேலை செய்பவரின் சாதி முக்கியமில்லை என்று கூறியுள்ளனர். அதே சமயம் சென்னையை விட பெங்களூருவில் உள்ள வீடுகள் தொழிலாளர்களை பணியமர்த்தும் போது தொழிலாளியின் மதம் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

“உங்கள் வீட்டையும் பொருட்களையும் தொழிலாளியுடன் பகிர்ந்து கொள்வதால் வீட்டு வேலை என்பது நெருக்கமான வேலையாகிறது. எனவே  இதில் சாதி முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது, மேலும் முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு அவர்களின் முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரைக் கேட்பதை நீங்கள் காண்பீர்கள்,” என்று பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின்  வேலைவாய்ப்பு மையத்தின் பொருளாதார நிபுணர் ரோசா ஆபிரகாம் கூறினார்.

சென்னையில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் (77%), பெங்களூரில் பதிலளித்தவர்களில் 39% மட்டுமே பெண்கள். இருப்பினும், நபர்களின் பதில்களில் உள்ள வேறுபாடுகள் பதிலளித்தவரின் பாலினத்தால் தீர்மானிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

“நாங்கள் ஒரு நகரத்தில் பதில்களைச் சரிபார்த்தோம், ஒரு நகரத்திற்குள், ஆண் மற்றும் பெண் பதிலளித்தவர்கள் ஒரே மாதிரியான பதில்களை வழங்குவதைக் கண்டறிந்தோம், இந்த வேறுபாடுகள் பதிலளித்தவர்களின் பாலினத்தால் தீர்மானிக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது” என்று சவுத்ரி கூறினார்.

இரு நகரங்களிலும் தொழிலாளரின் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாக மிக முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது, மேலும் திறமை மற்றும் விரைவாகக் கற்றுக்கொள்தல் ஆகிய அம்சங்களுக்கு சென்னையை விட பெங்களூரில் உள்ள குடும்பங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும்  அம்சங்களாக திறமையையோ, வேலையின் தரத்தையோ எந்த நகரமும் முக்கிய அம்சமாக கருதவில்லை என்பது புலப்படுகிறது.

நுஷைபா இக்பால், IndiaSpend.com

தமிழில்: தாமோதரன்

 

https://scroll.in/article/1039561/in-bengaluru-and-chennai-domestic-workers-have-to-work-in-six-households-to-make-minimum-wage

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here