நவம்பர் 26:  ஐக்கிய விவசாயிகள் முன்னணி முன் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான  பேரணி- ஆர்ப்பாட்டம் வெல்க!

விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஒரு இரும்புக்கோட்டையைப் போல பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகின்ற போதே அதனை தடுத்து நிறுத்த முடியும். 

லகை சூறையாடுகின்ற ஏகபோக நிதிமூலதனம் பல லட்சம் கோடி டாலர்களாக பெருக்கெடுத்து அனைத்து துறைகளையும் விழுங்கி வருகிறது. அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஜி 7 நாடுகளில் உள்ள வேளாண் கார்ப்பரேட்டுகள் உலகம் முழுவதுமுள்ள விவசாயத்தை விழுங்குவதற்கு வெறித்தனமாக அலைந்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்றுகின்ற வகையில் கார்ப்பரேட்டுகள் நிர்பந்திக்கின்றன. பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு பொருத்தமான சட்டத் திருத்தங்களை கொண்டு வந்திருந்தார். அதை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடி ஏறக்குறைய 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்து வேளாண் சட்டத் திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள தொழிற்சங்கங்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒராண்டுக்கும் மேலாக போராடியதன் விளைவாகவே இந்த சட்டத் திருத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட போது இத்தகைய கொடூரமான சட்ட்த்தை திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியபோதும், எவ்வித விவாதமுமின்றி அதன் நடைமுறை நான்கு நிமிடங்களில் முடிக்கப்பட்டது.

இந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி 2021, நவம்பர் 19-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்ற மக்களவை கூடியதும், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரிரு நிமிடங்களில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அப்போதைய மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்தார். இதே போன்று தான் மாநிலங்களவையிலும் ஒரு சில எதிர்ப்புகள், கூச்சல்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த மூன்றாண்டு காலங்களில் மூன்று வேளாண் சட்டத் திருத்தத்தை அதிகாரப்பூர்வமாகவும், முழுமையாகவும் திரும்பப் பெறுவதாக இன்னமும் பாசிச மோடி அரசாங்கம் அறிவிக்கவில்லை. பாசிச மோடி அரசு இன்னமும் அடிபணியவில்லை.

கார்ப்பரேட்டுகளின் நிதிமூலதனம் உலகு தழுவிய கொடூரமாகவும், அடக்கு முறையாகவும், மறுபுறத்தில் சுரண்டலாகவும், பாசிச பயங்கரவாதமாகவும் உருவெடுத்து காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாட்டு மக்களின் மீது நேரடியான தாக்குதலை கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதி தான் வேளாண்துறையில் முன் வைக்கப்பட்ட மூன்று சட்ட திருத்தங்கள்.

இதே காலகட்டத்தில் தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றுகின்ற வகையிலும் நிரந்தர வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்கின்ற தினக்கூலி தொழிலாளர்களாக, கௌரவமான பெயரில் FTE,NEEM என்ற சுரண்டல் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கின்ற 44 சட்டங்களை திருத்தி நான்கு சட்ட தொகுப்புகளாக அமல்படுத்துகின்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலே நிலவுகிறது. இத்தகைய சட்டத் திருத்தங்கள் காரணமாக சாதாரண உள்நாட்டு நிறுவனங்கள் துவங்கி தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை தொழிலாளர்கள் எந்தவிதமான உரிமைகளையும் சட்டபூர்வமாக கோரவே முடியாது என்ற கொடூரமான பாசிச சூழல் உருவாகியுள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஒரு இரும்புக்கோட்டையைப் போல பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகின்ற போதே அதனை தடுத்து நிறுத்த முடியும்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற இந்தப் போராட்டத்திற்கு இடையில் வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாசிச சக்திகள் தலையெடுக்க அனுமதிக்காத வண்ணம் எதிர்த்து பிரச்சாரம் செய்து தோற்கடிப்பதும், தேர்தல் இல்லாத காலகட்டங்கள் அனைத்திலும் கார்ப்பரேட்டுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை எதிர்த்து போராடுவதும் தான் இந்த காலக்கட்டத்தின் அவசியமான பணியாகும்.


படிக்க: விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்துசென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி


இதற்கு பொருத்தமான புரட்சிகர, ஜனநாயக சக்திகளை கொண்டு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்டியமைப்பதும், கீழிருந்து வர்க்கமாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து பிரிவு மக்களையும் கொண்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்துகின்ற கடமையை மீண்டும் உணர்த்த வேண்டும்.

நாடு முழுவதும் நவம்பர் 26 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், அதன் தோழமையான விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பேரணி- ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த பெருந்திரள் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் பாசிசத்தை வீழ்த்துகின்ற வரலாற்றுக் கடமையை பாட்டாளி வர்க்கம் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறைகூவி அழைக்கின்றோம்.

தோழமையுடன்

ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here