த்தமும் கண்ணீருமாய்ச் சிதைந்து கிடந்த இலங்கைக்குள் அதானி குறுக்குவழியில் நுழைகிறார் ; மின்நிலையங்களை அமைக்கிறார். காய்ந்த சருகுகளாய் இருந்த மக்களிடம் தீப்பற்றுகிறது ; கொந்தளித்த மக்கள் “அதானியே வெளியே போ!” என்று தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது; தத்துவம், தலைமை உருப்பெறாமல் மக்கள் அலைபாய்ந்து நிற்கிறார்களே என்று இன்னொருபுறம் வருத்தமாகவும் இருந்தது — இன்னமும் இருக்கிறது. ஆனால், இலங்கை ஆளும் வர்க்கங்களின் திட்டப்படி ஆட்சி நடத்தும் அவசர ஏற்பாடுகள் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அதானி .. இலங்கை … மர்மம்

இலங்கை சட்டமியற்றுநர்கள், ” இந்திய ஆட்சிக்காக, மோடிக்குழுவின் நலனுக்காகவே அதானி இலங்கைச் சட்டத்தை வளைத்துவிட்டார் ” என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள். கண்ணுக்குப் புலனாகாத மறைமுகத்
(opaque) துறைமுகம் மற்றும் எரிசக்தித்திட்ட ஒப்பந்தங்களை அதானி கையொப்பமிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு. செய்தி ” பிசினஸ் ஸ்டாண்டார்டி”ல் (நவம்பர் 11, 2022) வெளியானது. சீனா, வடஇலங்கையில் நைனாதீவு என்று அழைக்கப்படும் மூன்று தீவுப் பகுதியில்எரிசக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டிருந்ததை இந்தியா உள்ளேபுகுந்து கலைத்ததும் அண்மையில்தான். அருகே உள்ள பா(ல்)க் நீர் இணைப்பில் சீனத்திட்டம் வந்தால் இந்தியப் பாதுகாப்புக்கே ஆபத்து என்று இந்தியா இலங்கையை எச்சரித்து திட்டத்தை நீக்கும்படி செய்துவிட்டது.

 

இதில் வாதம் எதிர்வாதம் அல்ல முக்கியம். நடந்துள்ள தில்லாலங்கடி வேலைகள் மோடி – அதானிக்கோ, இலங்கை ஆட்சியாளர்களுக்கோ புதிதல்ல ; கண்ணுக்குப் புலனாகாத (opaque) திட்டத்தின் நோக்கமும் அதைவிட அந்தக்
” கண்ணுக்குப் புலனாகாத ” என்ற அம்சமும்தான் . இதில் கண்டு சொல்லவேண்டியதும், இவற்றை யார் மக்கள் அரங்கத்துக்குக் கொண்டு போவார்கள் என்பதும்தான் மிகமிகமுக்கியம்.

சீனாவின் திட்டம் ” சீனப் பட்டுப்பாதை வளையச்சாலைத்
திட்டத்”தின்கீழ் வருவது; துறைமுகங்கள், அதற்குச் செல்லும் சாலைகள், கடன்கள் எல்லாவற்றையுமே ஒரு பொதியாக (package) இலங்கைக்குக் கொடுத்தது ; ஆனால்
மோடி — அதானி குறுக்கீடு சீன எரிசக்தித் திட்டத்தை ரத்து செய்ய வைத்தது ; அதானி சார்பாகப் புதிய “பசுமை ஆற்றலு”க்கான 7000 கோடி டாலர் திட்டம் கையெழுத்திடப்பட்டது.ஆனால், இன்னமும்கூட, மோடி அரசின் சலுகைகள் எதையுமே தான் பெறவில்லை என்று சத்தியம் செய்கிறார் அதானி.

இலங்கை மோசமான பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. ஈவிரக்கம் இல்லாமல் சீனா (போர்த்தந்திர முக்கியத்துவம் உள்ள இப்பிராந்தியத்தில்) ஏற்கெனவே 2018-லேயே ஹம்பன்தோடா திட்டத்தின் மூலம் கணிசமான நிலப்பரப்பை 99 ஆண்டு கட்டுக்குத்தகைக்கு (lease) வளைத்துவிட்டது; சீனா இன்னமும் ஆழக் கால்ஊன்றுவதற்குள் இப்போது இந்தியா குறுக்கிட்டுள்ளது. சுற்றிலும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் கொண்ட நட்புறவோடு சீனா இந்துமாக்கடலில்நுழைந்து தன்னைவளைத்துவிடுமோ என்று பீதியில் உள்ளது இந்தியா. “இதைப் பெரிய அளவு ஆபத்தாகப் பார்க்கிறது இந்தியா” என்கிறார் தெற்காசிய அரசியலை ஆய்வு செய்யும் நாட்டிங்காம்பல்கலைக்கழகப் பேராசிரியர் கேதரீன்.

இதையும் படியுங்கள்: உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை!

 

1948 முதலாகவே இலங்கையோடும் பாகிஸ்தானோடும் பிறகு பங்களாதேஷோடும் இந்தியா “என்ன விதைத்ததோ அதைத்தான் இன்று அறுவடை செய்கிறது. இதுதவிர நேரு ஆட்சிக்காலத்தின் பின்பகுதிக் கட்டத்திலிருந்தே சீனாவோடு திருகல் முறுகல் நிலை. அரசியல் பகை. மேலும், அமெரிக்காவோடு ராணுவ ஒப்பந்தம் மூலம் போர்த்தேரில்பிணைக்கப்பட்டுள்ளதால், இந்தியா சீனாவை எதிர்நிலையில் வைத்தே பார்க்கிறது.

வர்ஜீனியாவைச் சேர்ந்த “எய்டு டேட்டா” இயக்குநரும் கொள்கை வகுப்பாளருமான சமந்தா கஸ்தர் விளக்கத்தின்படி , “சீனத் துறைமுகத்தின் அருகேயே இந்தியா தனக்கும் ஒரு டெர்மினல் இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்டது ….ஆனால், அரசுத்துறை மானியங்களின்மூலம் பீகிங் சீன நிறுவனங்களுக்கு ஏராளமாகத் திட்டநிதிகளைக் கொடுக்கும்போது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடமுடியாமல் கையைப்பிசைந்து நிற்கத்தானே செய்யும் ?” இந்தியா நிதி உதவிக்காக அமெரிக்காவை நோக்கி ஓடும் என்பது சமந்தாவின் ஊகம்.

சீனாவுக்கு எதிராக அதானி காய் நகர்வு

ஆனால், புவியியல் ரீதியாக சீனாவுக்கு எதிர்ப்பாக, முக்கியமான பகுதியில் நுழையும் இந்திய – அதானிக்கு லாபம் எப்போது வரும் என்ற உறுதி இல்லாதபோது, நீண்டகாலம் நீடிக்கக்கூடிய ஆட்டத்தில், உச்சபட்ச இழப்பும் வரலாம் என்ற நிலைமையில் , எப்படியும் வெகுமானம் வரும் என்று துணிந்து சூதாடுகிறார் அதானி. இது ஆசிய அரசியல் பொருளாதாரத்தில் இந்திய குணாம்சம் கொண்ட ஒரு அத்தியாயம். சீன தந்திர நடவடிக்கைகள் “சீன குணாம்சம்” கொண்டது என்று இன்று சொல்லப்படலாம் ; ஆனால் சீனாவின் இன்றைய தேசீயவாதம் கலந்த கொள்கையின் பிரதான நோக்கம் வரும்நாளில் உலக மேலாதிக்கமே; ஆனால், இந்தியா எப்படித் தூண்டப்பட்டாலும் என்ன துள்ளினாலும் இந்த வட்டாரத்தில் ஒரு துணைவல்லரசாக மட்டுமே ஆடமுடியும். எது எப்படி ஆனாலும் சீனா × இந்தியா ஆட்டத்தில் சமந்தா சொல்வது போல சீனா வலுவானது, இந்தியா அமெரிக்கக் கைகளில் ‘சுதந்திரமாக’ ஆடப்படும் சீட்டுதான்.

இடையே சிக்கிக் கொண்டுள்ள இலங்கை மக்கள் இயற்கை அழகோடு இனிஎன்றுமே நிம்மதியாக வாழவேமுடியாது. இனி இந்நாடு உலகச்சந்தை; இலங்கையை நாலு துண்டுகளாக்கி சீனாவோடு இந்தியா மோதிக்கொள்ளும் களம். மறுகாலனியக்கொடுங்கோன்மை எனும் கொப்பறையில் வேகிற பெருந்தீனி.

ஆக, இதனால் உலகுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இலங்கையில் அதானியின் கால்தடம் பதிவது வணிக நோக்கத்துக்காக மட்டுமல்ல. அரசியல் நோக்கத்துக்கானதும்தான்.

இந்திய எல்லை கடந்த பல நாட்டு அரசாங்கங்கள் இன்று தங்களுக்காக உள்கட்டுமானங்களை உருவாக்கும் விண்ணப்பங்களோடு அதானிக்குழுமத்திடம் வந்து வரிசையில் நிற்கிறார்கள்; இவை அமெரிக்க நிர்ப்பந்தம், மிரட்டல்; மோடி ஆட்சி, அரசியலின் உபயம்; களத்தில் நடக்கும் போர்த்தந்திர அணிசேர்க்கை. “சீன அரசாங்கம் சென்றடையாத நாட்டு அரசாங்கங்களோடு இந்திய அரசு கொள்ளும் நெருக்கமான உறவில் அதானி இருக்கிறார், வெற்றியும் பெறுகிறார் ” என்கிறார் ஹோனலூலு தீவில் உள்ள” பசிபிக் பொதுமன்ற ஆய்வுநிறுவனத் “தில் வேலை செய்யும் அகில் ரமேஷ்.

உலகமேடையில் சீனா என்னசெய்கிறது? போர்த்தந்திர முக்கியத்துவமுள்ள நாடுகளில் “சுற்றுவளையச் சுற்றுப்பாதை” யின் (பட்டுப்பாதையின்) உள்கட்டுமானத் திட்டத்தை “சீனக்கனவு” அரசியலோடு கலந்து முன்தள்ளுகிறது; இதன் வரலாற்றை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். சீன டெங் – லியூ வலது கும்பல் அதிகாரத்துக்கு வந்தது, மக்கள் அதிகார வேர் அறுத்து, சீன வல்லரசின் உலகமயத்தை வேகமாகப் பாய்ச்சலெடுக்க வைத்தது. “உலக முழுதும் செல்!” என்று கூவிக்கூவி அழைக்க ஆரம்பித்து அந்தப் பயணம் ஷி – ஜின் பிங் உருவாக்கியுள்ள ” சீனக்கனவு” க்கு வந்துநின்றிருக்கிறது.

அமெரிக்க மேலாதிக்கத்துக்கு உட்பட்ட துணைவல்லரசான இந்தியா தன் நாட்டு ‘தேசங்கடந்த’ கார்ப்பரேட்டுக்களின் மேல்பிரிவைக் குளிப்பாட்டி உசுப்புவதன் மூலம் கார்ப்பரேட் – காவிப் பாசிசக் கொடி அசைத்து அரசியல் நோக்கங்களை முன்தள்ளுகிறது. இதற்கான சாட்சி, சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் நேரடியாக இந்த அரசியலை, சீன எதிர்ப்பை முன்வைத்த அதானியின் பேச்சு. அதானி குரலில் மோடி, மோடியின் குரலில் அதானி. “சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தை (உலகில்) பலர் எதிர்ப்பதால் சீனா மேலும்மேலும் தனிமைப்பட்டுவிட்டது” என்றார் அதானி. அவர் சீனத் திட்டம் என்றுசொன்னது பொருளாதார விமரிசனம் ; தனிமைப்பட்டுவிட்டது என்றது அரசியல் தாக்குதல்.

000

அடுத்த செய்தி, ஒரு ஒட்டுவால் !

“இலங்கையில் அதானியின் கால்தடம் பதிவது வணிக நோக்கத்துக்காக மட்டுமல்ல,அரசியல் நோக்கத்துக்காகவும்தான் ” என்று மேல்உள்ள கட்டுரையின் இடையே எழுதினோம்.

அதேபோல, அதானி NDTV-ஐ வாங்கியிருப்பதும் வெறும் வியாபாரம் மட்டுமே அல்ல என்று தெரியவருகிறது.அதானி தன் வருங்காலக் கனவான “உலக டிஜிட்டல் –தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதன்கீழ் ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்று, குறிப்பாக, “ஊடகச் செறிவு”.

இதையும் படியுங்கள்: ன்டிடிவி ( NDTV ) யை அதானி பறிக்கிறாரா ? ஜெயிக்கப்போவது யாரு ?

இது ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் ஊடக உரிமைகளின் செறிவு என்பதன் ரத்தினச் சுருக்கம்; அதாவது, வெகுஜன ஊடகங்களின் பங்குகளை படிப்படியாகக் குறைத்து சில தனிநபர்கள் அல்லது சில நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு இது. அதானியின் “உலக டிஜிட்டல்” எனும் அவரது ஒற்றைக் கனவுக்கும் பல நோக்கங்கள் உண்டு. எனவே, அதானி NDTV-ஐ வாங்குகிறார் என்பதற்குப் பொருள் அவர் ஊடகத் துறையில் ஏகபோகமாக வளரத் துடிக்கிறார்.

உடனடி முதல்பலன் அதானியின் உலக வர்த்தக விரிவு பற்றியும் மற்றும் அதற்காக அவர் போடும் மூலதனம் எங்கிருந்து வருகிறது என்பதுபற்றியும் வந்து குவியும் ஏராளமான கேள்விகளைச் சந்திப்பதற்கும் தன் எதிர்காலக் கனவுகளைப் பரப்பவும் NDTV சாதகமான கருவியாக இருக்கும்; இரண்டாவது, தனக்கு ஆதரவான ஆளும் மோடி கும்பலின் அரசியலை அன்றாடம் விளக்கி ஆதரித்துப் பொதுக்கருத்தை உருவாக்கவும் மக்கள்முன் செல்லுபடியாக்கவும் வலுவான ஒற்றை மையமாக NDTV அமையும்; மூன்றாவது, உலக அரசியலில் அமெரிக்காவுக்கான ஆதரவும், அதற்கேற்ப அதன் எதிர்த் தரப்புக்களை விமரிசித்துத் தகர்க்கும் மிகப் பெரிய விவாதமேடையை உருவாக்கி மக்களிடம் இறக்கமுடியும்; நான்காவது, பிற்போக்கை,முதலாளித்துவ அராஜகத்தை, பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்தை, அவற்றின் பண்பாட்டுக்கூறுகளை சிறு குப்பிகளின் (capsule) மூலம் மக்களிடம் பரப்பி ஏற்கச்செய்யமுடியும்.

இப்போது அதானிக்கு அவசர வேலை இருக்கிறது — இலங்கையில் அவருக்கு சீனா எதிர்ச் சக்தி; இமாலயச் சவால். அமெரிக்கா, இந்தியா சார்பாக சீன எதிர்ப்பு அரசியல் உட்பட உலகச் செய்திகளை எல்லோருக்கும் முன்னால் கொண்டு சேர்க்கவேண்டும்.

இவ்வளவும் ஒரேகல்லில் அடிக்கப் போகிறார்; NDTV அவருக்குக் கிடைத்துள்ள
சமயசஞ்சீவிச்சரக்கு.

ஆதாரம் :
பிசினஸ் ஸ்டாண்டர்ட், நவ. 11, 2022 ;
www.ndtv.com/ உலகச் செய்திகள் :
செப். முதல் நவ.2022 வரை ;
எகனாமிக்டைம்ஸ், நவ. 2022 ;
தி ஒயர்.இன்

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here